Published:Updated:

சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள்... பின்னணி என்ன? - எடுபடுமா எடப்பாடி கணக்கு?

மணிகண்டன் - ஜக்கையன்
பிரீமியம் ஸ்டோரி
மணிகண்டன் - ஜக்கையன்

ஒருசில எம்.எல்.ஏ-க்களின் சீட் மறுப்புக்குப் பின்னால் சுவாரஸ்யப் பின்னணி இருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.

சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள்... பின்னணி என்ன? - எடுபடுமா எடப்பாடி கணக்கு?

ஒருசில எம்.எல்.ஏ-க்களின் சீட் மறுப்புக்குப் பின்னால் சுவாரஸ்யப் பின்னணி இருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.

Published:Updated:
மணிகண்டன் - ஜக்கையன்
பிரீமியம் ஸ்டோரி
மணிகண்டன் - ஜக்கையன்

அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் 44 பேருக்கு மீண்டும் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடனான மோதல் போக்கு, தொகுதி மக்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு மனநிலை அடிப்படையில்தான் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். ஆனாலும், ஒருசில எம்.எல்.ஏ-க்களின் சீட் மறுப்புக்குப் பின்னால் சுவாரஸ்யப் பின்னணி இருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.

டபுள் கேம் மணிகண்டன்...

மற்ற தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் கிடைக்காததற்கு, அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் உள்ளடி வேலை முக்கியக் காரணமென்றால், ராமநாதபுரம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சீட் கிடைக்காததற்கு முதலமைச்சர் எடப்பாடியே காரணம் என்கிறார்கள். தன் உறவினரான மாவட்டச் செயலாளர் முனியசாமியின் வளர்ச்சிக்கு மணிகண்டன் தடையாக இருப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருதியதால், மணிகண்டனுக்கு எதிராக அவரும் காய்நகர்த்தியதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதிலிருந்து ஒதுங்கியிருந்த மணிகண்டன், சசிகலா விடுதலையானவுடன் அவரை பெங்களூரு வரை சென்று பார்த்ததாகத் தகவல் பரவியது. இதனால் முதல்வர் பழனிசாமி டென்ஷனாகிவிட்டார் என்று கூறப்பட்டது. முதல்வரைச் சமாதானப்படுத்துவதற்காக சென்னையிலேயே டேரா போட்ட மணிகண்டன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்தார். ஆனால், மணிகண்டனின் டபுள் கேமைப் புரிந்துகொண்ட எடப்பாடி, அவருக்கு இம்முறை சீட் அளிக்காமல், தொகுதியை பா.ஜ.க-வுக்குத் தள்ளிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

மணிகண்டன் - ஜக்கையன்  - ஆறுக்குட்டி - ராஜவர்மன்
மணிகண்டன் - ஜக்கையன் - ஆறுக்குட்டி - ராஜவர்மன்

பழிதீர்த்த பன்னீர்!

டி.டி.வி.தினகரன் அணியிலிருந்த ஜக்கையன் அ.தி.மு.க-வுக்குத் திரும்பி வந்தபோது, ‘எனது ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான்’ என்றார். அப்போதிருந்தே துணை முதல்வர் பன்னீருக்கும் ஜக்கையனுக்கும் இடையே பனிப்போர் ஆரம்பித்துவிட்டது. ‘யார் முதல்வர்?’ என்ற பஞ்சாயத்து கட்சியில் எழுந்தபோது, ஜக்கையனின் மகன் பாலமணிமார்பன், ‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடியார்’ என்று போஸ்டர் ஒட்டினார். இதில் மேலும் அதிருப்தியடைந்த பன்னீர், நேரம் பார்த்து ஜக்கையனைக் கழற்றிவிட்டார் என்கிறது தேனி அ.தி.மு.க வட்டாரம். கம்பம் தொகுதியில் கணிசமாக இருக்கும் இஸ்லாமியர்கள் வாக்குகளைக் கவரவே, சையதுகான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதாக வெளியே சொல்லப்பட்டாலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஜக்கையனுக்குமான பனிப்போரின் உச்சமாகத்தான் இதைக் கட்சிக்காரர்கள் பார்க்கிறார்கள்.

ஆறுதல்கூட கிடைக்காத ஆறுக்குட்டி!

2017-ல் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, முதல் ஆளாக அவருக்கு ஆதரவு தெரிவித்தவர் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி. அப்போதே உள்ளூர் அமைச்சரான வேலுமணி, ஆறுக்குட்டி மீது கண் வைத்துவிட்டார் என்கிறார்கள். கோவையில் சீட் மறுக்கப்பட்டுள்ள மூன்று சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் இரண்டு பேர் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் என்பது, பன்னீர் வட்டாரத்தை மேலும் உஷ்ணப்படுத்தியிருக்கிறது. தொகுதிக்குள் ஓரளவுக்கு நல்ல பெயர் இருந்தும் ஆறுக்குட்டிக்கும் மேட்டுப்பாளையம் சின்ராஜுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

ஆவேசமான ராஜேந்திர பாலாஜி... கடுப்பான ராஜவர்மன்!

சாத்தூர் இடைத்தேர்தலின்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவுடன் வெற்றிபெற்ற ராஜவர்மன், அதன் பிறகு அமைச்சருடன் மோதல் போக்கைக் கையாண்டார். தன் ஆதரவாளர்கள் மத்தியில், ‘ராஜவர்மனைச் சுட்டுவிடுவேன்’ என்று அமைச்சர் வசைபாடியதாகவும், சாத்தூரில் நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தில், ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, என்னைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார். வரும் தேர்தலில் அவர் தோற்பது நிச்சயம்’ என்று ராஜவர்மன் பேசியதாகவும் சர்ச்சைகள் வெடித்தன. இருவருக்கும் கடும் மோதல் நீடித்த நிலையில், பன்னீர் மூலம் சீட்டுக்கு முயன்றார் ராஜவர்மன். கடுப்பான ராஜேந்திர பாலாஜி, ‘அவனுக்கு சீட் கொடுத்தா, விருதுநகர்ல அ.தி.மு.க வெற்றிக்கு நான் வேலை செய்ய மாட்டேன்’ என்று முதல்வர் பழனிசாமியிடமே ஆவேசமாகிவிட்டாராம். அதன் பிறகுதான் லிஸ்ட்டிலிருந்து ராஜவர்மனின் பெயர் நீக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். சீட் மறுக்கப்பட்ட ராஜவர்மன், அ.ம.மு.க-வில் இணைந்து சில மணி நேரங்களில் அந்தக் கட்சியின் சாத்தூர் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார். அத்துடன், ‘நான் ஜெயிக்கிறோனோ தோற்கிறோனோ... ராஜபாளையத்துல ராஜேந்திர பாலாஜி ஜெயிக்கக் கூடாது” எனத் தன் ஆதரவாளர்களிடம் சொல்லிவருகிறாராம் ராஜவர்மன்.

வஞ்சம் தீர்த்த எடப்பாடி...

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி செம்மலை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டானபோது, ‘‘எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நீங்கள் தேர்ந்தெடுத்ததால், உங்களுடன் இருக்க விரும்பவில்லை. பன்னீர்செல்வத்திடம் செல்கிறேன்’ என்று சசிகலாவிடமே சொல்லிவிட்டுச் சென்றார். அப்போதிருந்தே செம்மலை மீது பழனிசாமியின் கோபப் பார்வை விழுந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகி என்பதால், செம்மலை மீது நேரடியாகக் கோபத்தை வெளிப்படுத்தாமல் பழனிசாமி தக்க தருணத்துக்காகக் காத்திருந்தாராம். தற்போது அவர் தொகுதியை பா.ம.க-வுக்குக் கொடுத்து தன் ஆத்திரத்தை பழனிசாமி தீர்த்துக்கொண்டார் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். தற்போது செம்மலைக்கு மாநிலங்களவை எம்.பி பதவி தருவதாக பழனிசாமி சமாதானம் செய்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு நிச்சயம் என்பது தெரியவில்லை.

செம்மலை  -  ராஜா - பிரபு - தோப்பு வெங்கடாசலம்
செம்மலை - ராஜா - பிரபு - தோப்பு வெங்கடாசலம்

மைத்துனரால் பறிபோன சீட்

2016 சட்டமன்றத் தேர்தலில், சங்ககிரி தொகுதியில் போட்டியிட ராஜாவுக்கு எடப்பாடி பழனிசாமிதான் சீட் வாங்கிக் கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக ராஜாவுக்கும், எடப்பாடி பழனிசாமியின் மைத்துனரான வெங்கடேஷ் பாலாஜிக்கும் டெண்டர் விவகாரங்களில் முட்டிக்கொண்டது என்று கூறப்படுகிறது. இதனால் கட்சிக் கூட்டங்களுக்குக்கூட அழைக்கப்படாமல் ராஜா புறக்கணிக்கப்பட்டார் என்கிறார்கள். தொகுதியில் ஆக்டிவ்வாகச் செயல்படாதது, எடப்பாடியின் மைத்துனரை அனுசரித்துச் செல்லாதது உள்ளிட்ட காரணங்களால் ராஜாவுக்கு கல்தா கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வேட்டு வைத்த கல்யாணம்

அ.தி.மு.க-விலிருந்து டி.டி.வி.தினகரன் வெளியேற்றப்பட்டபோது, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட எம்.எல்.ஏ-க்களில் கள்ளக்குறிச்சி பிரபுவும் ஒருவர். அந்த எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமானபோதுதான், அவசர அவசரமாக அ.தி.மு.க-வுக்கு தாவி தனது பதவியைக் காப்பாற்றிக்கொண்டார். ஆனாலும், அப்போதே கட்சித் தலைமை பிரபுவை ஓரங்கட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், தன்னைவிட 20 வயது குறைவான பெண்ணை பிரபு காதலித்து, திருமணம் செய்துகொண்டது சர்ச்சையானது. சொந்தக் கட்சி எம்.எல்.ஏ என்ற வகையில் அந்தத் திருமணத்துக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும், திருமணத்தை அவர் ரசிக்கவில்லை என்கிறார்கள். கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அரவணைக்காமல் தனி வழியில் சென்றதும், மாவட்டச் செயலாளரான குமரகுருவை அனுசரித்துச் செல்லாததும், சர்ச்சைகளில் உழன்றதும் பிரபுவின் சீட்டுக்கு வேட்டுவைத்திருக்கிறது.

சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள்... பின்னணி என்ன? - எடுபடுமா எடப்பாடி கணக்கு?

தனி மரமான தோப்பு... அமைச்சர்கள் வைத்த ஆப்பு!

2016 சட்டமன்றத் தேர்தலின்போது ஈரோடு மாவட்டத்தின் ஒரேயோர் அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் பவர்ஃபுல்லாக வலம்வந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016-ல் அ.தி.மு.க வெற்றியடைந்ததும், தோப்புவின் அமைச்சர் பதவி மற்றும் கட்சிப் பதவியைப் பறித்து, கருப்பணனுக்கு அளித்தார் ஜெயலலிதா. இந்தக் கோபத்தை ஜெயலலிதாவிடம் காட்ட முடியாத தோப்பு, எடப்பாடி முதல்வரானதும் அவருக்குக் கொடுத்த குடைச்சல்கள் கொஞ்சநஞ்சமல்ல என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். எடப்பாடியார் வீட்டுக்கே சென்று சட்ட மன்ற அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்தது, தன் கைவசம் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தொடர்பில் இருப்பதாக எடப்பாடியை மிரட்டியது என்று தோப்புவின் செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. மாவட்ட அமைச்சர்கள் செங் கோட்டையன், கருப்பணன் ஆகியோரைக்கூட தன்னுடைய தொகுதிக்குள் விடாமல் தனி ஆவர்த்தனம் செய்தார் தோப்பு. ஆனாலும் கடைசியாக சில மாதங்களில் சீட்டுக்காக தலைமைக் கழக வாசலிலேயே காத்திருந்து தோப்பு வெங்கடாசலம் முட்டி மோதிப் பார்த்தும், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் வைத்த ஆப்பால் சீட் மறுக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism