Published:Updated:

`எங்களால என்ன முடியும்னு தெரிஞ்சுகிட்டு கேளுங்க..!'- கூட்டணிக் கட்சிகளிடம் கெடுபிடி காட்டிய எடப்பாடி

கன்னியாகுமரி, திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களை பா.ஜ.க கேட்டுள்ளதால், அவற்றில் சிலவற்றை ஒதுக்குவதில் எந்தச் சங்கடமும் இல்லை. ஆனால், கோயம்புத்தூரை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சிப் பதவிகளில் மறைமுகத் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க தலைவர்களோ எந்தவித சலனமும் இல்லாமல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம்...
அ.தி.மு.க. தலைமை அலுவலகம்...

`உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிவிட்டதா அ.தி.மு.க.?' என்ற கேள்வியை மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என வடக்குப் பகுதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இதனால் டெல்டாவிலும் மேற்கிலும் கணிசமான இடங்களை ஒதுக்குமாறு பா.ம.க அழுத்தம் கொடுக்கிறது. மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளை தே.மு.தி.க-வினர் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல... ஸ்டாலினுக்குத்தான்... எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்!

கன்னியாகுமரி, திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களை பா.ஜ.க கேட்டுள்ளதால், அவற்றில் சிலவற்றை ஒதுக்குவதில் எந்தச் சங்கடமும் இல்லை. ஆனால், கோயம்புத்தூரை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என அமைச்சர் வேலுமணி சொல்லிவிட்டார். அ.தி.மு.க வலுவாக உள்ள மேற்கு, தெற்கு மாவட்டங்களைத் தவிர்த்து மற்றவற்றில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். தி.மு.க தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டால், அடுத்த இரண்டொரு நாள்களிலேயே கூட்டணிப் பங்கீட்டை முடித்துவிட்டுக் களமிறங்கிவிடுவோம்” என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை அவர் அரவணைத்ததில்லை. இரண்டு நாள்களுக்கு முன்னர், சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போதுகூட, இதையே மேற்கோள்காட்டிப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `உங்களுக்கு உரிய மரியாதையை செய்ய நாங்க தயாரா இருக்கோம். அதே நேரத்தில எங்களால என்ன தர முடியும்னு தெரிஞ்சுகிட்டு, நீங்க கேட்கிறதுதான் பேச்சுவார்த்தை சுமுகமா முடிய வழிவகுக்கும்' என்று கூறியுள்ளார்.

`ஓடும் பேருந்தில் பெண்ணுக்குத் தாலிகட்டிய இளைஞர்!’ -வாணியம்பாடியை அதிரவைத்த  `ஒருதலைக் காதல்'

உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு தேனி மாவட்டத்தில் சீட் ஒதுக்கீடு செய்வதைக்கூட இழுத்தடிக்குமாறு முதல்வர் தரப்பில் இருந்து காய் நகர்த்தப்படுகிறதாம். `சொந்த மாவட்டத்திலேயே, தன் கட்சி ஆட்களுக்கு சீட் கிடைக்க ஓ.பி.எஸ் முட்டிமோத வேண்டும் என்பதால், மற்ற மாவட்டங்களில் எஞ்சியிருக்கும் தன் ஆதரவாளர்களுக்கு சீட் பெற்றுத் தர அவரால் கவனம் செலுத்த முடியாது' என்ற கணக்குகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி

கடந்த மூன்று வருடங்களில் எடப்பாடியாரின் உடல்மொழி, அதிகாரத் தோரணையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் ஊர்வலம் பிரதிபலித்தது. அமைதி ஊர்வலத்தில் தொண்டர்கள் யாரும் அவரை நெருங்கிவிடாத வண்ணம் 20 அடி சுற்றளவுக்கு போலீஸார் 'டைமண்ட்' வடிவில் பாதுகாப்பு அரணை அமைத்திருந்தனர்.

வழக்கமாக இதுபோன்ற பாதுகாப்பு வளையங்கள் ஜெயலலலிதாவுக்குத்தான் வழங்கப்படும். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிகூட இப்படியொரு பாதுகாப்பை ஏற்றதில்லை. கடந்தாண்டு நினைவுநாள் ஊர்வலத்தில் தொண்டர்கள் எடப்பாடியாரை நெருக்கித் தள்ளியதால் இம்முறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. `உள்ளாட்சியிலும் அவரால் ஜெயலலிதா போன்று வியூகம் அமைக்க முடியுமா?' என்பது விரைவில் தெரிந்துவிடும்.