Published:Updated:

டபுள்கேம் எடப்பாடி... பணவேட்டை பழனிசாமி

இங்கு இயற்கை வளங்கள் விற்கப்படும்!

பிரீமியம் ஸ்டோரி
“நீ யாருன்னு எனக்குத் தெரியும்... நான் யாருன்னு உனக்குத் தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்” - பழைய தமிழ் சினிமா ஒன்றின் பிரபல வசனம் இது. இந்த வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ தனது அரசியல் சித்து விளையாட்டுகளால் டபுள்கேம் ஆடும் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே பொருந்துகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு விஷயங்கள் பிரதானமாக நடந்தன. ஒன்று, மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு தொடர்பான பண விவகாரம். இரண்டாவது, வேல் யாத்திரை. ஒருபுறம் டபுள்கேம் ஆடிக்கொண்டே மற்றொருபுறம் பணத்தை அள்ளி முடிக்கவும் ஆரம்பித்துவிட்டார் அவர். இந்தக் காட்சிகளை யெல்லாம் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக் கிறார்கள் அப்பாவி மக்கள்!

பணவேட்டை பழனிசாமி!

துரைக்கண்ணு விவகாரத்தில் தோண்டத் தோண்ட நாறுகிறது எடப்பாடி அரசின் வில்லங்கமான பண விவகாரங்கள். கொரோனா சிகிச்சைக்காக அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதிலிருந்தே, அவரைச் சுற்றி சர்ச்சைகள் கருமேகங்களாகச் சூழ ஆரம்பித்துவிட்டன. ‘செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் அமைச்சர். அவரிடம் கொடுத்திருந்த பல நூறு கோடி ரூபாய் பணத்தைத் தேடுகிறார்கள்’ என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது. அவர் மறைவுக்குப் பிறகு, விவகாரம் இன்னும் சூடானது. அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் ஐந்து பேரைக் கைதுசெய்தது போலீஸ்.

டபுள்கேம் எடப்பாடி... பணவேட்டை பழனிசாமி

இது குறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், “அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமானவரான பெரியவன் முருகன் வீட்டைச் சோதனையிட்ட காவல்துறையினர், சாக்கு மூட்டைகளிலிருந்த 120 கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறார்கள். வழக்கறிஞர் சுரேஷ்குமார் வீட்டிலிருந்தும் 20 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அமைச்சர் துரைக்கண்ணுவிடம் ஆட்சி மேலிடம் கொடுத்திருந்த பணத்தில் 150 கோடி ரூபாய் மீட்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், இது கட்சித் தலைமை, அமைச்சர் தரப்புக்குக் கொடுத்திருந்த பணத்தில் கால்வாசிகூட தேறாது.

தொடர்ந்து, கும்பகோணத்தைச் சுற்றியுள்ள அ.தி.மு.க நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என 50 பேர் போலீஸ் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ரகசியமாக ராஜகிரி வந்து துரைக்கண்ணுவின் மகன் அய்யப்பனைச் சந்தித்திருக்கிறார். ‘முதல்வர் உங்கள்மீது கோபமாக இருக்கிறார். பணத்தைக் கொடுத்துவிட்டால் எல்லா பிரச்னைகளும் முடிந்துவிடும்’ என்று அந்த அமைச்சர் அட்வைஸ் செய்திருக்கிறார்.

பாபநாசத்திலுள்ள மூன்று திருமண மண்டபங்கள், வீரமாங்குடியில் ஒரு மண்டபம், திருமங்கலக்குடியில் 40 ஏக்கர் நிலம், கும்பகோணத்தில் ஆடம்பர வீடுகள், கபிஸ்தலம், புதுப்படையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் துரைக்கண்ணுவின் மருமகன் வாங்கியிருக்கும் 140 ஏக்கர் நிலம் எனப் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பட்டியல் எடுத்திருக்கிறது போலீஸ்” என்றார்கள். இந்த விவகாரத்தை முன்வைத்து, பிற இடங்களில் பதுக்கிவைத்திருக்கும் பண்டல்களைப் பாதுகாப்பது குறித்தும் கட்சித் தலைமை அவசர கோலத்தில் களமிறங்கியிருக்கிறது என்கிறது கட்சி வட்டாரங்கள்.

இந்த இடத்தில் சாமானியன் மனதில் எழும் கேள்வி இதுதான்... அமைச்சர் துரைக்கண்ணு என்பவர் டாப் லிஸ்ட்டிலோ, எடப்பாடியின் குட்புக்கிலோ இருந்தவர் அல்ல. கட்சித் தலைமைக்கு அவர்மீது பெரிய நம்பிக்கையும் இருந்ததில்லை. சொல்லப்போனால் தஞ்சாவூரைத் தாண்டி தமிழக மக்களுக்கு அப்படியோர் அமைச்சர் இருந்தார் என்றே தெரியாது. அவரிடமே இவ்வளவு சொத்துகள் என்றால்... அவரிடமே இவ்வளவு கொடுத்து பதுக்கிவைத்திருந்தார்கள் என்றால்... முக்கிய அமைச்சர்களிடமெல்லாம் எவ்வளவு பதுக்கிவைத்திருக்கும் இந்த ஊழல் அரசு?

இங்கு இயற்கை வளங்கள் விற்கப்படும்!

தனியார் மணல் எடுக்க, தமிழகத்தில் அரசு தடை விதித்திருக்கிறது. பெயருக்குத்தான் தடை. கடை விரிக்காத குறையாக கனிமக்கொள்ளை கனஜோராக நடக்கிறது. மதுரை அருகே முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் சமீபத்தில் நடத்திய பிரமாண்ட திருமண வைபவம் சமூக வலைதளங்களைத் திணறடித்தன. மணல் பிஸினஸில் கொடிகட்டிப் பறப்பவராம் அவர். கனிமக் கொள்ளை குறித்து நம்மிடம் பேசிய கனிமவளத்துறையின் நேர்மையான அதிகாரிகள் சிலர், “மதுரையில் சட்டவிரோதமாக செயல்பட்ட 175 குவாரிகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 977 கோடி ரூபாய். இந்தச் சூழலில், ‘பிரச்னையில் சிக்கியுள்ள குவாரிகளைத் தவிர மற்ற குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும். முடிந்தால், பிரச்னையிலிருக்கும் குவாரிகள் வழக்கை ஒருபக்கம் சந்தித்துக்கொண்டே செயல்படுவதற்கும் அனுமதிக்க வேண்டும்’ என்று குவாரி உரிமையாளர்கள் தரப்பிலிருந்து அரசிடம் பேரம் நடக்கிறது. ‘நீங்கள் கோரிக்கை வைப்பதுபோல் வையுங்கள்... நாங்கள் தடையை நீக்குகிறோம்’ என்று அரசுத் தரப்பு உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்த உத்தரவாதமே தேர்தல் நிதி திரட்டுவதற்காகதான்” என்றார்கள்.

அதிகாரிகள் சொல்வதை உறுதிப்படுத்துவது போல நடந்திருக்கிறது ஒரு சம்பவம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜூலை 19-ம் தேதி 18 குவாரிகளுக்கான 20 வருட டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பர்கூர் வட்டம் பாசிநாயணப்பள்ளி, குட்டூர், மோடிகுப்பம், சூளாமலை, ஐகொந்தம்கொத்தப்பள்ளி, புளிகுண்டா, ஜெகதேவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருக்கும் கிரானைட் கற்களை வெட்டியெடுக்க இந்த அறிவிப்பு வெளியானது. ஆனால் காடு, கோயில், நீர்நிலைகளைச் சூறையாடி இந்த குவாரிகள் அமைக்கப்பட விருப்பதாக கிருஷ்ணகிரி நாடாளு மன்ற உறுப்பினர் செல்லக்குமார் உயர் நீதிமன்றம் சென்றார்.

உஷாரான அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், சம்பந்தப்பட்ட டெண்டரை கேன்சல் செய்தார். ஆத்திரமடைந்த ஆளும்தரப்பு அவரைத் தூக்கியடித்தது. தற்போதைய கலெக்டர் ஜெய சந்திரபானு ரெட்டி, டெண்டரை மீண்டும் அறிவித்திருந்தார். பிரச்னை மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்லவே, ‘யாருக்கும் குவாரியை ஒப்படைக்கக் கூடாது’ என்று குட்டுவைத்திருக்கிறது நீதிமன்றம். இது குறித்து செல்லக்குமார், “டெண்டரின் பின்னணியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த கே.பி.முனுசாமியின் மகனின் நிறுவனமும், சில பினாமிகளும் இருப்பதாகத் தெரிகிறது” என்று குற்றம்சாட்டுகிறார்.

டபுள்கேம் எடப்பாடி... பணவேட்டை பழனிசாமி

டபுள் கேம் எடப்பாடி!

இந்த விவகாரங்களெல்லாம் ஒருபுறமிருக்க... தனது டபுள்கேம் வேலையைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறார் எடப்பாடி. பா.ஜ.க நடத்தும் வேல் யாத்திரைக்கு ஒருபக்கம் தடை விதித்துவிட்டு, மறுபக்கம் யாத்திரையை ஏகபோகமாக நடத்திக்கொள்வதற்கும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருக்கிறார் எடப்பாடி. அதனாலேயே யாத்திரை விஷயத்தில் சம்பிரதாயத்துக்கு சட்டக் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது எடப்பாடியின் ஏவல்துறையான காவல்துறை. யாத்திரை செல்லும் பா.ஜ.க-வினரைக் கைதுசெய்து வரவேற்று, குளுகுளு ஏசி மண்டபத்தில் அறுசுவை உணவளித்து, ராஜ உபசரிப்புடன் தங்கவைக்கிறது எடப்பாடி அரசு. ‘வெட்கமே இல்லாமல், எடப்பாடி யாருக்காக இப்படி நாடகமாடுகிறார்?’ என்று முகம் சுளிக்கிறார்கள் மக்கள். மேலும், ‘தினந்தோறும் லட்சக்கணக்கில் மண்டபத்துக்கு வாடகை, நூற்றுக்கணக்கானவர் களுக்கு விருந்து உபசரிப்பு, போலீஸ் அணிவகுப்பு... இவையெல்லாம் யார் வீட்டுப் பணம்... கடைத் தேங்காயை எடுத்து ‘முருக’னுக்கு உடைப்பது எந்த வகையில் நியாயம்?’ என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.

வேல் யாத்திரை தொடர்பான வழக்கு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டி.ஜி.பி திரிபாதி தரப்பில், ‘யாத்திரையின்போது பா.ஜ.க-வினர் காவல் துறையினரிடம் அத்துமீறி நடந்துகொண்டனர். பா.ஜ.க-வினர் முகக்கவசம் அணியவில்லை. இது கோயில் யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரையே’ என்று குறிப்பிட்டிருந்தார். `இப்படி நீதிமன்றத்தில் ‘பராசக்தி’ படக் கணக்காக வீர வசனம் எழுதி சமர்ப்பிப்பவர்கள், வெளியில் மட்டும் பம்மிப் பதுங்குவது காவல்துறைக்கே அசிங்கமாக இல்லையா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.

இது பற்றியும் நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “ஜனவரி, 2017-ல் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ‘ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. லட்சக்கணக்கானோர் திரண்டு, தமிழ்ப் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கக் களமிறங்கினர். உலமே வியந்த போராட்டத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் தடியடி நடத்தி வன்முறையால் கலைத்தது காவல்துறை. போதாதென்று நடுக்குப்பத்துக்குள் புகுந்து, மீனவர்களின் கடைகளையும் வாகனங்களையும் கொளுத்தி வெறியாட்டம் போட்டது. அதுமட்டுமா... தூத்துக்குடியில் அறவழியில் போராடிய அப்பாவிகள் 13 பேரை வேன் மீது ஏறி நின்று சுட்டுக்கொன்று கலவரத்தைக் கட்டுப்படுத்தியதாக மார்தட்டிக்கொண்டதும் இதே காவல்துறைதான்.

ஆனால், அதே காவல்துறைதான், ‘பா.ஜ.க அத்துமீறுகிறது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்த்தைப் பிடித்துத் தள்ளிவிடுகிறார்கள், முப்பது பேர் வருவோம் என்று சொல்லிவிட்டு முந்நூறு பேர் வருகிறார்கள், என்ன செய்வது’ என்று ‘என்னைக் கிள்ளிட்டான் டீச்சர்’ கதையாகப் புலம்புகிறது. பூ சுற்றலாம்... அதற்காக டி.ஜி.பி திரிபாதி பூக்கூடையே சுற்றக் கூடாது. நாடகமாடுவதில் திரிபாதி எடப்பாடியில் சரிபாதி என்பதை மக்கள் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் இவற்றையெல்லாம் கண்டித்து அறிக்கைவிடுகின்றன. ம்ஹூம்... மாட்டின்மீது மழை பெய்த கணக்காக ‘மல... நல்லா இருக்கியா மல!’ என்று பூச்சாண்டி காட்டுகிறார் எடப்பாடி” என்றார்கள் கொதிப்புடன்.

துரைக்கண்ணு - கே.பாலகிருஷ்ணன் - சசிகலா
துரைக்கண்ணு - கே.பாலகிருஷ்ணன் - சசிகலா

அதே கொதிப்புடன் நம்மிடம் பேசினார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். “வெற்றிவேல் யாத்திரை விவகாரத்தில் நன்றாகவே நடிக்கிறார் எடப்பாடி. `அரசியலுக் காகத்தான் செய்கிறார்கள்’ என நீதிமன்றத்தில் டி.ஜி.பி தெரிவித்தி ருக்கிறார். கோர்ட்டில் அப்படித் தெரிவித்தாலும், தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை உருவாக்கும் வகையில் விஷமத்தனமாக நடத்தப்படும் இந்த யாத்திரையைத் தடுக்கும் நோக்கம் இந்த அரசுக்கு இல்லை. நாங்கள் எட்டுவழிச் சாலையை எதிர்த்துப் போராடச் சென்றோம். எங்களைக் கைதுசெய்து மண்டபத்தில் வைத்திருந்துவிட்டு, மாலையில் விட்டுவிட்டார்கள். மறுநாள் மீண்டும் போராடச் சென்றபோது, இரண்டு நாள் எங்களை மண்டபத்திலேயே அடைத்துவைத்து விட்டார்கள். மூன்றாவது நாள் போராடச் சென்றபோது, கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டார்கள். இதே நடவடிக்கையை பா.ஜ.க-வினர்மீதும் எடுக்க வேண்டியதுதானே...

விளைநிலங்களில் உயர் மின்அழுத்த கோபுரங்களை அமைப்பதை எதிர்த்து போராடச் சென்றவர்களை ரிமாண்ட் செய்கிறார்கள். விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிப்பதற்கு எதிராகப் போராடினாலும் கைதுசெய்து சிறையில் தள்ளுகிறார்கள். திருப்பூரில் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய பெண்ணை ஓங்கி அறைவிட்டது இதே எடப்பாடியின் காவல் அதிகாரிதான். ஆனால், பா.ஜ.க நிர்வாகிகளை மட்டும் கைதுசெய்ய மாட்டார்களாம். வேல் யாத்திரைக்கு எதிராக யாராவது நீதிமன்றத்துக்குச் சென்றாலும், `நாங்கள் கைது செய்திருக்கிறோம்’ என்று பதில் சொல்வதற்கான ஏற்பாட்டைத்தான் இந்த அரசு செய்கிறது” என்றார்.

ஆனால், பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியோ, “தமிழ்நாடு முழுவதும் பல கட்சிகளும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்துகின்றன. தமிழக முதல்வரும் தினந்தோறும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அப்போதெல்லாம் எழாத கேள்வி, நாங்கள் வேல் யாத்திரை நடத்தும்போதுதான் எழுகிறதா?” என்கிறார்.

இவையெல்லாம் ஒருபக்கம் அரங்கேற... இன்னொரு பக்கம் பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்கு எடப்பாடி பம்முவதேகூட, சசிகலா விவகாரம் தொடர்பாகப் போடப்பட்ட டீல்தான் என்கிறார்கள் இந்த உள்விவகாரங்களை நன்கறிந்த சிலர். அவர்கள் நம்மிடம், “சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கிறது எடப்பாடி தரப்பு. காரணம், சமீபத்தில் வந்த தகவல்தான். ‘சிறையில் சசிகலா துவண்டுவிட்டார். கண்களி லிருந்து நிற்காமல் நீர் வழிகிறது. வெளியே வந்தாலும் அவரால் செயல்பட முடியாது’ என்றுதான் இத்தனை நாள்கள் தகவல் கூறிவந்தார்கள். இதைக் கேட்டு சற்றே தெம்பாக இருந்தது எடப்பாடி தரப்பு. ஆனால், ‘விரத நாள்களைத் தவிர்த்து சசிகலா ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்கிறார். கண் பிரச்னை சரியாகிவிட்டது. உடற்பயிற்சிகள் செய்கிறார். சிறையில் அவர் திடகாத்திரமாகவே வலம்வருகிறார்’ என்கிற தகவல் ஆளும்தரப்பை எட்டியிருக்கிறது.

சசிகலா வெளியே வந்தால், தனக்கு ஆபத்தாகிவிடும் என்று கருதுகிறார் எடப்பாடி. அதற்காகவே தேர்தல் முடியும் வரை சசிகலாவை சிறைக்குள்ளேயே முடக்கும் டீல்களை பா.ஜ.க மூலம் ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை சசிகலா விடுதலையானாலும் அவரது தொழில் மற்றும் சொத்துகளுக்கு எந்தவிதமான பிரச்னைகளும் இருக்கக் கூடாது என்றால், அவர் அரசியல் பேசக் கூடாது என்றும் கண்டிஷனாம்” என்றார்கள்.

ஒருபக்கம் வேல் யாத்திரையில் வெட்கமே இல்லாமல் நாடகமாடுகிறார் எடப்பாடி. இன்னொரு பக்கம் ஊரெல்லாம் பதுக்கி வைத்திருக்கும் ஊழல் பணத்தை வேட்டையாடு கிறார்கள். இவர்களது பணவேட்டைக்காக அத்தனை இயற்கை வளங்களையும் அடகுவைக்கத் துணிந்துவிட்டார்கள். இறுதியாக... மேசைக்குக் கீழே தவழ்ந்து, உருண்டு வந்து அரியணையில் ஏறி, பிறகு அரியணையேற்றியவருக்கே துரோகம் இழைத்துவிட்டு, இப்போது அவர் வெளியே வரும் சூழலில் அதற்கும் டீல் பேசுகிறார்கள். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தயவுசெய்து இதையெல்லாம் அரசியல் என்றோ, அரசியல் சாணக்கியத்தனம் என்றோ சொல்லிவிடாதீர்கள்... வெட்கம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு