அரசியல்
Published:Updated:

‘தண்ணி’ காட்டும் பன்னீர் - எகிறி அடிக்கும் எடப்பாடி

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

- விறுவிறு க்ளைமாக்ஸ் காட்சிகள்

உச்சகட்ட பரபரப்பிலிருக்கிறது அ.தி.மு.க முகாம். 1989-ல் ஜெ - ஜானகி பிரச்னை, 2017-ல் சசிகலா-பன்னீர் தர்மயுத்தம் ஆகிய பிரளயத்துக்குப் பிறகு, மூன்றாம் முறையாகக் கலகலத்துக்கிடக்கிறது எம்.ஜி.ஆர் உருவாக்கிய பேரியக்கம். `கழகம் எந்நேரமும் பிளவுறலாம்’ என்ற பதைபதைப்பிலிருக்கிறார்கள் தொண்டர்கள். நாற்காலிச் சண்டையால் நாட்டை மறந்த சுயநல கோஷ்டிகளின் பதவிவெறி யுத்தம் கண்டு முகம்சுளிக்கிறார்கள் மக்கள். இவ்வளவுக்கும் இடையே தான் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையிலான பங்கீடுகள் ஓரளவு முடிந்திருப்பதாகக் கடைசிகட்டத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. கடந்த மூன்று நாள்களாக நடந்த காட்சிகள் லைவ்வாக இங்கே...

அக்டோபர் 3-ம் தேதி கடும் டென்ஷனிலிருந்தார் பன்னீர். அன்றைய தினம் பெரியகுளம், கைலாசபுரம் பண்ணை வீட்டிலிருந்தவர், வழக்கமாக மதிய உணவுக்கு பெரியகுளம் அக்ரஹாரத்திலுள்ள தனது வீட்டுக்குச் செல்வதையும் தவிர்த்துவிட்டார். உதவியாளர் களிடம், “மனசு சரியில்லை...” என்றவர், கொஞ்சம் மோர் சாதம், வாழைப்பழத்துடன் மதிய உணவை முடித்துக்கொண்டார். மதியம் ஓய்வெடுக்க அறைக்குள் சென்றாலும், உறங்காமல் வீடு முழுக்க தனிமையில் உலாத்திக்கொண்டிருந்தார் என்கிறார்கள் பணியாட்கள்.

அன்றிரவு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி ஆகிய ஐவரும் பண்ணை வீட்டுக்கு வந்தனர். சுமார் அரை மணி நேரம் அவர்களுடன் ஆலோசித்தார் பன்னீர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த உதயகுமார், “உசிலம்பட்டியில் மூக்கையாத் தேவரின் சிலை அமைப்பது குறித்துப் பேசினோம். இது அரசியல் சந்திப்பல்ல” என்று விளக்கமளித்தார். ஆனால், ‘சிலை அமைப்பதற்கான சந்திப்பு என்றால், எதற்கு இத்தனை எம்.எல்.ஏ-க்களை அழைத்து வர வேண்டும், அரை மணி நேரம் என்ன பேசியிருப்பார்கள்?’ போன்ற கேள்விகள் அ.தி.மு.க-வினரை உலுக்கியெடுத்தன.

பன்னீரின் ‘சமூக’ ஆயுதங்கள்!

இது குறித்து பன்னீர் ஆதரவாளர்களிடம் விசாரித்தோம். “எடப்பாடியா, பன்னீரா என உதயகுமாரிடம் கேட்டால், சட்டென `பன்னீர்தான்’ என்று கூறிவிடுவார். முக்குலத்தோர் சமூகப் பிணைப்பு அப்படி. அதன் அடிப்படையில் அமைச்சர்கள் சிலரும் பண்ணை வீட்டுக்கு வரவிருந்தனர். அப்படி நடந்தால், தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்று பன்னீர் மறுத்துவிட்டார். அதேசமயம், தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் நிர்வாகிகளும், பன்னீர் பின்னால் அணி திரளத் தயாராக இருக்கிறார்கள். இந்த ஆயுதத்தை பன்னீர் எந்நேரமும் எடுக்கக்கூடும்.

இது மட்டுமல்ல... ஏற்கெனவே கட்சியின் செயற்குழுவில், வன்னியர் சமூக அமைச்சர்கள் சிலரும் சமூகரீதியாகத் தாங்கள் புறக்கணிப் படுவதாகக் கொந்தளித்திருந்தார்கள். இவர்களை வளைக்கும் வேலையையும் பன்னீர் தரப்பு செய்து வருகிறது. அதன்படி அமைச்சர் சி.வி.சண்முகம், வீரமணி ஆகியோரின் மனதைக் கரைக்கும் வேலையை கே.பி.முனுசாமி மூலமாக பன்னீர் கச்சிதமாகச் செய்துவருகிறார். ‘எடப்பாடியின் ஆட்சியில் கவுண்டர் சமூகத்தினரைத் தவிர்த்து மற்ற சமூகத்தினர் ஓரங்கட்டப்படுகின்றனர்’ என்று கொம்பு சீவிவிடுவதுதான் பன்னீரின் நோக்கம். இதையெல்லாம் அமைதியாகக் கணக்கு போட்டுத்தான், அக்டோபர் 7-ம் தேதி பிரச்னை உச்சகட்டத்தை எட்டினால், சமூக பலத்தைக் காட்டி மோதிப்பார்க்கும் மனநிலைக்கு பன்னீர் வந்துவிட்டார்.

இதையேதான், செயற்குழு முடிந்த பிறகு சமாதானத்துக்காகத் தன்னைச் சந்தித்த அமைச்சர்கள் சிலரிடம், ‘இந்தக் கட்சியை ஒரு சமூகத்துக்கான கட்சியாக மாற்றிவிட்டார்கள். முதல்வர் வேட்பாளர் குறித்தெல்லாம் நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கொங்கு மண்டல அமைச்சர்களின் ஆதிக்கத்தை முடிவுகட்டு வதற்காகவே `வழிகாட்டுதல்குழுவை அமையுங்கள்’ என்று சொன்னேன். எனக்காகவா இவ்வளவு போராடுகிறேன்... வழிகாட்டுதல்குழு அமைத்தால் அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும்’ என்று அவர் தூபம் போட்டதும், சமாதானத்துக்குப் போயிருந்த அமைச்சர்கள் மனதிலும் சஞ்சலம் தோன்றிவிட்டது” என்றார்கள்.

‘தண்ணி’ காட்டும் பன்னீர் - எகிறி அடிக்கும் எடப்பாடி

அறிவிப்பு அல்லது பொதுக்குழு!

எல்லாவற்றுக்கும் தயாராகவே தெம்புடன் முஷ்டி முறுக்குகிறது எடப்பாடி முகாம். எடப்பாடி தனது ஆதரவு அமைச்சர்களிடம், “பன்னீர் பின்னால் இரண்டு மூன்று பேர் மட்டுமே நிற்கிறார்கள். அவர்களுக்கு எளிதாகப் பொறுப்பை வாங்கிக் கொடுத்துவிடுவார். என்னை நம்பிப் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நான் வழிகாட்டுதல்குழுவில் பொறுப்பு வாங்கிக் கொடுப்பது சாத்தியமில்லை. ஒரு சமூகத்துக்கு ஒருவர்தான் என்று பிரதிநிதித்துவம் பேசுகிறார் பன்னீர். கவுண்டர் சமுதாயத்திலேயே செங்கோட்டையன், வேலுமணி, பொன்னையன், தம்பிதுரை எனப் பலரும் குழுவில் இடம் எதிர்பார்க்கிறார்கள். இதில் யாருக்குக் குழுவில் பொறுப்பு கொடுப்பது? இன்னொரு விஷயம்... ‘அம்மா இருந்தவரை இது நம்மாளுங்க கட்சிதான்’ என்கிற ஆதிக்க மனநிலை பன்னீர் சமூகம் சார்ந்த அமைச்சர்களிடம் இருந்தது. அதை இப்போது கிளறிவிடப் பார்க்கிறார் பன்னீர். மூக்கையாத் தேவர் மறைந்து 41 வருடங்களாகிவிட்ட நிலையில், அவருக்குச் சிலைவைக்கும் அரசியலை இப்போது செய்கிறார்களென்றால் என்ன அர்த்தம்? சரி, நான் அந்த அரசாணையில் கையெழுத்து போடாவிட்டால் என்ன செய்திருப்பார்கள்?” என்று எடப்பாடி எகிறவும், அமைச்சர்கள் தரப்பு மெளனம் சாதித்திருக்கிறது.

அ.தி.மு.க-வில் சபாநாயகருடன் சேர்த்து மொத்தம் 125 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். பன்னீரைத் தவிர்த்து மற்ற எம்.எல்.ஏ-க்களிடம் தனித் தனியாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘இந்த ஆட்சியில் உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்திருக்கிறேன். என்னை முதல்வர் வேட்பாளராக நீங்கள் முன்மொழிய வேண்டும்’ என்று ஒவ்வொருவரிடமும் அவர் உருகினாராம். பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாமல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பெரும்பாலானோர் எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருப்பது அவருக்குக் கூடுதல் தெம்பை அளித்திருக்கிறது.

இது குறித்துப் பேசிய எடப்பாடியின் ஆதரவாளர்கள், “சென்னையில் பன்னீர் இருந்தபோது கே.பி.முனுசாமி, ஜே.சி.டி.பிரபாகர், நத்தம் விஸ்வநாதனைத் தாண்டி பழைய ஆதரவாளர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக அணி திரளவில்லை. ஏன்... மாஃபா பாண்டியராஜன் கூட பன்னீரின் பொதிகை இல்லம் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. 2017, ஆகஸ்ட் மாதம் அணிகள் இணைந்த பிறகு, அரசு வழக்கறிஞர்களாக பன்னீர் தரப்பு ஆட்கள்தான் நிரம்பியிருந்தனர். இன்று மனோஜ் பாண்டியனின் தம்பி அரவிந்த் பாண்டியன் மட்டும்தான் உயர் நீதிமன்றத்தில் பன்னீரின் ஆளாகத் தனித்து நிற்கிறார்.

இதையெல்லாம் முன்வைத்துதான் அக்டோபர் 7-ம் தேதி என்று ‘நாள் குறித்தார்’ எடப்பாடி. ஜோதிடரின் அறிவுரைப்படி, 7-ம் தேதி தனக்கு ராசியான நாள் என்பதால், அன்றைய தினத்தை அவர் தேர்வுசெய்தாராம். தன்னை முதல்வர் வேட்பாளராக பன்னீர் தரப்பு ஏற்கவில்லை என்றால், பொதுக்குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடும் முடிவில் எடப்பாடி இருக்கிறார். இதற்கு ஆழம் பார்ப்பதுபோலத்தான் `அக்டோபர் 6-ம் தேதி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

பொதுக்குழு கூட்ட வேண்டுமென்றால் பன்னீர், எடப்பாடி இருவரின் கையெழுத்தும் அவசியம். ஆனால், பன்னீரின் கையெழுத்து இல்லாமலேயே பொதுக்குழுவைக் கூட்ட முடியும். சசிகலா விவகாரத்திலும் இதுதான் நடந்தது. பொதுச்செயலாளர் இல்லாமலேயே பொதுக்குழுவைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அந்தத் தீர்மானங் களை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது. ஆக, சசிகலாவுக்கு நடந்தது பன்னீருக்கு நடக்காது என்பதில் என்ன நிச்சயம்?” என்றார்கள்.

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

பிளவா, சரண்டரா?

இந்தநிலையில்தான் அக்டோபர் 5-ம் தேதி காலை, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார் பன்னீர். அதில், ‘தமிழக மக்கள் மற்றும் கழகத் தொண்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ச்சியாக, பகவத் கீதை வசனத்தையும் மேற்கோள் காட்டியிருந்தார். அணிகள் இணைந்தபோது, கட்சியின் நலன் கருதி இணைவதாகக் குறிப்பிட்டார். துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளும் போதும் இதே டயலாக்கைத்தான் உதிர்த்தார். இப்போதும் அதே வசனத்தை உச்சரிக்கிறார். எனவே, பன்னீரின் இந்தப் பதிவை, `சரண்டருக்கான முன்னறிவிப்பு’ என்கிறது எடப்பாடி வட்டாரம்.

ஆனால், பன்னீரின் ஆதரவாளர்களின் மனநிலை வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது, “பன்னீரின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றால், கட்சி மீண்டும் பிளவை நோக்கியே செல்லும் என்கிறது” அவரது ஆதரவு வட்டம். “எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால், அதற்குரிய விலையை பன்னீருக்கு எடப்பாடி தந்துதான் ஆக வேண்டும். அதாவது, கட்சியின் மொத்த கட்டுப்பாட்டையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பன்னீர் எதிர்பார்க்கிறார். இதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளப் போவதில்லை. எந்தச் சூழலிலும் இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் உரிமையை இருவரும் விட்டுத்தர மாட்டார்கள். கட்சிப் பிளவை நோக்கித்தான் பயணிக்கிறது” என்கிறார்கள் அவர்கள்.

வழிகாட்டுதல்குழுவுக்கு ஒப்புதல்?

அதேநேரம் இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் அக்டோபர் 5-ம் தேதியன்று நள்ளிரவில், கட்சி மேலிடத்தில் எடுக்கப் பட்டதாக சில முடிவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் மூத்த நிர்வாகிகள். “ஒருவழியாக வழிகாட்டுதல்குழுவை அமைக்க எடப்பாடி தரப்பில் ஒப்புக்கொண்டார்கள். இதற்கு பிரதிபலனாக எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக பன்னீர் ஏற்றுக்கொண்டார். வழிகாட்டுதல் குழுவை அமைத்துவிட்டால், கட்சியைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வேட்பாளரின் தேர்வின்போது எடப்பாடி தரப்புக்கு செக் வைக்கலாம் என்று பன்னீர் தரப்பில் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதாவது, கட்சியின் ‘பி ஃபார்ம்’-ல் கையெழுத்து போடுவதற்கும் பன்னீர் முரண்டுபிடிக்கலாம்; தன் ஆதரவாளர்கள் அதிகமானோர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில், அவர்களைவைத்தே தன்னை முதல்வராக முன்னிறுத்திக்கொள்ளலாம் என்றெல்லாம் பன்னீரிடம் திட்டங்கள் இருக்கின்றன. அதேசமயம், மேற்கண்ட கடைசி கட்ட முடிவுகள் எந்நேரமும் மாறக்கூடும்” என்றார்கள்.

ஒருபுறம், சாதி அரசியலைக் கையிலெடுத்து, கொங்கு அதிகாரத்தை உடைக்கப்பார்க்கிறார் பன்னீர். மறுபுறம், கட்சி நிர்வாகிகளையும் எம்.எல்.ஏ-க்களையும் கையில் எடுத்துக்கொண்டு எகிறி அடிக்கிறார் எடப்பாடி. கொரோனா கொடும் துயரம் தீராத நிலையில், கடந்த ஒரு மாதமாகவே ஆட்சியாளர்கள் இருவரும் மக்களைப் பற்றி துளியும் சிந்திக்கவில்லை என்பதுதான் சாபக்கேடு!

``ஆட்சிக் கலைப்பு!’’ - பா.ஜ.க அஸ்திரம்...

அ.தி.மு.க-வில் நடந்துவரும் மோதலின் க்ளைமாக்ஸ் காட்சியாக, அக்டோபர் 5-ம் தேதியன்று மாலை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமியும் சில அமைச்சர்களும் சந்தித்தனர். ‘கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்துப் பேசியதாக’ சொல்லப்பட்டாலும், பேசப்பட்ட விவகாரமே வேறு என்கிறார்கள். “எடப்பாடி - பன்னீர் பிரச்னை 7-ம் தேதியன்று முடிவுக்கு வரவில்லையென்றால், மத்திய அரசு முக்கிய முடிவெடுக்க வேண்டியிருக்கும். ஆட்சியைக் கலைக்கவும் தயங்க மாட்டோம்” என்று கடுமையாக அவர்களிடம் ராஜ்பவன் தரப்பு எச்சரித்ததாம். இதற்கு முத்தாய்ப்பாகவே, கடந்த ஒரு வாரமாகத் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் டெல்லியில் முகாமிட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. அடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். அவரிடமும் தமிழக அரசியல் சூழலை விசாரித்து வரும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.