Published:Updated:

எப்படி வந்தது தில்?

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

எப்படியும் அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு குறித்து டெல்லியில் பேசுவார்கள்... அதற்கு எப்படி பதிலளிப்பது?” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி.

எப்படி வந்தது தில்?

எப்படியும் அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு குறித்து டெல்லியில் பேசுவார்கள்... அதற்கு எப்படி பதிலளிப்பது?” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி
‘‘சசிகலா விடுதலையாகி வருவதால், அ.தி.மு.க-வில் எந்த மாற்றமும் ஏற்படாது. அ.தி.மு.க-வில் அவர் சேர்வதற்கு நூறு சதவிகிதம் வாய்ப்பே இல்லை. ஜெயல‌லிதாவால் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர் ச‌சிகலா. கட்சியில் அவர் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது. அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ - டெல்லியில் பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்த முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில் இது. இதை முன்வைத்து, “சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் இணைக்க வேண்டும் என்று பா.ஜ.க திட்டமிட்டுவரும் நிலையில், அதை எதிர்க்கும் ‘தில்’ எடப்பாடிக்கு எப்படி வந்தது?” என்று அ.தி.மு.க-வினரே ஆச்சர்யப்படுகிறார்கள்.

தேர்தல் கணக்கு!

டெல்லியின் மூவ்களை நன்கறிந்த சிலரிடம் பேசினோம். ‘‘தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறது பா.ஜ.க மேலிடம். இதன் ஒரு பகுதியாகத்தான், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - அ.ம.மு.க தனித்தனியாக நின்றால், வாக்குகள் சிதறி அது தி.மு.க-வுக்குச் சாதமாகிவிடும்’ என்று மத்திய அரசுக்கு ரிப்போர்ட் சென்றிருக்கிறது. குறிப்பாக, ‘தென் மாவட்டங்களில் அ.தி.மு.க பெருமளவு வீழ்ச்சியைச் சந்திக்கும்; அதற்கு சசிகலா தரப்பு முக்கியக் காரணமாக அமையும்’ என்று அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

இதன் பிறகே, ‘சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவந்து கட்சியை பலப்படுத்தலாம்’ என்று எண்ணிய பா.ஜ.க தரப்பினர் ‘சிறிது காலம் அமைதி காக்கவும்’ என்று சசிகலா தரப்புக்கு தகவல் அனுப்பினார்கள். இதற்கிடையே, சசிகலா - எடப்பாடி தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சசிகலா தரப்பிலிருந்து முக்கியமான ஏழு நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார்கள். மற்றொருபுறம், அ.ம.மு.க தரப்பிலிருந்து பன்னீரையும் சரிக்கட்டிவிட்டார்கள். இதனால், சசிகலா வரும் முன்பே அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும் என்று நம்பிக்கையோடு இருந்தது அ.ம.மு.க முகாம். இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை... `சசிகலா கட்சியில் இணைவதற்கு நூறு சதவிகிதம் வாய்ப்பே இல்லை’ என்று சொல்லிவிட்டார் எடப்பாடி’’ என்றார்கள்.

எப்படி வந்தது தில்?

தயாரான எடப்பாடி!

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்க டெல்லி புறப்படும் முன்பே, அதற்கான முன் தயாரிப்புகளை பக்காவாக எடப்பாடி செய்துகொண்டார் என்கிறார்கள். “எப்படியும் அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு குறித்து டெல்லியில் பேசுவார்கள்... அதற்கு எப்படி பதிலளிப்பது?” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வாக்குகள், சட்டமன்ற இடைத் தேர்தலில் பெற்ற வாக்கு விவரங்களையெல்லாம் தனி ஃபைலாகத் தயார் செய்தார். சசிகலா தரப்பு கட்சிக்குள் வந்தால் ஏற்படும் பாதிப்புகளையும் பட்டியலாகத் தயார் செய்துகொண்டே டெல்லி சென்றாராம்.

இது குறித்து நம்மிடம் பேசிய டெல்லி வட்டாரங்கள், “பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு 15 நிமிடங்கள் மட்டுமே எடப்பாடிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட பிறகு, ஜெயலலிதாவின் நினைவிட திறப்புவிழாவுக்கு பிரதமருக்கு அழைப்பு விடுத்தார் எடப்பாடி. ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால், தன்னால் வர இயலாது என்று நாசுக்காக வர மறுத்துவிட்டார் பிரதமர். அதற்கு முந்தைய தினமே அமித் ஷாவிடம் பேசிய எடப்பாடி, ‘சசிகலா கட்சிக்குள் வருவதைப் பலரும் விரும்பவில்லை. சசிகலா தரப்பினர் உள்ளே வந்தால், கட்சியில் பலரும் வெளியேறிவிடுவார்கள். அ.ம.மு.க இல்லாமலேயே அ.தி.மு.க-வுக்கு நல்ல வாக்குவங்கி இருக்கிறது’ என்பதுடன், சில இடைத்தேர்தல் ஓட்டுகள் தொடர்பான புள்ளி விவரங்களையும் எடுத்து வைத்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் நிலவும் முதல்வர் வேட்பாளர் பிரச்னை தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.

அதற்கு அமித் ஷாவோ, ‘முதல்வர் வேட்பாளர் தொடர்பாக இனி பிரச்னை எழாது. தமிழகத்தில் ஒரு சர்வே எடுத்துவருகிறோம். அதன் முடிவைப் பொறுத்து, சீட் பங்கீடு குறித்துப் பேசிக்கொள்ளலாம். வேறு எதுவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார்” என்றார்கள். இதையடுத்துத் தான் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி, ‘சசிகலாவைச் சேர்க்க வாய்ப்பே இல்லை’ என்று அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார்.

எப்படி வந்தது தில்?

எடப்பாடியின் தில்... திணறும் அ.ம.மு.க

எடப்பாடியின் இந்த அறிவிப்பு வெளியானதும், இணைப்பை எதிர்பார்த்திருந்த அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க தரப்புகள் இரண்டுமே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இது தொடர்பாக அவர்கள் டெல்லியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘எடப்பாடியின் முடிவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்... பொறுத்திருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

“டெல்லியில்வைத்து இப்படியொரு கருத்தைச் சொல்ல எடப்பாடிக்கு எப்படி தைரியம் வந்தது?” என்று எடப்பாடிக்கு நெருக்கமானவர் களிடம் கேட்டால், ‘‘அரசியல் களத்தில் ராஜதந்திரியாக மாறிவருகிறார் எடப்பாடி. இதுவரை ஆட்சி கையைவிட்டுப் போய்விடுமோ என்கிற பயத்தால்தான், அவர் டெல்லிக்குக் கட்டுப்பட்டிருந்தார். தேர்தல் நெருங்கும் நேரத்திலும் மௌனமாக இருந்தால், தனது கட்சி மற்றும் ஆட்சிக் கனவுக்கு ஆபத்து வந்துவிடும் என்று நினைக்கிறார் எடப்பாடி. அ.தி.மு.க-வில் இப்போது இரட்டைத் தலைமைதான் என்றாலும், அதிகாரம் முழுவதும் எடப்பாடியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஒருவேளை சசிகலாவை கட்சியில் சேர்த்தால் எடப்பாடிக்கு ஆபத்து வந்துவிடும். மேலும், இரட்டை இலைச் சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்க பன்னீரும் எடப்பாடியும் சேர்ந்துதான் கையெழுத்து போட்டாக வேண்டும். யாருக்காகவும் இந்த அதிகாரத்தை விட்டுத் தர இருவருமே தயாராக இல்லை.

எப்படி வந்தது தில்?

அ.ம.மு.க - அ.தி.மு.க இணைப்பு நடந்துவிடும் என்கிற கனவில்தான் கோகுல இந்திராவும் ராஜேந்திர பாலாஜியும் கட்சித் தலைமைக்கு எதிராகப் பேசிவந்தார்கள். இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்பதற்காக இப்படியொரு பயணத்தையே ஏற்பாடு செய்திருக்கிறார் எடப்பாடி. மோடி, அமித் ஷாவுடனான சந்திப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சாதுர்யமாக சசிகலாவை ஓரம்கட்டிவிட்டார். எடப்பாடி டெல்லி பயணத்தின்போதெல்லாம் மீடியாக்களிடம் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால், இம்முறை தனது நிலைப்பாட்டை டெல்லியிலிருந்தே சொன்னால்தான் அதன் வீரியம் அதிகம் இருக்கும் என்று நினைத்தார் எடப்பாடி. அதனால்தான், ‘பிரஸ்ஸை வரச் சொல்லுங்க’ என்று அவரே அழைப்பு விடுத்து பேட்டியைத் தட்டியிருக்கிறார்.

அதேபோல, வழக்கமாக அமைச்சர்கள் தன்னை மீறிச் செயல்படும்போதெல்லாம், டெல்லி பெயரைச் சொல்லி அடக்கிவைப்பார் எடப்பாடி. இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. அமைச்சர்கள் சிலர் டெல்லி பேட்டி குறித்துக் கேட்டபோதும், ‘மேல சொன்னாங்க... அதைத்தான் நானும் சொன்னேன்’ என்று தந்திரமாகச் சமாளித்துவிட்டார்.

எடப்பாடியைப் பொறுத்தவரை, ‘சசிகலாவுக்கு எதிரானவர்களைக் கட்சிக்குள் வளர்த்துவிட்டால் போதும். ஆட்சிக்கு வர முடியாவிட்டாலும், கட்சியாவது நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஒருவேளை பா.ஜ.க-வுக்கு இணக்கமாக நாம் போகாவிட்டால், நம்மீது நடவடிக்கை எடுப்பார்கள். அதைவைத்தே மக்களிடம் அனுதாபத்தைத் தேடிக்கொள்ளலாம்’ என்று நினைக்கிறார். மேலும், ‘பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க-வை விட்டால் வேறு வழியில்லை... தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள்தான்... அதுவரை பல்லைக் கடித்துக்கொண்டு, கட்சியைக் காப்பாற்றிவிட்டால் போதும். எப்படியும் கரை சேர்ந்துவிடலாம்’ என்று நினைக்கிறார் எடப்பாடி. கடும் களேபரங்களுக்கு இடையில் சுமார் நான்கு ஆண்டுகள் கட்சியைக் கரைசேர்த்தவரால், ஒன்றரை மாதங்களைக் கடக்க முடியாதா என்ன?” என்கிறார்கள் தெம்பாக!

அ.ம.மு.க தரப்பிலோ, “முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. கட்சிகள் இணைப்பு பற்றி மட்டும்தான் பேசியிருந்தோம். ஆனால், அதற்கே எடப்பாடி ஒப்புக்கொள்ளாதது நெருடலை ஏற்படுத்துகிறது. அ.தி.மு.க ஆட்சிக்கே வரவில்லையென்றாலும் பரவாயில்லை, சசிகலா தரப்பு கட்சிக்குள் வந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது’’ என்றார்கள்.

எப்படி வந்தது தில்?

இதற்கிடையே, டெல்லியில்வைத்து எடப்பாடி கொடுத்த பேட்டி, சசிகலாவைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது என்கிறார்கள். ‘‘நன்றியே இல்லாமல் பேசுகிறார். என்னைக் கட்சிக்குள் எப்போதோ அம்மா சேர்த்துக்கொண்டார். கட்சியில் இல்லாத என்னையா 2017-ம் ஆண்டு முதல்வராக்க எடப்பாடி கையெழுத்து போட்டார். நான் வெளியே வந்ததும், அவரைப் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கொந்தளித்தாராம் சசிகலா.

இன்னொரு பக்கம், ‘அண்ணன் - தம்பி’, ‘ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்’ என்றெல்லாம் அ.ம.மு.க இணைப்பை மனதில்வைத்து ஒரு வாரமாகப் பேசிவந்த பன்னீருக்கு, எடப்பாடியின் முடிவு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. “கட்சியின் தலைமைப் பொறுப்பிலுள்ள என்னிடம் இது குறித்து ஆலோசிக்க வேண்டாமா?” என்று எடப்பாடியின் மீடியேட்டர்களிடம் தனது கடுப்பைக் காட்டினாராம் பன்னீர். இருந்தாலும் கடைசி நம்பிக்கையாக, சசிகலா விடுதலையான பிறகு காட்சிகள் மாறும்; பிறகு தனது அஸ்திரத்தை எடுக்கலாம் என்று நினைக்கிறாராம் பன்னீர்.

பா.ஜ.க வெளியே அமைதியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், எடப்பாடியின் அறிவிப்பு அந்தக் கட்சியின் தலைமையை டென்ஷன் ஆக்கியிருக்கிறது என்கிறது டெல்லி தரப்பு. ‘‘தி.மு.க ஆட்சிக்கு வரக் கூடாது என்று நாங்கள் ஒவ்வொரு காயாக நகர்த்தினால், இவர் அனைத்தையும் காலி செய்கிறார். சசிகலா வெளியே வந்த பிறகு மீண்டும் அவரிடம் டெல்லி மேலிடம் பேசவிருக்கிறது. அப்போதும் இவர் இறங்கிவரவில்லை என்றால், எது போன்ற நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்கிறது டெல்லி தரப்பு.

எந்த நிமிடமும் எதுவும் மாறலாம் என்பதே அரசியல். எடப்பாடியின் ‘தில்’ தொடருமா... பார்க்கலாம்!

ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா!

எப்படி வந்தது தில்?

அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அஜெண்டா என்றும் கூறப்படுகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகிகள், “வரும் தேர்தலில் அ.தி.மு.க - அ.ம.மு.க இணைந்து போட்டியிட்டால், கிட்டத்தட்ட நூறு தொகுதிகளில் வெற்றியை நெருங்கலாம் என்று பா.ஜ.க தரப்பு நடத்திய சர்வேயில் தெரியவந்தது. இதையடுத்து நாக்பூரிலிருந்து ஒரு டீம் கடந்த வாரம் தமிழகம் வந்தது. அவர்கள் குருமூர்த்தி உட்பட சில முக்கிய நபர்களைச் சந்தித்திருக்கிறார்கள். அப்போதுதான், குருமூர்த்தியிடம் அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு குறித்து துக்ளக் விழாவில் பேசச் சொன்னார்கள். அப்போது குருமூர்த்தி, ‘சசிகலாவுக்கு எதிராகப் பலமுறை நான் பேசியிருக்கிறேன். இப்போது எப்படி ஆதரித்துப் பேசுவது?’ என்று தயங்கினார். இதையடுத்து, குருமூர்த்தியிடம் பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா பேசியிருக்கிறார். அதன் பிறகே, ‘சாக்கடை’ என்று அடைமொழி கொடுத்து அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பை வலியுறுத்தினார் குருமூர்த்தி’’ என்றார்கள்.