திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில், மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுக-வில் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், ``திமுக என்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். அந்த கம்பெனியில் அதிமுகவி-லிருந்து சென்ற எட்டுப் பேர் நிர்வாக இயக்குநர்களாக இருக்கின்றனர். திமுக-வில் உழைக்கிறவர்களுக்கு எப்போதும் மரியாதை கிடையாது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய மகன் உதயநிதிக்கு அமைச்சர் பதவிக்கான பட்டாபிஷேகத்தை விரைவில் நடத்தவிருக்கிறார். தன்னிடம் கணக்கிலுள்ள பணத்தை மாற்றவே உதயநிதி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று எழுதப்படாத விதி இருக்கிறது. இல்லாவிட்டால் திரைப்படம் வெளியிட 20 சதவிகிதம் கமிஷன் கொடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 150 படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாமல் இருக்கின்றன.
அதிமுக ஆட்சிக்காலத்தில் திரைத்துறையில் எந்தவிதத் தலையீடும் இருந்தது இல்லை. தற்போது, திரைத்துறை நசுக்கப்பட்டுவருகிறது. திமுக-வில் காலம் காலமாக உழைத்தவர்களுக்கு அமைச்சரவையில் டம்மி இடம் அளித்துவிட்டு, அதிமுக-விலிருந்து வெளியேறி திமுக-வில் இணைந்தவர்களுக்கு நல்ல துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கான கறவை மாடு, ஆடுகள், கோழிகள் திட்டம், பசுமை வீடு திட்டம், முதியோருக்கான உதவித்தொகை, தாலிக்குத் தங்கம், உழைக்கும் மகளிருக்கான இரு சக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்தத் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்படும். ஏழை மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தைக்கூட திமுக அரசு அரசியலாகப் பார்த்து, அதையும் ரத்துசெய்துவிட்டது.
2017-இல் நடைபெற்ற நீட் தேர்வில் ஒன்பது பேர்தான் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்க அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவித்தது. இதன் மூலம் 564 பேர் மருத்துவம் படித்துவருகின்றனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ. 1,652 கோடியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம், இந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காரணத்துக்காகவே இது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சிக்காலத்தை பேரிடர் என்று கூறுகிறார். அதிமுக ஆட்சிதான் கொரோனா பரவல் மற்றும் கஜா உள்ளிட்ட புயல்கள் பாதிப்பின்போது சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. அதிமுக அரசின் திட்டங்களை கைவிட்டதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனை” என்றார். இந்தக் கூட்டத்தில், முன்னாள் சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.