Published:Updated:

`மக்களைத் தேடி மருத்துவம்’: "ஒரு கோடிப் பயனாளர்களின் விவரங்களை முதல்வர் வெளியிட வேண்டும்!" - இபிஎஸ்

இபிஎஸ் - ஸ்டாலின்

`மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் பயனாளர்கள் பயன்பெற்றதற்கான எந்தப் புள்ளிவிவரக் குறிப்பும் அரசிடம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

`மக்களைத் தேடி மருத்துவம்’: "ஒரு கோடிப் பயனாளர்களின் விவரங்களை முதல்வர் வெளியிட வேண்டும்!" - இபிஎஸ்

`மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் பயனாளர்கள் பயன்பெற்றதற்கான எந்தப் புள்ளிவிவரக் குறிப்பும் அரசிடம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
இபிஎஸ் - ஸ்டாலின்

`மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் பயனாளர்கள் பயனடைந்ததாகத் தவறான தகவலை தி.மு.க அரசு தெரிவித்திருப்பதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நின்றால் விளம்பரம், நடந்தால் விளம்பரம், சைக்கிள் ஓட்டினால் விளம்பரம் என்று விளம்பர மோகத்துடன் தமிழக மக்களுக்கு விடியலைத் தருவோம் என்று, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல் வழியே ஆட்சியைப் பிடித்தது இந்த விடியா தி.மு.க அரசு.

மக்களைத் தேடி மருத்துவம்
மக்களைத் தேடி மருத்துவம்

இந்த அரசு ` `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ், அரசு மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று, அவர்களுக்கு மாதம்தோறும் மருந்து, மாத்திரைகள் தரப்படும்’ என இந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது தெரிவித்திருந்தது. மேலும், `அரசு மருத்துவமனையில் தங்கள் உடல்நலக் குறைவுக்கு மருந்து உட்கொள்ள விருப்பப்படுகிற ஒரு கோடிப் பேரைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறோம். இதற்கு ஆறு மாத காலம் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்' என்று 2021-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்கும்போது சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பல குளறுபடிகள் இருக்கின்றன. பெரும்பாலான நோயாளிகளுக்குத் தொடர்ந்து மருந்துகள் வழங்கப்படுவதில்லை என்று கூறுகிறார்கள். குறிப்பாக, திட்டத்தைப் பற்றி, 'முதல் தடவை மட்டும் எங்களைப் பரிசோதித்து மாத்திரை கொடுத்துட்டுப் போனாங்க. முதல் தடவை வந்தபோது, `மாசா மாசம் வீட்டுக்கே வந்து மாத்திரை தந்து பி.பி (BP), சர்க்கரை அளவு (Sugar) செக் பண்ணிட்டுப் போவோம்’ என்று சொன்னார்கள்.

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், அதன் பிறகு இதுவரை ஒருநாள்கூட வந்து பார்க்கல. அருகிலுள்ள தெரிந்தவர்களிடம் காசு கொடுத்து மாத்திரை வாங்கிச் சாப்பிடுகிறோம். போனவங்க வரவே இல்ல. போட்டோ எடுக்க மட்டும் வந்தாங்க. `யாராவது வந்து கேட்டா, அடிக்கடி வர்றாங்கன்னு சொல்லச் சொன்னாங்க' என்று கூறியதையும் அந்தத் திட்டத்திலுள்ள குளறுபடிகளையும், கடந்த 7.8.2022 அன்று நான் வெளியிட்டிருந்த அறிக்கையில் விவரமாக எடுத்துரைத்திருந்தேன். இந்த நிலையில், 29.12.2022 அன்று விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அப்படி ஒரு கோடிப் பேருக்கு மேல் மருத்துவப் பெட்டகங்கள் வழங்கப்பட்டிருந்தால், மருந்துக்காக மட்டும் எவ்வளவு செலவிடப்பட்டிருக்கிறது... என்னென்ன நோய்களுக்கு, எந்த வகையான மருந்துகள் வழங்கப்பட்டிருக்கின்றன... ஒரு கோடிப் பயனாளர்களின் விவரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று விசாரித்தபோது, மாநில மருத்துவத்துறை அதிகாரிகள், உண்மையில் `மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின்கீழ், இதுவரை ஒரு கோடிப் பேருக்கு மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்குக் கொடுத்ததாக எந்தவிதமான புள்ளிவிவரக் குறிப்புகளும் இல்லை என்று தெரிவித்ததாக நாழிதழ்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மேலும், நோயாளிகள் பற்றிய புள்ளிவிவரங்களில், டூப்ளிகேஷன் அதாவது, ஒரே தரவு இரண்டு மூன்று முறை பதிவுசெய்யப்பட்டதால் ஒரு கோடிப் பேருக்கு மேல் பயனடைந்திருக்கின்றனர் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். என்னுடைய தலைமையிலான அம்மா ஆட்சியில் செயல்படுத்திய `வலி நிவாரணம், புனர்வாழ்வு சிகிச்சை’ என்ற திட்டத்தில், ஒரேயொரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி இந்த விடியா அரசு `மக்களைத் தேடி மருத்துவம்' என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டிச் செயல்படுத்திவருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிந்த பிறகும், இப்போதும் முந்தைய ஆட்சியின்மீது குறைகள் சொல்லியே விளம்பர ஆட்சி நடத்திவரும் இந்த விடியா அரசு, `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்காக இதுவரை எவ்வளவு ரூபாய் செலவிட்டிருக்கிறது, ஒரு கோடிப் பயனாளர்களின் முழு விவரங்களையும் இந்த விளம்பர அரசின் முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் வெளியிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, ஓமந்தூரார் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், " `மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதல்வரே மூன்று முறை பயனாளர்களைச் சந்தித்து மருந்துப் பெட்டகங்கள் வழங்கியிருக்கிறார். மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்தத் திட்டம் குறித்து அறிந்து, இது குறித்தான அறிக்கையைப் பெற்று, `இதை இந்தியா முழுவதும் செயல்படுத்த முயல்வதாக’ தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மேலும், `இது சிறந்த திட்டம்’ எனவும் பாராட்டியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்தைத் தொடங்கியபோது, வெளியிட்ட அதே அறிக்கையை மீண்டும் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு அப்போதே அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் பதிலளித்துவிட்டோம்" எனத் தெரிவித்தார்.