Published:Updated:

`உங்களை எல்லாம் நம்பி தேர்தலை எதிர்கொள்ள முடியாது!' - 3 அமைச்சர்களிடம் கொதித்த எடப்பாடி பழனிசாமி

`விக்கிரவாண்டியிலும் நாங்குநேரியிலும் நாம் உறுதியாக வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி, வெற்றிபெறாவிட்டால் அம்மா என்ன நடவடிக்கை எடுப்பாரோ, அதே நடவடிக்கையை நான் நிச்சயமாக எடுப்பேன்' எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது அண்ணா தி.மு.க. ` ராமதாஸ் நேரடியாகக் களமிறங்கி பிரசாரம் செய்யவிருப்பதால் விக்கிரவாண்டியில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம். தேர்தல் நிலவரம் தொடர்பாக, அமைச்சர்களுக்குக் கூடுதல் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம்
அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம்

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அண்ணா தி.மு.க-வுக்கு ஓரளவு நம்பிக்கை கொடுத்த தொகுதியாக வேலூர் இருந்தது. அங்கு போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க-வின் கதிர் ஆனந்திடம் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தார். `நூலிழையில் எங்கள் வெற்றி பறிபோய்விட்டது. இது தோல்வி அல்ல' என அ.தி.மு.க நிர்வாகிகள் தங்களைத் தேற்றிக் கொண்டனர். தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைக் கட்சியை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாகப் பார்க்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வரும் 21-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட 3 மாவட்டங்களின் அமைச்சர்களையும் அழைத்து விரிவான எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.

``ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக தோல்வி முகமாகவே இருப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக முத்தமிழ்ச் செல்வன் களமிறங்கியிருக்கிறார். அவருக்காக அமைச்சர்கள் பலரும் மக்களிடம் நேரம் காலமில்லாமல் வாக்கு சேகரித்து வருகின்றனர். முதல்கட்டமாக, வாக்குக்கு 2,000 ரூபாயைத் தந்துவிட்டனர். தி.மு.க தரப்பில் முதல்கட்டமாக 1,500 ரூபாயும் இரண்டாம்கட்டமாக 1,000 ரூபாயும் தர உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சிக்குச் செல்வாக்கு உள்ள தொகுதியாக இருப்பதால், இந்தமுறை எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என நம்புகிறார் முதல்வர்" என விவரித்த அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலர்,

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

`` இடைத்தேர்தல் களநிலவரம் தொடர்பாக முதல்வருக்கு தினம்தோறும் அறிக்கைகள் சென்று கொண்டிருக்கின்றன. அதன்படி, கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்ந்து அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக, விக்கிரவாண்டி தொகுதிக்கு அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலரிடம் விரிவாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, `விக்கிரவாண்டியிலும் நாங்குநேரியிலும் நாம் உறுதியாக வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி, வெற்றி பெறாவிட்டால் அம்மா என்ன நடவடிக்கை எடுப்பாரோ, அதே நடவடிக்கையை நான் நிச்சயமாக எடுப்பேன். இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும். இல்லாவிட்டால், உங்களை எல்லாம் நம்பி இனி தேர்தலை எதிர்கொள்ள முடியாது. இந்தத் தேர்தல் களத்தில் அ.ம.மு.க இல்லை. மக்கள் நீதி மய்யமும் இல்லை.

கரன்சி மழையில் விக்கிரவாண்டி!

அ.ம.மு.க-வில் இருக்கும் தொண்டர்கள், நிச்சயமாக தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி இது. அப்படியும் நாம் தோற்றால், `இனி அவர்களோடு கூட்டணி வேண்டுமா வேண்டாமா' என்ற சூழலை ஏற்படுத்திவிடும். பா.ம.க போன்ற ஒரு கட்சி இருந்தும் நாம் தோற்றுப் போனால், `நம்மால் பலன் இல்லை' எனப் பா.ம.க-வும் நம்மைக் கழட்டிவிட்டுப் போய்விடும். ஒருவேளை இந்தத் தொகுதியில் பா.ம.க நின்றிருந்தால் அவர்கள் பலமாக இருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டிருக்க முடியும். இந்தத் தொகுதியில் பா.ம.க மட்டுமே 54,000 வாக்குகளைக் கடந்தகால தேர்தலில் வாங்கியிருக்கிறது. இதை நமக்கான பிளஸ்ஸாகத்தான் பார்க்க வேண்டும். இப்போதுகூட நாம் வெற்றி பெறவில்லையென்றால், நீங்களே எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளலாம். இந்தத் தேர்தலை பெரிய சவாலாகப் பார்க்கிறார் ஸ்டாலின். நாமும் அதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்' என எச்சரிக்கைத் தொனியில் கூறியிருக்கிறார். இதை அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டனர். நாளை விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்யவிருக்கிறார். இதனால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கூடுதல் உற்சாகம் ஏற்பட்டுள்ளது" என விவரித்தனர்.

ஸ்டாலின் பிரசாரம்
ஸ்டாலின் பிரசாரம்

அதேநேரம், விக்கிரவாண்டி தொகுதியின் வெற்றிக்காகப் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது தி.மு.க. இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் உடன்பிறப்பு ஒருவர், `` இந்தத் தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ ராதாமணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. அவரை சாதி வட்டத்துக்குள் வராத ஒருவராகத்தான் பார்த்தார்கள். தற்போது பொன்முடியின் ஆதரவாளரான புகழேந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். வன்னிய சமூகத்து மக்களிடம் ஆதரவைத் திரட்ட ஜெகத்ரட்சகனும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தீவிரமாக வாக்கு சேகரிக்கின்றனர். பொன்முடி மீது சமூகரீதியான கோபமும் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதனால்தான் எம்.ஆர்.கே தீவிரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வரையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் களத்துக்கு வரவில்லை. `அவர் வந்து பிரசாரம் செய்தால் வரக் கூடிய வாக்குகளும் வந்து சேராமல் போய்விடும்' எனத் தொகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் உறுதியாகக் கூறிவிட்டார். அதேபோல், ஆ.ராசாவும் தேர்தல் களத்துக்கு வரவில்லை" என விவரித்தவர்,

`` மற்ற தொகுதிகளைவிடவும் மிக முக்கியமானதாக விக்கிரவாண்டியைப் பார்க்கிறார் ஸ்டாலின். ஏனென்றால், தி.மு.க-வுக்கு நிரந்தரச் சின்னத்தைப் பெற்றுக் கொடுத்தது இந்தத் தொகுதிதான். இங்கு 1952-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் ஏ.கோவிந்தசாமி. அவர் வென்ற பிறகு 1957 தேர்தலில் உதயசூரியனைச் சின்னமாகப் பெற்றார் அண்ணாதுரை. முதன்முதலில் கட்சிச் சின்னத்தைப் பெற்றுக் கொடுத்த தொகுதி விக்கிரவாண்டி. பாட்டாளி மக்கள் கட்சியெல்லாம் வந்த பிறகு அங்கு நிலவரம் வேறு மாதிரியாகப் போய்விட்டது. இருப்பினும், விக்கிரவாண்டியில் தி.மு.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகப்படியாக இருக்கிறது" என்றார் உறுதியாக.

ஸ்டாலின் பிரசாரம்
ஸ்டாலின் பிரசாரம்

விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 2,23,178 வாக்காளர்களில் சரிபாதி மக்கள் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதையொட்டி, அந்தச் சமூக மக்களுக்கு தி.மு.க செய்த நன்மைகளை வரிசைப்படுத்தினார் ஸ்டாலின். இதற்கு எதிராக ராமதாஸ் அறிக்கை வெளியிட, இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான மோதலாக மாறிப் போனது. தற்போது ராமதாஸே நேரடியாகப் பிரசாரத்தில் களமிறங்குவதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது அண்ணா அறிவாலயம்.