அமைச்சர்கள் நிலோபர் கபில், வளர்மதி, பாஸ்கரன் ஆகிய மூன்று பேரைத் தூக்கி வீசியிருக்கிறது அ.தி.மு.க தலைமை. தலைமையின் கருணைப் பார்வை இவர்கள் மேல் இல்லாததே முக்கியக் காரணம் என்று கூறப்பட்டாலும், அவர்கள் சார்ந்த மாவட்டங்களில் இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள்!
“எனக்கே சீட் இல்லையா?” - கண்ணீர்விட்ட நிலோபர்
‘இப்படியொரு மந்திரி இருக்கிறாரா?’ என்பதே பலருக்கும் தெரியாது. அப்படியிருந்தும், ஐந்து வருடங்களை அசால்ட்டாகக் கடந்துவிட்டார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில். அமைச்சர் கே.சி.வீரமணியின் உள்ளடி வேலைகளால்தான் சீட் கிடைக்கவில்லை என்று கொதிக்கிறார்கள் நிலோபரின் ஆதரவாளர்கள். வாணியம்பாடி நகர அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர், “நிலோபருக்கும் அமைச்சர் வீரமணிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு இருந்தது. மாவட்டத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில்கூட இருவரும் சேர்ந்து கலந்துகொள்வதைத் தவிர்த்தனர். தனது வாணியம்பாடி தொகுதிக்குள்ளேயே வீரமணியை நுழையவிடாமல் காய்நகர்த்தினார் நிலோபர். இந்தநிலையில்தான் நேரம் பார்த்து, நிலோபரை ஒரேடியாக வீழ்த்தி, தன் விசுவாசியான ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமாருக்கு சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் வீரமணி” என்றார்கள்.

2019 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க-விடம் தோற்றுப்போனார். வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே சுமார் 22,000 வாக்குகளை தி.மு.க கொத்தாக அள்ளியதுதான் சண்முகத்தின் தோல்விக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அப்போதே நிலோபர் மீது விமர்சனங்கள் எழுந்தன. தொகுதி மக்கள் மட்டுமன்றி, கட்சியினரும் அவரை எளிதில் அணுக முடியாதது உள்ளிட்ட புகார்கள் கட்சித் தலைமைக்குச் சென்றதால், எடப்பாடியும் நிலோபர் மீது அதிருப்தியில் இருந்தார் என்கிறார்கள். இந்த நிலையில்தான், தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாததைக் கேள்விப்பட்ட நிலோபர், ‘எனக்கே சீட் இல்லைனு சொல்லிட்டாங்களே... கட்சிக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்’ என்று கண்ணீருடன் புலம்பினாராம்.
காய்நகர்த்திய மருமகன்... கோட்டைவிட்ட வளர்மதி!
2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், பதவியை இழந்த ஜெயலலிதாவின் ரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட வளர்மதி, ஜெயலலிதா பெற்றதைவிட அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். கட்சியில் வளர்மதியின் கிராஃப் கிடுகிடுவென உயர்ந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலிலும் ரங்கம் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்றார். இம்முறை அமைச்சர் பதவியும் அவரைத் தேடிவந்தது. ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு வளர்மதியும், அவரின் கணவர் சீதாராமனும் கட்சியிலும் ஆட்சியிலும் ஓவராகவே விளையாடிவிட்டதாகப் புகார்கள் எழுந்தன.

திருச்சி மாவட்ட அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர், “அரசுத்துறைகளில் டிரான்ஃஸ்பர் முதல் போஸ்ட்டிங் வரை எந்தக் காரியமாக இருந்தாலும் சீதாராமன் மனதுவைத்தால்தான் நடக்கும். அமைச்சரைப் பார்க்கச் சென்றால், முதலில் ‘என் வீட்டுக்காரரைப் பார்த்துட்டீங்களா?’ என்றுதான் கேட்பார். மணல் கொள்ளை, அதிகாரிகளைப் பந்தாடுவது என்று அமைச்சர் குடும்பத்தின் மீது வரிசையாகப் புகார்கள் வந்தன. பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் சமையல்காரர் பணிக்கு அமைச்சர் தரப்பு ஏழு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாகச் சர்ச்சை வெடித்தது.
இது போன்ற குற்றச்சாட்டுகள் அமைச்சர்கள்மீது எழுவது இயல்புதான்... ஆனால், இவர் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ப.குமார், மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளிடமும் மோதல் போக்கையே கடைப் பிடித்துவந்தார். இதனால் வளர்மதிக்கு மாவட்டத்துக்குள்ளேயே பெரும் எதிர்ப்பு உருவானது. இதனால்தான் வளர்மதிக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. வளர்மதிக்கு பதிலாக அதே முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பலிகடா ஆன பாஸ்கரன்!
சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமல்ல... கட்சித் தலைமைக்கும் அமைச்சர் பாஸ்கரன் பெரிதாகப் பரிச்சயம் இல்லை. கடைசி பெஞ்சு மாணவர்போலத்தான் அவர் அமைச்சரவையிலும் இருந்தார். இந்தநிலையில்தான் கட்சித் தலைமை, பாஸ்கரனுக்கு கல்தா கொடுத்திருக்கிறது.
சிவகங்கை நகர அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், “சிவகங்கையில் பாஸ்கரன் போட்டியிட்டால், தோல்வி அடைவார் என்று ஏற்கெனவே உளவுத் துறை நோட் போட்டிருந்தது. கொரோனா சமயத் தில் மற்ற எம்.எல்.ஏ-க்கள் செய்த உதவிகளைக்கூட அமைச்சராக இருந்தும் பாஸ்கரன் சரிவரச் செய்யவில்லை. மணல் கொள்ளை விவகாரத்தில் பாஸ்கரனின் பெயரை அவரின் மகன்கள் கருணா கரன், பாலா ஆகியோர் கெடுத்துவைத்திருந்தனர். ஒருகட்டத்தில் கருணாகரன், தன் தந்தையையே ஒதுங்கச் சொல்லிவிட்டு மாவட்ட அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது கட்சி சீனியர்களையே முகம் சுளிக்கவைத்தது. ஆனால், இந்த விமர்சனங்களையும் மீறி அமைச்சருக்கு சிவகங்கை சீட் ரெடியாகத்தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் காரைக்குடி பா.ஜ.க-வுக்குச் சென்றுவிட்டது. மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனைக் கைவிடக் கூடாது என்பதற்காக பாஸ்கரனை பலிகடா ஆக்கிவிட்டது கட்சித் தலைமை” என்றனர்.

அரசியல் பரமபதம் விளையாட்டில் சர்ரென கீழே இறங்கியிருக்கிறார்கள் அமைச்சர்கள்!