அலசல்
Published:Updated:

எதிர்க்கட்சி தலைவராக இரண்டு ஆண்டுகள்... என்ன செய்தார் எடப்பாடி?

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை எனப் பேசியவர் அண்ணாதுரை. அப்பேற்பட்டவரின் பெயரையும் திராவிடத்தையும் தாங்கி நிற்கும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி, ஆளுநரைக் கண்டித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்?

‘முதல்வராக இருந்தபோது, ஆட்சி அதிகாரத்தின் மூலம் தன்னை ஆளுமையாகக் காட்டிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக பரிதாபமாகத் தோற்றிருக்கிறார். கடந்த இரண்டாண்டுகளில் தி.மு.க அரசு செய்த தவறுகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் கோட்டை விட்டுவிட்டார்’ என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

எடப்பாடியும், 62 எம்.எல்.ஏ-க்களும்!

“கடந்த 50 ஆண்டுக்காலமாக இரு திராவிடக் கட்சிகளையே மையப்படுத்தியிருந்த தமிழக அரசியல் வரலாறு, தி.மு.க Vs பா.ஜ.க என்றும், இன்னும் சொல்லப் போனால் தி.மு.க Vs ஆளுநர் என்றும் மாறிப்போனது எடப்பாடி பழனிசாமி காலத்தில்தான். தி.மு.க-வுக்கு எதிராக அவர் ஆளுமையுடன் அரசியல் செய்யாததால்தான், அவர் இடத்தை பா.ஜ.க அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் எடுத்துக்கொண்டு விட்டார்கள்” என்று காட்டமாக ஆரம்பித்தார் திராவிட இயக்க ஆதரவாளர் ஒருவர்.

மேலும் அவர் கூறுகையில், “1996 தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியடைந்தது. பர்கூரில் ஜெயலலிதாவே தோற்றுப்போனார். வெறும் நான்கு இடங்களில் மட்டுமே அ.தி.மு.க வென்றிருந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற முடியாமல் போனாலும் கருணாநிதி அரசுக்கு எதிராக அறிக்கைப் போர் தொடுத்தபடியிருந்தார் ஜெயலலிதா. ஆனால், இப்போது எடப்பாடியுடன் சேர்த்து அ.தி.மு.க-வுக்கு 62 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதில் காட்டிய ஆர்வத்தில் 10-ல் ஒரு பங்குகூட எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவதில் காட்டவில்லை அவர்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

செத்துப்போனதா திராவிடம்?

“கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஆளுநர் புரோஹித், `ஆய்வு’ என்ற பெயரில் அத்துமீறியபோது, எதிர்க்கட்சியான தி.மு.க தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து அவரை முடக்கியது. தி.மு.க ஆட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பல சட்ட மசோதாக்களை முடக்கியதுடன், தமிழ் மக்களின் உணர்வுக்கு எதிராகத் தொடர்ந்து பேசுகிறார். ஆனால், அது குறித்து எடப்பாடி பேசவேயில்லை. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருப்பதால், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதா என்ன?” என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், “மற்றதை விடுங்கள். ‘திராவிடம் செத்துப்போன ஒன்று’ என ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் அண்ணாதுரை... நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை எனப் பேசியவர் அண்ணாதுரை. அப்பேற்பட்டவரின் பெயரையும் திராவிடத்தையும் தாங்கி நிற்கும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி, ஆளுநரைக் கண்டித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்?

ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்தபோதுகூட திறம்படச் செயல்படாதவர் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக பல்வீர் சிங் பல் பிடுங்கிய விவகாரத்தில்கூட, அரசாங்கம்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தாமாக முன்வந்து சரிசெய்ததே தவிர, அ.தி.மு.க எதிர்க்கட்சியாக என்ன செய்தது... மாறாக, அம்பாசமுத்திரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, பல்வீர் சிங்கை பாராட்டியல்லவா பேசினார்... எடப்பாடிக்குச் சொந்த புத்தி இல்லாவிட்டாலும், கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சாத்தான்குளம் சம்பவத்தையும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும் அப்போதைய எதிர்க்கட்சி எப்படிக் கையாண்டது என்பதை கவனத்தில்கொண்டாவது செயல்பட்டிருக்க வேண்டாமா... ஒரு மனுஷன்... அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் இது போன்ற உச்சகட்ட மனித உரிமை மீறல் நிகழும்போதும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார் கனகராஜ்.

மடியில் கனம்... பேசுவதற்கு பயம்..!

“தி.மு.க-வை எதிர்க்க எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க சீனியர்கள் பயப்படுவதற்குக் காரணம் மடியில் இருக்கும் கனம்தான்” என்கிறார் அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன். “எப்போதெல்லாம் அ.தி.மு.க-வினர் அரசை விமர்சிக்க வாயெடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் ரெய்டு, ஊழல் வழக்கு போன்ற ஆயுதங்களைக் கையில் எடுக்கிறது தி.மு.க அரசு. அடுத்த கணமே வாயில்லாப் பூச்சியாகிவிடுகிறார்கள் அ.தி.மு.க-வினர். சட்டசபையில்கூட, ‘கொடநாடு வழக்கு’ என்று ஸ்டாலின் பேசியதும் விறுவிறுவென வெளிநடப்பு செய்துவிட்டார் எடப்பாடி. சொல்லாமல் கொள்ளாமல் அவர் வெளியேறியதால், அவர் எதற்காக வெளிநடப்பு செய்கிறார் என்பதே தெரியாமல் மற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் ஒருவர் பின் ஒருவராக அவையைவிட்டு வெளியேறினார்கள். இதேபோல எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்னைக்காக மட்டும் எட்டு முறைக்கு மேல் வெளிநடப்பு செய்தது அ.தி.மு.க.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் 16 பேர் இன்று எதிர்க்கட்சி வரிசையில் எம்.எல்.ஏ-க்களாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால், பல துறைகளிலும் தி.மு.க அரசு செய்யும் தவறுகளையும், முறைகேடுகளையும் புட்டுப் புட்டு வைக்க முடியும். ஆனால், தலைமை எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பதுபோல, இவர்கள் எதையுமே பேசுவதில்லை. உதாரணமாக, அமைச்சர் உதயநிதியின் விளையாட்டுத்துறையில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. அவை குறித்தெல்லாம் பேசாமல், முன்னாள் அமைச்சர் வேலுமணி இலவச ஐபிஎல் டிக்கெட் கேட்கிறார். ‘நினைத்தால் ஸ்டேடியத்தையே விலைக்கு வாங்குமளவுக்குப் பணம் வைத்திருப்பவர், ஓசி டிக்கெட் கேட்கிறாரே?’ என்று மக்கள் கேலி செய்கிறார்கள்” என்கிறார் ஜெகதீஸ்வரன்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எல்லாவற்றுக்கும் காரணம் ஓ.பி.எஸ்-தான்!

“எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி திறம்படச் செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்கு ஓ.பி.எஸ் கொடுத்த குடைச்சலும், டெல்லியிலிருந்து பா.ஜ.க அவருக்குக் கொடுத்த நெருக்கடியும் ஒரு காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது” என்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர். இது குறித்து நம்மிடம் பேசிய அவர், “2021-ம் ஆண்டு, மே 7-ம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற நேரத்தில், ‘எதிர்க்கட்சித் தலைவர் யார்?’ என்று எம்.ஜி.ஆர் மாளிகையில் கூடியிருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் கடும் விவாதமே நடைபெற்றது. சுமார் ஒரு வார கால போருக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். பதவிக்காக எவ்வளவு துடியாக வேலை பார்ப்பார் எடப்பாடி என்று ஒட்டுமொத்த தமிழகமும் அப்போது பார்த்தது. ஆரம்பத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்புக் குளறுபடி, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அம்மா உணவகம், அம்மா கிளினிக் முடக்கம் தொடர்பாக தி.மு.க அரசுக்கு எதிராகப் போராடிய அ.தி.மு.க., தொடர்ந்து அதை முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது வெறுமனே தேசியக்கொடியுடன் கூடிய காரும், பசுமைவழிச் சாலையில் பங்களாவுக்குமானதுதான் என நினைத்துக்கொண்டார்போல எடப்பாடி. அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயத்திலும் ஓ.பி.எஸ் தொல்லை கொடுத்ததால், அவரை ஓரங்கட்டிவிட்டு அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாகத் துடித்தார். இப்படிப் பதவியைப் பெறுவதிலும், அதைத் தக்க வைப்பதிலுமே அவரது காலம் முடிந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை” என்றார்.

“ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்க்கும் கருணாநிதியின் பேனா சிலைக்கு, அ.தி.மு.க ஆதரவு கொடுத்ததே... அப்போதே அ.தி.மு.க-வின் தி.மு.க எதிர்ப்பு மழுங்கிவிட்டது” என்று பேசத் தொடங்கினார் அ.தி.மு.க சீனியர் எம்.எல்.ஏ ஒருவர். “12 மணி நேர வேலை மசோதா, நில ஒருங்கிணைப்பு மசோதா, திருமண மண்டபத்தில் மது விருந்து, பி.டி.ஆர் ஆடியோ என்று அரசியல் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் கோட்டைவிட்டுவிட்டார் பழனிசாமி. இரண்டு ஆண்டுக்கால தி.மு.க ஆட்சிமீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்வதற்கு, களத்தில் இறங்க வேண்டும். அம்மா கடைசி ஆறு மாதங்களில் மட்டும் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து ஆட்சியையே மாற்றவில்லையா... என்று எடப்பாடியும் வேலை எதுவும் செய்யாமல் ஏ.சி ரூமில் இருப்பது அரசியல் தற்கொலைக்குச் சமம்” என்றார் ஆற்றாமையுடன்.

கனகராஜ், ஜெகதீஸ்வரன், ஆர்.பி.உதயகுமார், தராசு ஷ்யாம்
கனகராஜ், ஜெகதீஸ்வரன், ஆர்.பி.உதயகுமார், தராசு ஷ்யாம்

தேர்தலில் எதிரொலிக்கும்!

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, “தி.மு.க அரசு மிருக பலத்தோடு இருந்தாலும், அவர்கள் மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். எங்கள் போராட்டத்தால்தான் கட்டண உயர்வு ஓரளவுக்காவது குறைக்கப்பட்டது. அதேபோல, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்குவதற்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டதால்தான், ஆளும் தரப்பின் பண மழையைத் தாண்டி, ஈரோடு கிழக்கில் 43,000 வாக்குகளைப் பெற்றோம்” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் நம்மிடம் பேசுகையில், “கடந்தகாலங்களில், `உங்களுக்கு யார் எதிரி?’ என்று அ.தி.மு.க-வினரிடம் கேட்டால், சற்றும் யோசிக்காமல், `தி.மு.க-தான்’ என்பார்கள். ஆனால், இப்போது எடப்பாடி தரப்புக்கு பன்னீரும், பன்னீர் தரப்புக்கு எடப்பாடியும்தான் எதிரி என்று சொல்கிறார்கள். ஒரு நல்ல எதிர்க்கட்சி மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றாற்போலச் செயல்பட வேண்டும். அவர்களின் நலனுக்காகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளை எதிர்த்தால், தேவையில்லாத ரெய்டுகள் வருமென்று அ.தி.மு.க மூத்த தலைவர்கள் பலர் உதட்டளவில் மட்டுமே ஆளுங்கட்சிகளை எதிர்க்கிறார்கள். இது அ.தி.மு.க-வை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும்” என்றார்.

‘ஆளும் தி.மு.க அரசுமீது எவ்வளவு விமர்சனங்கள் இருக்கின்றனவோ... அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க-மீதும் விமர்சனங்கள் இருக்கின்றன. இப்படியே போனால், எதிர்க்கட்சி அந்தஸ்தை அ.தி.மு.க வேறு கட்சிகளிடம் இழக்க நேரிடும்’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!