Published:Updated:

ஸ்டார் தொகுதிகள்: எடப்பாடியை வென்றெடுப்பாரா பழனிசாமி?

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

எடப்பாடி தொகுதியில் ஏற்கெனவே நான்கு முறை வெற்றிபெற்றுள்ளார் பழனிசாமி.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, புதுமுக வேட்பாளரான சம்பத்குமாரைக் களமிறக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. ‘முதல்வர் வேட்பாளரை எதிர்க்க புதுமுகமா?’ என்று ஏரியாவில் விசாரித்தால், ‘‘சம்பத்குமார்தான் வேட்பாளர் என்றாலும், அவரின் பின்னின்று இயக்குபவர், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் செல்வகணபதிதான். அவரின் பரிந்துரையில்தான் சம்பத்குமாருக்கு சீட் கிடைத்துள்ளது. எனவே, இதை செல்வகணபதிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான போட்டி என்றுதான் சொல்ல வேண்டும். அ.தி.மு.க-வில் இருந்தபோது எடப்பாடிக்கே சீனியர் செல்வகணபதி. அந்த வகையில் எடப்பாடியின் மைனஸ்களை செல்வகணபதி நன்கறிவார். அவரால்தான் இங்கு போட்டி கடுமையாகி இருக்கிறது’’ என்று கண்சிமிட்டுகிறார்கள்.

ஸ்டார் தொகுதிகள்: எடப்பாடியை வென்றெடுப்பாரா பழனிசாமி?

எம்.சி.ஏ பட்டதாரியான 37 வயது சம்பத்குமார், தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் அத்தப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 2003-ல் தி.மு.க-வில் சேர்ந்தவர் 2015 முதல் சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். ‘‘சம்பத்குமார் தீவிரமாகக் கட்சிப் பணி செய்யக்கூடியவர். கொரோனா காலகட்டத்தில் வீடு வீடாகச் சென்று மக்களுக்குப் பல உதவிகளைச் செய்திருக்கிறார். அது அவருக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும்’’ என்கிறார்கள் தி.மு.க-வினர். அதேசமயம், தொகுதி மக்களுக்குப் பெரிதாக அறிமுகம் இல்லாததும், ஆளுங்கட்சி முகாம் இவர்மீது கிளப்பும் பண மோசடிச் சர்ச்சைகளும் தி.மு.க-வுக்கு மைனஸ்.

எடப்பாடி தொகுதியில் ஏற்கெனவே நான்கு முறை வெற்றிபெற்றுள்ளார் பழனிசாமி. இந்தமுறை முதல்வர் வேட்பாளர் அந்தஸ்து, பணபலம், பா.ம.க-வுடனான கூட்டணி பலம், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு அறிவித்தது ஆகியவற்றைத் தனக்கான பலமாகக்கொண்டு களத்தைச் சந்திக்கிறார் பழனிசாமி. தொகுதிக்குள் கட்டப்பஞ்சாயத்து, ரெளடியிசம் இல்லாதது, மாவட்டத் தலைநகரங்களுக்கு இணையாக அடிப்படை வசதிகளைச் செய்து தந்திருப்பது பழனிசாமிக்கு ப்ளஸ். காவிரி உபரிநீர்த் திட்டம் தொகுதி மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பெரும்பாலான அரசுத்துறை அலுவலகங்களின் மாவட்டத் தலைமையகங்களை தொகுதிக்குள் கொண்டு வந்திருக்கிறார். அதேசமயம் தொகுதியிலுள்ள அரசு அலுவலகங்கள், அரசு ஒப்பந்தப் பணிகளில் முதல்வரின் சமுதாயத்தினரே ஆதிக்கம் செலுத்திவருவதால், பிற சமூகத்தினரின் அதிருப்தி நிலவுகிறது.

சம்பத்குமார்
சம்பத்குமார்

பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷும், தொகுதிப் பொறுப்பாளர் செல்லதுரையும் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை என்று கட்சியினரே குமுறுகிறார்கள். மேலும், எடப்பாடி நகரச் செயலாளர் ராமன், ஒன்றியச் செயலாளர் மாதேஸ்வரன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் எமரால்ட் வெங்கடாசலம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கட்சியைவிட்டே நீக்கப்பட்டிருப்பதும் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கட்சி வட்டாரத்தில் நெருக்கடி முற்றுவதால், அதை ஈடுகட்டும் பொருட்டு, சுமார் ஒன்றரை லட்சம் சேலைகளை வீடு வீடாக விநியோகித்திருக்கிறது எடப்பாடி தரப்பு. 25 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் ஆட்களையும் நியமித்து ‘மைக்ரோ லெவல்’ வியூகம் வகுத்திருக்கிறார் பழனிசாமி. இதையே எடப்பாடி மலை போல நம்புகிறார்.

அடுத்த கட்டுரைக்கு