Published:Updated:

கூவத்தூர் ரிலீஸ்... ஸ்டாலின் சட்டை கிழிப்பு... பன்னீர் பவ்யம்... நான்காம் ஆண்டில் எடப்பாடி ஆட்சி!

எடப்பாடி
எடப்பாடி

கூவத்தூரிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் விடுவிக்கப்பட்டு... ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டு... மைக்குகள் உடைக்கப்பட்டு... சத்த சபை ஆனது சட்டசபை. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி ஜெயித்த தினம் இன்று. அன்றைக்கு என்ன நடந்தது? மூன்றாண்டில் சாதித்தது என்ன? அலசுகிறது கட்டுரை.

* கூவத்தூரில் அடைபட்டுக்கிடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் விடுதலைபெற்ற தினம்.

* எடப்பாடி ஆட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாள்.

* சட்டை கிழிந்தபடியே சட்டசபையிலிருந்து ஸ்டாலின் வெளியான தேதி.

இத்தனையும் அரங்கேறிய தினம் இன்று! அன்றைக்கு என்ன நடந்தது? ஒரு ரீவைண்ட் பார்ப்போம்.

சசிகலா
சசிகலா

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் ஆன ஓ.பன்னீர்செல்வம், ஆட்சி முடியும் வரையில் முதல்வராகத் தொடரலாம் என நினைத்திருந்தபோது, அவருடைய ஆசையில் மண்ணைப் போட்டார் சசிகலா. புதிய முதல்வராக சசிகலாவைத் தேர்வுசெய்ய நடந்த அ.தி.மு.க கூட்டத்தில், சிரித்தபடியே போஸ் கொடுத்து சசிகலாவுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர், அடுத்த 48 மணி நேரத்துக்குள் தடம் மாறினார். 'தர்மயுத்த நாயகன்' ஆனார். 'அம்மாவின் ஆன்மா சொன்னது' என 'ரீல்' விட்டார். ஆனால், ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லித்தான் சமாதிக்குப் போனார் என்பது 'ரியல்' ஆனது.

`அம்மா ஆன்மா' என்பது பொய் ஆடிட்டர் சொன்னதே மெய்! பன்னீர் தர்மயுத்தம் 3-ம் ஆண்டு நினைவு தினம்!

தர்மயுத்த காலத்தில், 'யார் முதல்வர் ஆகலாம்' என்கிற கோதாவில் பன்னீரும் சசிகலாவும் ராஜ்பவனைச் சுற்றிவந்து கொண்டிருந்தார்கள். இந்த இருவருக்கும் முதல்வர் பதவி கிடைக்கவில்லை. எடப்பாடிக்கு அடித்தது ஜாக்பாட். பன்னீரால் போதிய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களைத் திரட்ட முடியவில்லை. சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானது. சசிகலா கட்டுப்பாட்டில் கூவத்தூரில் அடைக்கப்பட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலாவின் சிபாரிசில் எடப்பாடியை முதல்வராகத் தேர்வு செய்தார்கள். உலக வரலாற்றில் முதன்முறையாக ஊர்ந்து சென்று, சசிகலா காலைத் தொட்டு ஆசி வாங்கினார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் அவர், 'அமைதிப்படை' அமாவாசை அவதாரம் எடுத்தது தனிக் கதை.

சசிகலா காலில் விழும் எடப்பாடி
சசிகலா காலில் விழும் எடப்பாடி

எடப்பாடி முதல்வராகப் பதவியேற்ற பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அப்போது பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக, 2017 பிப்ரவரி 18-ம் தேதி சட்டசபை கூடியபோது, போர்க்களமானது. சபாநாயகர் மைக் உடைக்கப்பட்டது. ஸ்டாலின் சட்டை கிழிந்தது. தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றிய பிறகு நடந்த வாக்கெடுப்பில் 122 வாக்குகள் பெற்று, எடப்பாடி அரசு வெற்றி பெற்றது. இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு மூன்றாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இவற்றைவிட, 'முத்திரை பதித்த மூன்றாண்டு... முதலிடமே அதற்குச் சான்று' என்ற தலைப்பில் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்து கொண்டாடிக்கொண்டிருக்கிறது எடப்பாடி ஆட்சி.

மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தினத்தில் என்ன நடந்தது?

15 நாள்களுக்கும் மேலாக கூவத்தூரில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், சிறகை விரித்து சட்டசபைக்கு வந்தார்கள். கூவத்தூரில் அவர்கள் இருந்தபோது 'சட்டமன்ற உறுப்பினரைக் காணவில்லை' என ஒவ்வொரு ஊரிலும் போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் தரப்பட்டன. 11 மணிக்கு அவை தொடங்கியதும், ஓ.பி.எஸ் ஆதரவு அ.தி.மு.க உறுப்பினர் செம்மலை, ‘உரிமை மீறல் பிரச்னை’ ஒன்றைக் கொண்டுவந்தார். ‘‘எனக்குக் கொலை மிரட்டல் விடப்படுகிறது... ஆவடி எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் மீது ஆசிட் ஊற்றுவோம் என்று பகிரங்கமாக மிரட்டுகின்றனர். உறுப்பினர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதை உரிமை மீறல் பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

எடப்பாடி பழனிசாமியை அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழியச் சொன்னார் சபாநாயகர். எடப்பாடியும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து, அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி, அவை பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை கலவரம்
சட்டசபை கலவரம்

12 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போதும் கூச்சல், குழப்பம் ஓயவில்லை. ‘‘ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சிறைக் கைதிகள்போல் அடைத்துவைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், நியாயமாக வாக்களிக்க வகை செய்ய வேண்டும். அவர்கள் தொகுதிக்குச் சென்று மக்கள் கருத்தை அறிந்து வந்த பிறகு, இன்னொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

ஆனால் சபாநாயகர் தனபால் அதை ஏற்கவில்லை. ‘‘அவையில் குழப்பம் ஏற்படுத்தும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றுங்கள்’’ என அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். அவைக் காவலர்கள், தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. அதன்பிறகு, சபையில் கூச்சல், குழப்பம் ஓயவில்லை. அதனால், பிற்பகல் 1 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

எடப்பாடி ஆட்சிக்கு எதிராகக் கொந்தளித்த ஓ.பன்னீர்செல்வம், அன்றைக்கு 'மிஸ்டர் பணிவு' ஆனார். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், கு.க.செல்வம், ஜெ.அன்பழகன், நெல்லிக்குப்பம் புகழேந்தி ஆகியோர் சபாநாயகரைச் சூழ்ந்துகொண்டு மைக்கை பிடுங்கத் தொடங்கினார்கள். பூங்கோதை, திடீர் என மேஜை மீது ஏறி நின்று சவுண்டு விட்டார். சபாநாயகரின் மைக் பிடுங்கப்பட்டதால், அவர் பேசுவது யாருக்கும் கேட்கவில்லை. தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு, கோஷம் போட்டபடியே இருந்தார்கள்.

ஸ்டாலின் சட்டை கிழிப்பு
ஸ்டாலின் சட்டை கிழிப்பு
`திருமாவளவன் ஏன் மௌனம் சாதிக்கிறார்?' -ஆர்.எஸ்.பாரதி கருத்தால் வெடிக்கும் சர்ச்சை

சபையை ஒத்திவைக்கக்கூடாது என்று சபாநாயகரிடம் தி.மு.க உறுப்பினர்கள் சொன்னார்கள். அவர் சட்டையைப் பிடித்து இழுத்தனர். அதனால், சபையை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர் தனபால். இதையடுத்து, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் எழுந்துபோய், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். பிறகு, ப.ரங்கநாதன் போய் அமர்ந்து, போஸ் கொடுத்தார். நெல்லிக்குப்பம் புகழேந்தி, சபாநாயகர் மைக்கை கையில் எடுத்துக்கொண்டு, “ஹலோ மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ... சட்டசபை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என காமெடி செய்தார். சட்டசபையில் நடந்த பிரச்னையில் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. கிழிந்த சட்டையோடு வெளியே வந்து மீடியாவுக்கு போஸ் கொடுத்தார்.

சட்டமன்றத்தின் விதிகளை மீறியது தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றும் அக்கறை இருந்ததால் கள்ள மௌனம் காத்தது அ.தி.மு.க. ஒருவழியாக எதிர்க்கட்சியை வெளியேற்றிவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்கள். எடப்பாடி வென்றார். மிஸ்டர் ஜனநாயகம் தோற்றார்.

கூவத்தூர் ரிலீஸ்... ஸ்டாலின் சட்டை கிழிப்பு... பன்னீர் பவ்யம்... நான்காம் ஆண்டில் எடப்பாடி ஆட்சி!

தனக்கு முதல்வர் வாய்ப்பு கிடைக்காதபோது, எடப்பாடியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. அந்த சசிகலாவுக்கு எதிராகவே பின்னர் திரும்பினார் எடப்பாடி.

கூவத்தூரில் தவழ்ந்து போய் சசிகலா காலில் ஆசி வாங்கிய எடப்பாடி இப்போது இல்லை. கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு 90 டிகிரியில் நிமிர்ந்து நிற்கும் வேறு எடப்பாடி இவர்.

தர்மயுத்தம் நடத்திய பன்னீருக்கு எதிராகச் சீறி, எடப்பாடியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு சிறைக்குப் போனார் சசிகலா. எடப்பாடியோ, பன்னீருக்கு துணை முதல்வர் பட்டாபிஷேகம் கட்டி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நாற்காலியில் அமர வைத்தார். இரட்டை இலையை முடக்கக் காரணமான பன்னீரை கட்சியில் சேர்த்துக்கொண்டார்கள். தினகரனை ஓரம் கட்டினார்கள். ஆட்சியை 'அமோகமாக' நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சசிகலா பரப்பன அக்ரஹாராவில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு