Published:Updated:

`நான் மட்டும்தான் ராஜா!' எம்.ஜி.ஆர். பாணியில் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரோனா பாதிப்பு துவங்கிய பின், இரண்டு வாரங்களாக ஸ்டாலின் அறிக்கைகளில் மட்டுமே அதிரடி காட்டி வருகிறார். கட்சிக்காரர்களிடம் வீடியோ காலில் மட்டுமே பேசிவருகிறார். ஆனால், எடப்பாடி நேரடிப் பேட்டி, அம்மா உணவகத்துக்கு நேரடி விசிட் என்று மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

"நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக உங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பேசுகிறேன்” என்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தடுப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றியபோது முதல்வர் சொல்லிய வார்த்தைகள். தனது தனித்துவ அடையாளத்தை கொரோனா பிரச்னையில் முதல்வர் நிரூபித்துவருகிறார் என்று சிலாகிக்க ஆரம்பித்துள்ளார் அ.தி.மு.க நிர்வாகிகள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவாகிவிட்டன. பதவியேற்கும்போது தமிழகத்தின் மக்கள் தன்னை ஒரு கைப்பாவையாகப் பார்த்ததை எடப்பாடி அறியாமல் இல்லை. ஆனால், இன்று அதே தமிழக மக்களிடம் தான் தனித்துவமான தலைவன் என்பதை நிரூபணம் செய்ய பகீரத முயற்சிகளைச் செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக அவர் இதற்கு முன்பு எடுத்த முயற்சிகள் பல. ஆனால் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையை, தன் ஆளுமையை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான வாய்ப்பாக எடப்பாடி கருதுவது நன்றாகத் தெரிகிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஒருபக்கம் அதிகரித்தாலும், அந்த பாதிப்பு பரவலாகாதபடி சில முடிவுகளை ஆரம்பத்திலேயே எடப்பாடி மேற்கொண்டதை யாரும் மறுக்கமுடியாது என்கிறார்கள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்.

கொரோனா தமிழகத்துக்குள் என்ட்ரி கொடுத்த நேரத்தில்தான் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரும் தொடங்கியது. கொரோனா விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்பினார் துரைமுருகன். "எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்று அவர் கேட்க, "தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன. கொரோனா வந்தாலும், அதை எதிர்கொள்ளும் திறனுடன் தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடு இருக்கும்” என்று தெளிவாகப் பதில் கொடுத்தார் எடப்பாடி.

ஆனால், அவர் சொன்னதற்கு மாறாக இன்று இந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். ஆனால், எடப்பாடி அரசு சில விஷயங்களில் மிகவும் துணிச்சலாக செயல்படாமல் இருந்திருந்தால் இந்தத் தாக்கம் இன்னும் அதிகரித்திருக்கும்.

சட்டமன்ற கூட்டத்தொடர் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோதே கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பற்றிப் பரவ ஆரம்பித்தது. உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முதலில் ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குக் கட்டுப்பாடு என்று அதிரடியாக சில நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதைப் பார்த்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் "வருமுன் காப்போம் என இந்த அரசு எடுக்கும் முயற்சிகளை வரவேற்கிறேன்” என்றார். இதையும் எடப்பாடி தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். குறிப்பாக கொரோனா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நீண்ட பதிலை அவையில் கொடுத்த பிறகு அதற்கு பன்ச் வைப்பதுபோல தினமும் முதல்வர் ஏதாவது ஓர் அறிவிப்பை வெளியிட்டு கிட்டத்தட்ட ஜெயலலிதா பாணியில் `எனது அரசு’ என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார்.

துரைமுருகன் - எடப்பாடி பழனிசாமி
துரைமுருகன் - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது, "மக்கள் பிரதிநிதிகள் நாமே பணியாற்றாமல் போனால், மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும்” என்று எதிர்க்கட்சியினரின் வாயை அடைத்தார். பொதுநலநோக்கோடு எதிர்க்கட்சிகள் சொன்னால், அதில் உள்ள அரசியலை வைத்து ஆழம் பார்த்தார் எடப்பாடி. அவர்கள் சொல்லி நாம் செய்வதா என்கிற எண்ணத்தில் முதலில் ஒத்திவைக்க மறுத்தார். ஆனால், சமூகப்பரவலைத் தடுக்க வேண்டுமென்ற விழிப்புணர்வு ஓங்கி ஒலித்ததும் தனது எண்ணப்படி ஒரே நாளில் இருபது துறைகளின் மசோதாவை நிறைவேற்ற அனைத்துத் துறைகளுக்கும் நிதி ஒக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்து அவசரமாக அவையை முடித்தார்.

இப்படியாக மாநில அளவில் மட்டுமன்றி அகில இந்திய அளவிலும் சில முடிவுகளை துணிச்சலாக எடுத்துள்ளார் எடப்பாடி என்று சிலாகிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதற்கு அவர்கள் எடுத்துச் சொல்லும் காரணங்களும் அழுத்தமானவை.

"மத்திய அரசு ஆரம்பத்தில் மூன்று மாவட்டங்களை மட்டுமே கட்டுப்பாட்டில்கொண்டு வர ஆலோசனை கொடுத்தது. ஆனால், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு `தமிழகம் முழுவதும் மாவட்ட எல்லைகள் சீல் செய்யப்படும்; 144 தடை உத்தரவு போடப்படும்’ என்று அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர். கேரளாவுக்குப் பிறகு பன்னாட்டு விமான சேவையை முடக்கியதும் தமிழகமே. அதற்குப் பிறகுதான் இந்தியா முழுவதும் பன்னாட்டு விமானசேவை முடக்கப்பட்டது. இப்படி அதிரடியாக நடவடிக்கை எடுத்த நேரத்தில் அவர் மீது சில கடுமையான விமர்சனங்களும் எழாமல் இல்லை. குறிப்பாக முன் ஆலோசனையின்றி ஊரடங்கு உத்தரவு போட்டதால் ஒரே நாளில் சென்னையிலிருந்து வெளியூர் செல்ல முடியாமல் தவித்தவர்கள் ஏராளம். ஆனால், வடமாநிலம் போன்று இங்கு நடந்து செல்ல யாரும் எத்தனிக்கவில்லை.

ஹெலிகேமரா உதவி கொண்டு சுற்றுப்பகுதியை பார்வையிடும் காவல்துறை.
ஹெலிகேமரா உதவி கொண்டு சுற்றுப்பகுதியை பார்வையிடும் காவல்துறை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தும் அது மூன்றாம் கட்டமான சமூகப்பரவலாக மாறாமல் இருப்பதற்கு தமிழக அரசின் செயல்பாடுகளும் முக்கியக் காரணங்களாக இருந்தன என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதனால்தான் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்க முடியாமல் தி.மு.க திணறுகிறது என்றும் ஆளும்கட்சியினர் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ஒட்டுமொத்தமாக அரசியல் சதுரங்கத்தில் எடப்பாடிக்கு சாதகமாகவே காய்கள் நகர்கின்றன என்பதை தி.மு.க-வினரே ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசின் ஆதரவு இல்லாமலிருந்தால் எடப்பாடியால் இந்த பர்ஃபாமன்ஸ் தரமுடியாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இதை உடைக்கவும் எடப்பாடி சில வேலைகளைச் செய்கிறார்.

ஊரடங்கு உத்தரவு பற்றி பிரதமர் ஒருபுறம் உரையாற்ற, அதற்குப் பிறகு தமிழக மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக ஓர் உரையை நிகழ்த்தினார் எடப்பாடி. அந்த உரையின் துவக்கத்திலேயே `உங்கள் குடும்பத்தில் ஒருவன்’ என்று எம்.ஜி.ஆர் பாணியில் சென்டிமென்ட் ஆகப் பேச்சை ஆரம்பித்தார். ஒருபுறம் தனது எண்ணங்களை தமிழகத்தின் திட்டங்களாகச் செயல்படுத்திக்கொண்டே மறுபுறம் மத்திய அரசுக்கு இணங்கிப்போவது என்கிற எம்.ஜி.ஆர் காலத்து அரசியலை கச்சிதமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டார் எடப்பாடி. எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தவரை மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணக்கமாகி அரசியல் நடத்தும் பாணியை வைத்திருந்தார். அதை இப்போது எடப்பாடியும் செய்துவருவதாக அவருடைய ஆதரவாளர்கள் பெருமையாகப் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
சென்னையைக் குளிர்வித்த திடீர் மழை! #NowAtVikatan

எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் கதாநாயகனாக தன்னை முன்னிறுத்திக்கொண்டதுபோலவே ஆட்சியிலும் தன்னையே முன்னிலைப்படுத்திக்கொள்வார். அமைச்சர்களைக் கொஞ்சம் தள்ளியே வைத்தார். அதேபோல் இப்போது எடப்பாடியும் தன்னைச் சுற்றியே இந்த ஆட்சி சக்கரம் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதை அனைத்து அமைச்சர்களும் உணர்ந்துவிட்டார்கள்.

கொரோனா விவகாரத்தில் ஆரம்பத்தில் கோல் போட்ட அமைச்சர் விஜயபாஸ்கரை ஓரம்கட்டிவிட்டு அந்த இடத்தில் பீலா ராஜேஷை கொண்டுவந்தது முதல்வரின் கைங்கர்யம்தான் என்கிறார்கள். அதேபோல் கொரோனா விவகாரத்தில் எந்த முக்கிய அறிவிப்பையும் வேறு எந்த அமைச்சரையும் வெளியிட எடப்பாடி அனுமதிப்பதில்லை.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு வந்த நேரத்தில், கீழ்த்தட்டு மக்களுக்கு என்ன செய்வது என்று தேசமே தவித்த நேரத்தில், கேரளா அரசு முந்திக்கொண்டு சில நிதியுதவிகளை அறிவித்தது. சற்றும் யோசிக்காமல் அதே பாலிசியை கையில் எடுத்த எடப்பாடி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்தார். அடுத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி என்று அறிவித்தார். இதுவும் ஏறத்தாழ எம்.ஜி.ஆரின் பாணிதான்.

இவை எல்லாவற்றையும்விட, ஊரடங்கு அறிவித்தபின், பல்வேறு மாநிலங்களில் சட்டம்–ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தமிழகத்தில் பெரிய அளவில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. கொரோனா விவகாரத்தில் பேட்டி கொடுக்க பிரதமரே தயங்கிவந்த நிலையில், கடந்த திங்கள் அன்று எடப்பாடி தானாகவே முன் வந்து பேட்டி கொடுத்தார். இவை அனைத்தையும் அ.தி.மு.க-வினர் சொல்லி்ச் சொல்லி கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

கொரோனா பாதிப்பு துவங்கிய பின், இரண்டு வாரங்களாக ஸ்டாலின் அறிக்கைகளில் மட்டுமே அதிரடி காட்டி வருகிறார். கட்சிக்காரர்களிடம் வீடியோ காலில் மட்டுமே பேசிவருகிறார். ஆனால், எடப்பாடி நேரடிப் பேட்டி, அம்மா உணவகத்துக்கு நேரடி விசிட் என்று மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தனது தொகுதி நிதியிலிருந்து கரூர் மருத்துவக்கல்லூரிக்கு அளித்த தொகையை அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதற்கு எதிர்வினையாற்றிய எடப்பாடி, `அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் கொரோனா நிவாரணத்துக்குப் பயன்படுத்தப்படும்’ என்று அறிவித்து தி.மு.க உறுப்பினர்களின் கமிஷனுக்கு செக் வைத்தார்.

மிஸ்டர் கழுகு: மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு... விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி?

அத்துடன், "ஒரு எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலினுக்கு தெரியாதது இல்லை. சட்டமன்ற உறுப்பினர் அவர் தொகுதிக்குள் உள்ள பகுதியில் மட்டுமே அவர் நிதியை செலவு செய்யமுடியும்” என்று அறிக்கை அளித்து ஸ்டாலினையும் உஷ்ணப்படுத்தினார். இஸ்லாமியர்களால்தான் கொரோனா பரவுகிறது என்கிற கருத்து வலுவாக வலம் வந்த நேரத்தில் `நோய்க்கு மதச்சாயம் பூச வேண்டாம்’ என்றும் அழுத்தமாகப் பதிவுசெய்தார் எடப்பாடி. அதே நேரத்தில் `டெல்லி சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்துகொள்ளுங்கள்’ என்று முதல்வருக்கான தன் கடமையையும் அவர் செய்ய மறக்கவில்லை. இதெல்லாம் எடப்பாடிக்கு தமிழக மக்களிடத்தில் தனிப்பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் திட்டவட்டமாக நம்புகின்றனர்.

கடந்த 10 நாள்களில் மட்டும் எடப்பாடியின் ட்விட்டர் அக்கவுன்ட்டில் ஒன்றரை லட்சம் புதிய நபர்கள் பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள். இதுவே எடப்பாடியின் பப்ளிசிட்டிக்கு போதும் என்கிறார்கள் அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள்.

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

துணை முதல்வராக தமிழகம் முழுவதும் வலம் வரத்துவங்கிய ஓ.பன்னீர் செல்வத்தை தேனியை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள் போதும் என்று அவரை கடந்த 10 நாள்களாக அந்த மாவட்டத்திலேயே பணியாற்றும் நிலையை ஏற்படுத்திவிட்டு ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தன்வயப்படுத்தியிருக்கிறார். இதற்குப் பின்னால் பெரிய டீம் ஒன்று எடப்பாடிக்கு ஐடியா கொடுக்கிறது என்கிறார்கள். அவரது பேச்சு, அரசியல் நடவடிக்கை எல்லாம் இப்போது வேகம் எடுப்பதற்குக் காரணமும் அதுதான் என்கிறார்கள்.

அவருடைய இந்த முயற்சிக்கு டானிக்காக மாறியிருக்கிறது இந்த கொரோனா விவகாரம். எடப்பாடியின் எதிர்கால எண்ணமே அடுத்த சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி vs ஸ்டாலின் என்று களம் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். அதற்குத்தான் இத்தனை அல்டிமேட் திட்டங்களைச் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் முதல்வரின் விசுவாசிகள்.

கொரோனா... அரசியலிலும் பலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமோ?

அடுத்த கட்டுரைக்கு