‘சேலம் மாநாட்டைத் தடுக்கும் முயற்சியா?’ - அடிதடி இ.பி.எஸ் தரப்பு... புகார் வாசிக்கும் ஓ.பி.எஸ் அணி!

அ.தி.மு.க-வில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். இதில், யார்மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
எதிரியை அவர் ஏரியாவிலேயே சந்திக்க முற்பட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்!
திருச்சியைத் தொடர்ந்து, கொங்கு மண்டலமான சேலத்திலும் மாநாடு நடத்தப்போவதாக அறிவித்திருந்தது ஓ.பி.எஸ் தரப்பு. அதற்கான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாநகரில் டாக்டர் சுப்பராயன் தெருவிலும், புறநகர்ப் பகுதியில் எடப்பாடியிலும் கடந்த மே 19-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், கொள்கை பரப்புச் செயலாளர் பெங்களூர் புகழேந்தி ஆகியோர் பங்கேற்றனர். இவர்களை வரவேற்க, சேலம் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதியில் கட்சிக்கொடிகள், இரட்டை இலைச் சின்னம் போட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

காலையில் சேலம் மாநகரக் கூட்டம் நடக்கவிருந்த மண்டபத்தின் முன்பிருந்த கட்சிக்கொடிகளைப் பிடுங்கி வீசியது இ.பி.எஸ் கோஷ்டி. இதனால் அங்கு இரு தரப்புக்கும் இடையே கைகலப்பானது. இந்தச் சம்பவம் அடங்குவதற்குள்ளேயே, மாலையில் எடப்பாடியிலும் பிரச்னை வெடித்தது. அங்கு நடந்த கூட்டத்துக்கு வந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், பெங்களூர் புகழேந்தி ஆகியோரின் வாகனங்களை மறித்து இ.பி.எஸ் தரப்பினர் போராட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களைக் கைதுசெய்து வேனில் அள்ளிச் சென்றனர். ஆனாலும், கூட்டம் முடிந்த பிறகு பெங்களூர் புகழேந்தியின் கார் தாக்கப்பட்டது. இதனால் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையிலான மோதல் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

இது குறித்து ஓ.பி.எஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் பெங்களூர் புகழேந்தியிடம் கேட்டபோது, “எப்போது ஓ.பி.எஸ்-ஸும் தினகரனும் ஒன்றிணைந்தார்களோ, அப்போதே எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது. எங்கே சேலம் மாநாட்டிலும் திருச்சியைப் போன்று ஆதரவாளர்கள் கூடிவிடுவார்களோ என்கிற பயத்தால்தான், அதைத் தடுக்கும்விதமாக ஆட்களைத் தூண்டிவிட்டு இப்போதே பிரச்னை செய்திருக்கிறார். என்மீது தாக்குதல் நடத்த முயன்ற நபர்கள்மீது சேலம் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளிக்கவிருக்கிறேன்” என்றார்.
இது குறித்து இ.பி.எஸ் அணியைச் சேர்ந்த, சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்திடம் பேசியபோது, “எங்களுக்கு யாரைக் கண்டும் பயமில்லை. எடப்பாடியார் தரப்புதான் உண்மையான அ.தி.மு.க என்று நீதிமன்றமே சொன்ன பிறகும், ஓ.பி.எஸ் தரப்பினர் கட்சி சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தியதுதான் பிரச்னைக்குக் காரணம். எனவே, இது குறித்து நாங்களும் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்” என்றார்.

இது குறித்து மாவட்ட சேலம் மாவட்ட எஸ்.பி சிவக்குமாரிடம் பேசியபோது, “அ.தி.மு.க-வில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். இதில், யார்மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும் வழிமறித்துத் தாக்கியதாக எந்தப் புகாரும் என்னிடம் வரவில்லை” என்றார்.
ரத்தம் சிந்தாமல் உரிமையை நிலைநாட்டுங்கள் ரத்தத்தின் ரத்தங்களே!