Published:Updated:

`நான் நினைத்திருந்தால், திமுக மீது எத்தனையோ வழக்குகளைப் போட்டிருக்க முடியும்!’ - எடப்பாடி பழனிசாமி

``திமுக-வில் ஆளில்லாததால் வாடகைக்கு ஆள்பிடித்து கட்சி நடத்துகிறார்கள். அதிமுக-வைச் சேர்ந்த 8 பேர் திமுக-வில் தற்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள். முன்னாள் அதிமுக-வினர் 15 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்’’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை வழங்கினார். மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ... அப்போதெல்லாம் தேர்தல் அறிக்கை வெளியிடுவது திமுக-வின் பழக்கம். தேர்தலுடன் அந்த அறிவிப்புகள் முடிந்துவிடும். கடைசிவரை நடைமுறைப்படுத்தவே மாட்டார்கள். அரசு செயல்படுவதைப்போல் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் வாயிலாக நாள்தோறும் பொய்யான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். திமுக-வினர் தில்லுமுல்லு செய்வதில் திறமையானவர்கள். கள்ள ஓட்டுப் போடுவதிலும் திறமையானவர்கள். அவர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கடந்தகாலங்களில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பதாகச் சொன்னார்கள். கடைசிவரை நிலத்தைக் கண்ணில் காட்டமாலேயே போய்விட்டார் கருணாநிதி. அதைப்போலத்தான் இப்போது அறிவித்த திட்டங்களும் இருக்கப்போகின்றன. கடந்த நான்கு மாத கால ஆட்சியில் சொல்லும்படியாக ஒரேயொரு பெரிய திட்டம்கூட கொண்டுவரப்படவில்லை. இவர்களின் நோக்கம், அதிமுக-வினர் மீது பொய் வழக்குப் போடுவது, முன்னாள் அமைச்சர்களைப் பணி செய்யவிடாமல் ரெய்டு நடத்தி அச்சுறுத்துவது, அதிமுக-வுக்கு எதிராக அவதூறு செய்வதுதான். மக்களைப் பற்றி சிந்திக்காமல் ஆட்சி செய்கிறார் ஸ்டாலின். நான்கு ஆண்டுகள் இரண்டு மாத காலம் நான் முதலமைச்சராக இருந்தேன். நான் நினைத்திருந்தால், திமுக-வினர் மீது எத்தனையோ வழக்குகளைப் போட்டிருக்க முடியும். நாங்கள் செய்தோமா?

மக்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். திமுக-வினர் பழிவாங்குவதற்காக நேரத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு அச்சம் என்பதே கிடையாது. எங்களுக்கு எஜமானர்கள் மக்கள்தான். தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு. தேர்தல் முடிந்த பின் ஒரு பேச்சு என ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற தி.மு.க தில்லுமுல்லு செய்யும். அதை முறியடித்து அதிமுக-வினர் வெற்றிபெற வேண்டும். திமுக-வில் ஆளில்லாததால் வாடகைக்கு ஆள்பிடித்து கட்சி நடத்துகிறார்கள். அதிமுக-வைச் சேர்ந்த எட்டுப் பேர் தி.மு.க-வில் தற்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள். முன்னாள் அதிமுக-வினர் 15 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதிமுக-வில் சாதாரணத் தொண்டன்கூட உயர்ந்த நிலைக்கு வரமுடியும். திமுக-வில் அப்படியா? அப்பா முதலமைச்சர், மகன் எம்.எல்.ஏ இல்லையென்றால் எம்.பி-யாக இருப்பார். வரவர தி.மு.க தேய்ந்துக்கொண்டே போகிறது. அங்குள்ள எல்லோருக்கும் வயதாகிப் போச்சு. ஒவ்வொருத்தராகப் போய்விட்டார்கள். அதனால்தான் நம்முடைய கட்சியில் உள்ளவர்களை விலைக்கு வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் கருணாநிதியின் மகனாக இருக்கலாம். ஆனால், அவரால் அதிமுக-வின் ஒரு தொண்டனைக்கூட வெல்ல முடியாது. ஏனெனில், இங்குள்ளவர்கள் உழைக்கப் பிறந்தவர்கள். உழைப்பால் உயர்ந்தவர்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வாணியம்பாடியில் இஸ்லாமிய சகோதாரர் கூலிப்படையினரால் கொல்லப்படுகிறார். தினமும் ஒருவர் தலை துண்டித்துக் கொலைச் செய்யப்படுகிறார்கள். போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்துவிட்டது. குட்கா லோடு லோடாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் ஸ்டாலினின் சிறப்பான நிர்வாகம். இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்’’ என்றார் எடப்பாடி பழனிசாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு