Published:Updated:

``ஒரு தடவை சார்ஜ் பண்ணா சேலத்துக்குப் போய்விடலாம்!'' - எடப்பாடியாரை அசத்திய டெஸ்லா கார்கள்!

ந.பொன்குமரகுருபரன்

“ஏம்பா இதுல புகையே வராதாமே…” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆச்சர்யத்துடன் கேட்க, "எலெக்ட்ரிக் கார்ல நச்சுப்புகை வெளியேற்றம் ரொம்பக் குறைவு” என டெஸ்லா அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

Edappadi Palaniswami with Tesla Car
Edappadi Palaniswami with Tesla Car

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் 2,300 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழகக் குழு, எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் ‘டெஸ்லா’ நிறுவனத்தைச் சுற்றிப் பார்த்தது.

Investors' Meet held at San Jose
Investors' Meet held at San Jose

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழகக் குழு, கடந்த செப்டம்பர்1-ம் தேதி முதல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில், 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 2,780 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, சான்பிரான்ஸிஸ்கோவுக்குச் சென்ற முதல்வர் குழு, சான் ஜோஸ் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டது.

நேற்று, செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற்ற இச்சந்திப்பில், 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்மூலம் 2,300 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சான் ஜோஸ் நகரில் செயல்படும், ‘ப்ளூம் எனர்ஜி’ நிறுவனம், திடவ எரிபொருளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் உயரிய தொழில்நுட்பத்தை, இ-பே, அமேசான், கூகுள் நிறுவனங்களுக்கு வழங்கிவருகிறது. தமிழரான ஶ்ரீதரின் தலைமையில் செயல்படும் இந்நிறுவனம், 2018-ம் ஆண்டில் 742 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாய்யாக ஈட்டியுள்ளது.

‘கண்டிப்பா எங்க வீட்டுக்குச் சாப்பிட வாங்க’ எனத் தமிழ்ப் பெண் ஒருவர் அழைக்க, அமைச்சர்கள் குழு ஆச்சர்யத்தில் மூழ்கிவிட்டதாம்.
Edappadi Palaniswami with Bloom Energy Team
Edappadi Palaniswami with Bloom Energy Team
Edappadi Palaniswami
Edappadi Palaniswami

இந்நிறுவனத்தைச் சுற்றிப் பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ப்ளூம் எனர்ஜி’ தொழில்நுட்பத்தைத் தமிழகத்திலும் செயல்படுத்திட ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்கத் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதை ஶ்ரீதரிடம் தெரிவித்த எடப்பாடி, “நம்ம ஊருலயும் வந்து தொழில ஆரம்பிங்க. இந்த மாதிரி தொழில்நுட்பத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கு. உங்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் நான் செஞ்சு தர்றேன்” என்று அழைப்புவிடுத்துள்ளார்.

அடுத்ததாக, அமேசான் நிறுவனத்தின் விநியோகப் பிரிவுக்குச் சென்ற முதல்வரின் குழு, சரக்குகள் கையாளுவதைப் பார்வையிட்டுள்ளது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ஒரே நேரத்துல எப்படி இவ்வளவு சரக்குகளையும் உங்களால கையாள முடியுது?” எனக் கேட்க, நவீன ரோபோக்களின் உதவியுடன் சரக்குகள் சேமிக்கப்படுவதும், பின்னர் உரிய வாடிக்கையாளருக்குப் பிரித்து அனுப்பப்படுவதையும் அமேசான் நிர்வாகிகள் விளக்கியுள்ளனர்.

அமேசான் நிறுவன அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி
அமேசான் நிறுவன அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி
அமேசான் விநியோகப்பிரிவை சுற்றிப்பார்க்கும் எடப்பாடி குழு
அமேசான் விநியோகப்பிரிவை சுற்றிப்பார்க்கும் எடப்பாடி குழு
நாங்க இப்பதான் எங்க ஊர்ல எலெக்ட்ரிக் பஸ் விட்டிருக்கோம். அடுத்ததா கார்களையும்விட வேண்டியதுதான்.
எடப்பாடி பழனிசாமி

ஏற்கெனவே தமிழகத்தில் ஒரு விநியோகப் பிரிவு செயல்படுதவையும், தென் இந்தியாவில் தங்களது வியாபாரத்தை விரிவுப்படுத்த உள்ளதையும் அமேசான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் தொழிற்சாலைக்குச் சென்ற எடப்பாடியார் குழு குஷியாகிவிட்டதாம். சான் பிரான்ஸிஸ்கோ அருகே ‘ப்ரீமோன்ட்’ பகுதியில் செயல்படும் இத்தொழிற்சாலையில், முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய கார்களை ‘டெஸ்லா’ தயாரிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 335 கி.மீ-க்குத் தடையில்லாமல் பயணம் செய்யக்கூடிய இக்கார்களைப் பார்த்து, எடப்பாடியார் அசந்துவிட்டாராம்.

டெஸ்லாவில் எடப்பாடி பழனிசாமி
டெஸ்லாவில் எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “டெஸ்லா கார்கள் தயாரிக்கப்படும் விதம், அதன் பாதுகாப்பு அம்சங்கள், ஒருமுறை சார்ஜ் செய்தால் பயணிக்கக்கூடிய தூரம், கார்களின் வேகம் குறித்தெல்லாம் முதல்வர் ஆர்வமாக கேட்டறிந்தார். ‘ஒருதடவை சார்ஜ் பண்ணா, சென்னையில இருந்து சேலத்துக்கு போய்விடலாம்போல’ என முதல்வர் கலகலக்க, ஏரியாவே குதூகலமானது.

தெற்காசியாவில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளின் சொர்க்கபூமியாகத் தமிழகம் திகழ்கிறது. ஹுண்டாயில் தொடங்கி, ஃபோர்டு வரையில் கார் தொழிற்சாலைகளும் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் தமிழகத்தில்தான் அமைந்துள்ளன. இவ்விவரங்களை எடுத்துக்கூறிய முதல்வர், டெஸ்லா நிர்வாகத்தினரைத் தமிழகத்திலும் தொழில் தொடங்க அழைத்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

டெஸ்லா கார்களின் கைப்பிடிகள், டாஸ்போர்டு ஸ்க்ரீன் உள்ளிட்டவற்றை ஆச்சர்யமாகப் பார்த்த முதல்வர், 'நாங்க இப்பதான் எங்க ஊர்ல எலெக்ட்ரிக் பஸ் விட்டிருக்கோம். அடுத்ததா கார்களையும்விட வேண்டியதுதான்' என்றார். ஒரு குழந்தையின் குதூகலிப்புடன், டெஸ்லா காரில் முதல்வர் பயணமானது எங்களையெல்லாம் ஆச்சர்யப்படுத்தியது” என்றார்.

“ஏம்பா இதுல புகையே வராதாமே…” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆச்சர்யத்துடன் கேட்க, “எலெக்ட்ரிக் கார்ல நச்சுப்புகை வெளியேற்றம் ரொம்ப குறைவு” என டெஸ்லா அதிகாரிகள் விளக்கியுள்ளனர். டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர்கள் பலரும் முதல்வரையும், அமைச்சர்களையும் ஆர்வத்துடன் சந்தித்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டார்களாம். ‘கண்டிப்பா எங்க வீட்டுக்குச் சாப்பிட வாங்க’ என தமிழ்ப் பெண் ஒருவர் அழைக்க, அமைச்சர்கள் குழு ஆச்சர்யத்தில் மூழ்கிவிட்டதாம்.

“அமெரிக்காவுல நம்மாளுங்க இத்தனை பேரு நல்ல நிலையில இருக்குறத பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கண்டிப்பா வர்றோம்ம்மா” எனச் சிரித்தபடி எடப்பாடியார் விடைபெற்றாராம். அனைவருக்கும் நினைவுப்பரிசு ஒன்றைக் கொடுத்துவிட்டுத்தான் கிளம்பியுள்ளார்.

டெஸ்லா அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி
டெஸ்லா அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி

இதனிடையே, டெஸ்லா காருக்கு அருகே ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி, எடப்பாடி பழனிசாமி நின்றிருக்கும் புகைப்படங்கள்தான் இன்றைய சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன.