மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்திருக்கும் நிலையில், திண்டிவனம் அருகே சரவணன் என்பவரும் சாராயம் குடித்து உயிரிழந்திருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (முண்டியம்பாக்கம்) சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசாங்கத்தில், கடந்த இரண்டாண்டுக்காலமாக எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. இன்றைக்கு கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதற்குக் காரணம், தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே இந்தக் கள்ளச்சாராய விற்பனையிலும், போலி மதுபான விற்பனையிலும் ஈடுபடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில், அரசியல் பின்புலமுள்ள ஒருவர் தொடர்ந்து இந்தக் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இதையெல்லாம் இந்த அரசு கட்டுப்படுத்தத் தவறியதால்தான், இன்றைய தினம் 18 உயிர்களை இழந்திருக்கிறோம். செங்கல்பட்டு மாவட்ட கள்ளச்சாராய விவகாரத்தில், அங்கு போலி மதுபானம் விற்பனை செய்தவர், தி.மு.க-வைச் சேர்ந்த சித்தாமூர் ஒன்றிய கவுன்சிலரின் சகோதரர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், எக்கியார்குப்பத்தில் இந்தக் கள்ளச்சாராயத்தால் 13 பேர் இறந்திருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சி இருந்தபோது, கள்ளச்சாராயத்தைக் கண்காணித்து தடுக்க குழு அமைக்கப்பட்டது. கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்களைப் பிடித்து குண்டர் சட்டத்தில் நாங்கள் அடைத்தோம். இந்த இரண்டாண்டு தி.மு.க ஆட்சிக் காலத்திலே, கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி இருக்கிறார்கள். போலி மதுபான விற்பனையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். கள்ளச்சாராயம், போலி மதுபானம் தொடர்பாக, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 1,600 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், இந்தக் கள்ளச்சாராய விற்பனையும், போலி மதுபான விற்பனையும் அரசுக்கும், காவல்துறைக்கும் முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் இரண்டே நாள்களில் 1,600 பேரைக் கைதுசெய்திருக்கின்றனர்.
எனவே, இதற்கெல்லாம் ஸ்டாலின் அவர்கள் முழு பொறுப்பேற்று, முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு திறமையில்லா முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர், நாட்டு மக்கள்மீது அக்கறையே இல்லாத முதலமைச்சர். இன்று நாடே கொந்தளித்திருக்கிறது. திண்டிவனம் அருகே இறையனூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி, இன்று ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 'தன்னுடைய கணவர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துவிட்டார்' என வேலூரில் ஒரு பெண் புகாரளித்திருக்கிறார். இப்படி தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய வியாபாரம் தடையில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்கும்போது, தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்கள். ஆனால், இன்று சாராய ஆறுதான் தமிழ்நாடு முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தத் துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களால் போலி மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு டி.ஜி.பி அவர்கள் 2.O என அறிவித்தார். பின்னர் 3.O என்றும் இப்போது 4.O என்றும் அறிவித்திருக்கிறார். அது, இப்படி அறிவிப்பதோடு நின்று போய்விடுகிறது. பெரும்பாலானோர் ஆளுங்கட்சியின் பலத்தோடு இது போன்ற போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்ற காரணத்தினால்தான், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசாங்கமே மதுபானத்தை அருந்துவதற்கு ஆதரவு கொடுக்கிறது. திருமண மண்டபங்களில், விளையாட்டு மைதானங்களில் சாராயத்தை விற்றுக்கொள்ளலாம். ஆக, அரசாங்கமே மது விற்பனையை ஊக்கப்படுத்துகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஒரு மதுபான பாட்டிலுக்கு 10% கமிஷன் வாங்குவதாகச் சொல்கிறார்கள். இப்படியெல்லாம் ஊழல் செய்த காரணத்தினால்தான், '30 கோடி ரூபாயை என்ன செய்வதென்றே தெரியவில்லை' என நிதி அமைச்சராக இருந்த தியாகராஜன் அவர்களே ஆடியோ மூலமாகத் தெரிவித்திருக்கிறார். இன்றைக்கு இவ்வளவு உயிர் பறிபோய் இருக்கிறது. இதற்கு எந்த சமூகப் போராளியும் குரல் கொடுக்கவில்லை. எந்த நடிகரும் குரல் கொடுக்கவில்லை. ஏன் தி.மு.க கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள்கூட வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதற்கான தீர்ப்பு இன்று வந்திருக்கிறது. அ.தி.மு.க-வின் மீது விமர்சனம் ஏற்பட்டால், நாங்கள் உரிய பதிலைக் கொடுப்போம். இன்று ஆளுகின்ற கட்சிக்கு அந்தத் தெம்பும், திராணியும் கிடையாது" என்றார் காட்டமாக.