Published:Updated:

ஓங்கும் எடப்பாடியின் கரம்!

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

நீக்கப்பட்ட பன்னீர் பெயர்!

அ.தி.மு.க செயற்குழுவுக்குப் பிறகும் எடப்பாடி - பன்னீர் மோதல் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டேயிருக்கிறது. முதல்வர் வேட்பாளரை அக்டோபர் 7-ம் தேதியன்று அறிவிக்கவிருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்திருக்கும் நிலையில், இருதரப்பிலும் உக்கிரம் மேன்மேலும் கூடியிருக்கிறது. ஆனாலும், கட்சியில் எடப்பாடி கை ஓங்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

செப்டம்பர் 28-ம் தேதியன்று நடந்த செயற்குழுவில், முதல்வர் வேட்பாளர் குறித்து உச்சகட்ட மோதல் நடந்தது. ‘வழிகாட்டுதல்குழு அமைக்க வேண்டும்’ என்பதில் பன்னீர் தரப்பு விடாப்பிடியாக நிற்க... ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று மறுத்துவிட்டது எடப்பாடி தரப்பு. ஆத்திரமடைந்த பன்னீர், அடுத்தடுத்த நாள்களில் முதல்வரை முற்றிலும் புறக்கணித்தார். செப்டம்பர் 29-ம் தேதி நடந்த ஆட்சியாளர்களுடனான காணொலி ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ள வில்லை. கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது வீட்டில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போதே அவர் கிட்டத்தட்ட ராஜினாமா மூடுக்குப் போய்விட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதை முன்வைத்துத்தான் அவர் திடீரென்று தனது காரிலிருந்த தேசியக்கொடியையும் கழற்றினாராம். ஆனாலும், இதை பன்னீரின் வழக்கமான பூச்சாண்டி காட்டும் வேலையாகவே பார்த்தது எடப்பாடியின் முகாம்.

நீக்கப்பட்ட பன்னீர் பெயர்!

இதற்கிடையே தன்னை வந்து சந்தித்த முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோரிடம் பன்னீர், “இதே நிலைமை தொடர்ந்தால், நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கட்சியில் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிடுவார்கள். இப்போதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. நமது ஆட்களுக்குக் கட்சியில் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்தால் எதுவும் நடப்பதில்லை. ஆனால், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி சொல்கிறவர்களுக்கு மட்டும் பதவிகள் தரப்படுகின்றன. நான் கட்சியிலிருந்து என்ன பயன்?” என்று வெடித்தாராம்.

இவ்வளவு வெப்பத்துக்கு இடையே நடந்த இன்னொரு சம்பவம் பன்னீர் தரப்பை ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. செப்டம்பர் 30-ம் தேதி அன்று சென்னையில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான திட்ட விழாவுக்காக அன்றைய தினம் பெரிய அளவில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அந்த விளம்பரங்களில் முதலில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரின் பெயர்களைவைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் துணை முதல்வரின் பெயர் நீக்கப்பட்டே விளம்பரம் வெளியிடப்பட்டது. அரசு விழாவில் தனது பெயரை எப்படித் தவிர்க்கலாம் என்பதுதான் பன்னீரின் ஆத்திரத்துக்குக் காரணம்.

அதே கோபத்துடன் அன்றைய தினம் வீட்டைவிட்டுக் கிளம்பி சி.எம்.டி.ஏ. அலுவலகத்துக்குச் சென்றவர், நீண்டகாலமாக தேங்கியிருந்த சில கோப்புகளில் கையெழுத்துப் போட்டுவிட்டு, ‘இவற்றையெல்லாம் செயல்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு’ என்று அதிகாரிகளை எச்சரித்துவிட்டு வந்தாராம்! அக்டோபர் 1-ம் தேதி நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள். அவரது மணி மண்டபத்துக்கு அரசு சார்பில் சென்று புகழாரம் சூடவும் தவறவில்லை பன்னீர்.

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

“என்ன குறைவெச்சேன்?” - கொந்தளித்த எடப்பாடி!

ஆனால், என்ன நடந்தாலும் கட்சியையும் ஆட்சியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை எடப்பாடி தரப்பு. ‘கட்சிக்கு நான்... ஆட்சிக்கு நீங்கள்’ என்கிற பன்னீர் கோரிக்கையின் பின்விளைவுகளை அறிந்தேயிருக்கிறாராம் எடப்பாடி. இடைப்பட்ட நாள்களில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி பன்னீர் பக்கம் லேசாகச் சாய்ந்த வைத்திலிங்கம் வரைக்குமே பலரது மனதைக் கரைத்திருக்கிறது எடப்பாடி தரப்பு. முன்னாள் அமைச்சரான மணிகண்டனிடம் ஒரு டீம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. செயற்குழுவில் பன்னீருக்கு ஆதரவாக எழுந்த குரல்கள், அக்டோபர் 7-ம் தேதி எழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி. முதல்வர் வேட்பாளர், கட்சியின் பொதுச்செயலாளர் இரண்டும் தன் கையில் இருந்தால்தான் கட்சி தனது முழுக் கட்டுப்பாட்டிலிருக்கும் என்பது எடப்பாடியின் எண்ணம்.

“ரெண்டு மாசத்துல ஆட்சி கவிழ்ந்துடும்னு சொன்ன ஆட்சியை, மூன்றரை வருஷத்துக்கு மேல சிறப்பா நடத்திக்கிட்டிருக்கேன். நான் மட்டும் ஆட்சியை கைவிட்டிருந்தேன்னா, உங்க நிலைமை என்ன ஆகியிருக்கும்... அதுவுமில்லாம உங்களுக்கு என்ன குறைவெச்சேன்... அம்மா இருந்தப்போ மாசா மாசம் கணக்கு கேட்பாங்க. அதெல்லாம்கூட நான் கேட்குறதில்லை. இதுதான் எனக்கு நீங்க காட்டுற விசுவாசமா?” என்று அமைச்சர்களிடம் பொங்கிய எடப்பாடி, சில எம்.எல்.ஏ-க்களிடம் போனைப் போட்டு, “யப்பா... உனக்கு வர வேண்டியதெல்லாம் வந்துக்கிட்டுதானே இருக்கு... பிறகென்ன அந்தாளோட பேச்சு... எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனைச்சிட்டியா?” என்றெல்லாம் கொந்தளித்தாராம். இதற்கிடையே அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் போனைப் போட்டு எடப்பாடிக்காக ‘வெயிட்’டாகப் பேசிவருகிறார்கள்.

ரசிக்கும் பா.ஜ.க!

தமிழகத்தில் நடக்கும் இந்த அதிகாரப் போர், டெல்லி பா.ஜ.க தரப்பை உற்சாகமாக்கியிருக்கிறது. ‘நன்றாக மோதட்டும்’ என்று ரசித்தபடியே மோதலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அக்டோபர் 14-ம் தேதி நவராத்திரி ஆரம்பமாகிறது. அடுத்த 16 நாள்களுக்கு நவராத்திரி சீஸன் நடக்கும். ஆர்.எஸ்.எஸ். சார்பில் அந்த நாள்களில் நாக்பூர் தலைமையகத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூடுவார்கள். அடுத்த ஒரு வருட காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய அரசியல் முடிவுகளும் அங்கு ஆலோசிக்கப்படும். அந்த வகையில், நாக்பூரில் தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்கப்போகிறார்களாம். அதுவரை, தமிழக அரசியலில் அ.தி.மு.க - தி.மு.க - காங்கிரஸ் என்று மூன்று கட்சிகளுக்குள்ளும் குழப்ப அலைகளைப் பரவவிடுவதே பா.ஜ.க-வின் திட்டம். அதேசமயம், அ.தி.மு.க-வில் அவர்களின் சாய்ஸ் சசிகலாவா, பன்னீர்செல்வமா, பழனிசாமியா என்பதெல்லாம் நவம்பரில்தான் தெரியவரும் என்கிறார்கள். இதற்குத் தகுந்தாற்போல், பா.ஜ.க மேலிடம் தேசிய பொதுச்செயலாளராக இருக்கும் பூபேந்தர் யாதவை தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராகநியமிக்கவிருக்கிறது.

இரட்டை இலையில் எந்த இலை கருகினாலும் நஷ்டம் கட்சிக்குத்தான்!

******

வருகிறார் சுசீல் சந்திரா

மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் சுசீல் சந்திரா. இவர் பதவியிலிருந்த காலத்தில்தான் தமிழகத்தில் ஏராளமான வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்தன. ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பல விவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கிறார் சுசீல். தற்போது மத்திய தேர்தல் கமிஷனர்களில் ஒருவராக இருக்கும் இவர், விரைவில் தலைமைத் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இவர்தான் தமிழக சட்டமன்றத் தேர்தலையும் முன்னின்று நடத்தப்போகிறார். வருமான வரித்துறையில் அவர் இருந்தபோது கிடைத்த விஷயங்களையெல்லாம் தேர்தல் நேரத்தில் கையிலெடுப்பார் என்கிறது டெல்லி வட்டாரம்!

பன்னீர்-தினகரன் உடன்படிக்கை!

`அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்புக்காகவே தினகரன் கடந்த வாரம் டெல்லியில் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்தார்’ என்கிறார்கள். இது தொடர்பாக பன்னீர்-தினகரன் இடையே உடன்பாடும் ஏற்பட்டுவிட்டதாம். ஆனால், கட்சியின் தலைமைப் பதவி தனக்கு வேண்டும் என்பது பன்னீரின் கோரிக்கை. இது குறித்து பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு தகவல் அனுப்பி ஆலோசிக்கப்பட்டும் விட்டதாம். சசியும் இதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்கிறது தினகரன் முகாம்.