Published:Updated:

பா.ஜ.க-வுடன் மோதல், முதல்வர் வேட்பாளர் சலசலப்பு... அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்த எடப்பாடி!

எடப்பாடி பழனிசாமி
News
எடப்பாடி பழனிசாமி

`அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவித்து, பிரச்னை மேலும் பெரிதாகிவிடக் கூடாது' என நினைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான சில உத்தவுகளைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

``அமைச்சர்கள், பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது இதைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது. பா.ஜ.க குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. கட்சி நிர்வாகிகள் யாரும் சில நாள்களுக்குத் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளக் கூடாது'' எனப் பல அதிரடி உத்தரவுகளை அ.தி.மு.கவினருக்குப் பிறப்பித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஒருபுறம் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் தமிழகத் தலைமையிடமிருந்து அரசுக்கு நெருக்கடிகள் தரும்விதத்தில் தொடர்ச்சியாக அறிக்கைகள் வெளிவர, மறுபுறம் சொந்தக் கட்சியினரே மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து, கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயல்வதால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த 10-ம் தேதி, மதுரை, பரவையில் அரசின் சார்பில் நடைபெற்ற குடிமராமத்துப் பணிகளைத் தொடங்கிவைத்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, தானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. மக்கள் சொன்னார்கள். அதேபோல, `புரட்சித் தலைவி ஜெயலலிதாதான் முதல்வராக வேண்டும்’ என்று மக்கள் வலியுறுத்தினார்கள். இதுதான் அ.தி.மு.க-வின் வரலாறு.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார்களோ அவர்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்” என்று கருத்து தெரிவிக்க, தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது. `அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக இருப்பார்’ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செல்லூர் ராஜூவின் இந்தக் கருத்து அ.தி.மு.கவுக்குள் புகைச்சலைக் கிளம்பியது.

தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு பதிலளிக்கும்விதமாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, `எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு, களத்தைச் சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ``முதல்வரும் துணை முதல்வரும், முதல்வர் பற்றிய பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்றும் கோரிக்கை விடுக்க, செல்லூர் ராஜூ பற்றவைத்த பொறி, தீப்பிழம்பாகச் சுழல ஆரம்பித்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இவ்விருவரின் கருத்துகளைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், `` முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்திருக்கிறோம். அதேபோல 2021 சட்டசபைத் தேர்தலையும் சந்திப்போம். எளிமையின் அடையாளமான முதல்வர்; இது, வலிமையான அரசு என்று நிரூபித்திருக்கிறார். அ.தி.மு.க-வினர் ஒற்றுமையாக இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு உள்ளது. அவர்கள்தான் எங்களுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை’’ என்று தன் பங்குக்கு ஒரு கருத்தைச் சொல்ல, கட்சிக்குள் மேலும் குழப்பம் உண்டானது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஏற்கெனவே பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தமிழக அரசுக்கு நெருக்கடிதரும் வகையில் தொடர்ச்சியாக அறிக்கைகள் கொடுத்துவருகிறார். சில நாள்களுக்கு முன்னர், பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன், ``தி.மு.க கடந்த காலங்களில் செய்த அதே தவற்றைத்தான் அ.தி.மு.க-வும் செய்கிறது. இந்துக்களுக்கு எதிரான செயல்களை திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை. இந்துக்களுக்கு எதிரான கருத்துகளைச் சொல்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், ஈ.பி.எஸ் தலைமையிலான அரசு வரும் தேர்தலில் வெற்றி பெறாது" என்று கோபமாகச் சில கருத்துகளைத் தெரிவித்தது, கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவித்துண்டு அணிவித்த விவகாரத்தில், தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், ``எம்.ஜி.ஆர் பத்திப் பேசுறதுக்கு பி.ஜே.பி-காரருக்கு என்ன தகுதி இருக்கு... ஜாக்கிரதையா இருங்க. அண்ணா தி.மு.க தொண்டர்கள் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டீங்க... ஜாக்கிரதை'' என்று சொல்ல, அ.தி.மு.க- பா.ஜ.கவுக்கு இடையே விரிசல் மேலும் அதிகரித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி,``எங்களுடன் அனுசரித்துச் செல்பவர்களுடன்தான் நாங்கள் கூட்டணி வைப்போம். நேற்று வரை அ.தி.மு.க Vs தி.மு.க என இருந்த நிலை தற்போது மாறியுள்ளது. தமிழகத்தில் இனி பா.ஜ.க Vs தி.மு.க என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க தேசியக் கட்சி என்பதால், தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும்” என்று கருத்து தெரிவிக்க, அது அ.தி.மு.க-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

`கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க-வின் பேருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பது சரியா?’ எனவும் கேள்வி எழுப்பத் தொடங்கினர் அ.தி.மு.கவினர். `இந்த விஷயத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவித்து, பிரச்னை மேலும் பெரிதாகிவிடக் கூடாது’ என நினைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான சில உத்தவுகளைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து நமக்கு தகவல் கிடைத்துள்து. முதல்வர் இப்படிப் பதறிப்போய் உத்தரவுகளைப் பிறப்பிக்க சில காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

தொடர்ச்சியாக பா.ஜ.கவினருக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை அ.தி.மு.க-வினர் தெரிவித்துவருவது குறித்து, பா.ஜ.க டெல்லி தலைமைக்கு சில நாள்களுக்கு முன்னர் தகவல் பறந்திருக்கிறது. உடனடியாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். ``உங்கள் கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். ஒரு கட்சியாக அரசின் செயல்பாடுகளில் சில விஷயங்களைச் சுட்டிக் காட்டுவதும், சில கோரிக்கைகளைவைப்பதும் வழக்கம்தான். கொள்கைரீதியாக சில விஷயங்களைப் பேசுவது யதார்த்தம்தான். அதற்காக, பா.ஜ.க-வினரை உங்கள் நிர்வாகிகள் கடுமையாக விமர்சிப்பது சரியல்ல. அதிலும், `பா.ஜ.க தொண்டர்கள் தெருவில் நடமாட முடியாது’ என்று பேசுவதெல்லாம் சுத்தமாகச் சரியில்லை. உங்கள் கட்சி நிர்வாகிகளிடம் கொஞ்சம் சொல்லி வையுங்கள். நமக்குள் சண்டை வேண்டாம். நாம் ஒற்றுமையாக இருப்பதுதான் இருவருக்குமே நல்லது" எனவும் பேசியிருக்கிறாராம். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர்களிடமும், கட்சியின் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவர்களிடமும் `தடாலடியாக பா.ஜ.க-வுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்காமல் கொஞ்சம் பக்குவமாக நடந்துகொள்ளுங்கள்’ எனக் கட்டளையிட்டிருந்தாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த நேரத்தில் `யார் முதல்வர் வேட்பாளர்...’ என்பது குறித்து அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்தைத் தெரிவிக்க, முதல்வர் மேலும் அப்செட் ஆகியிருக்கிறாராம். அதிலும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ``தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ-க்கள் முதல்வரைத் தேர்வு செய்தால், குதிரைப் பேரம் நடக்க வாய்ப்பிருக்கிறது'' என்று தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்திருப்பது, `சொந்தக் கட்சியினரே பணம் வாங்கிக்கொண்டு முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்’ என்கிற வகையில் இருப்பதாகவும், ` இப்படிப் பேசுவது சரியா...’ எனவும் கோபமாகியிருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி.

உடனடியாக, ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மா.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தொலைபேசியில் அழைத்து, `தேர்தல் குறித்தோ, கூட்டணி குறித்தோ யாரும் பேசக்கூடாது. கூட்டணி குறித்து, பத்திரிகையாளர்கள் கேட்டால், `கூட்டணி பற்றித் தேர்தல் நெருக்கத்தில் முடிவெடுக்கப்படும் என முதல்வர் கூறிய கருத்தே எங்கள் கருத்து’ என்று சொன்னால் மட்டும் போதும். மீறி யாராவது தேவையில்லாத கருத்துகளைத் தெரிவித்தால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக நோட்டீஸ் அனுப்பப்படும். பொறுப்புகள் பறிக்கப்படும்’’ எனக் கடுமையாக எச்சரித்துள்ளாராம்.

ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

குறிப்பாக ராஜேந்திர பாலாஜியிடம், ``இனிமேலும் இப்படி நடந்துகொண்டால், கொடுத்த மாவட்டப் பொறுப்பாளர் பதவி மீண்டும் பறிக்கப்படும்'' எனவும், அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், ``பதவி அனைத்தும் பறிக்கப்படும். பதவி போய்விட்டால் தேர்தலில் சீட் கிடைப்பதும் கஷ்டம்'' எனவும் கடுமையாக எச்சரித்துள்ளாராம். தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்துவரும் அமைச்சர் ஜெயகுமாரிடமும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்துதான் நேற்று பத்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், ``கூட்டணிக் கணக்கெல்லாம் தேர்தல் நேரத்தில்தான் போடப்படும். `பா.ஜ.க தலைமையில்தான் கூட்டணி’ என வி.பி.துரைசாமி கூறியிருப்பதாகச் சொல்கிறீர்கள். அது அவரது கருத்தா அல்லது அவருடைய கட்சியின் கருத்தா என்பதைப் பார்க்க வேண்டும். இப்போதைக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் கருத்துதான் கட்சியின் கருத்து” என பதில் தந்துள்ளார். மேலும், ``கூட்டணி குறித்து எங்கள் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்'' என எச்சரிக்கையோடு பேசினார் என்கிறார்கள். அமைச்சர்களை மட்டுமல்லாமல், செய்தித் தொடர்பாளர்களையும் அழைத்து சில நாள்களுக்குக் கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் உத்தவிடப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே கடந்த இரு நாள்களாக அ.தி.மு.க சார்பாக யாரும் விவாதங்களில் கலந்துகொள்ளவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

ஒருபுறம், அரசுக்கு நெருக்கடி தரும்விதமாக நடந்துகொண்டாலும் `பா.ஜ.க-வினரிடம் கடுமை காட்டக் கூடாது’ என்பது மேலிடத்து உத்தரவு; மறுபுறம், சொந்தக் கட்சிக்குள்ளேயே தேவையற்ற கருத்து மோதல்கள்... இவை அனைத்தையும் சமாளிப்பாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.