Published:Updated:

‘‘நீங்க அமைச்சரா... இல்ல உங்க மகன் அமைச்சரா?’’

அ.சையது அபுதாஹிர்
கார்த்திகேயன் மேடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எகிறிய எடப்பாடி... அதிர்ந்த அமைச்சர்கள்!
எகிறிய எடப்பாடி... அதிர்ந்த அமைச்சர்கள்!

எகிறிய எடப்பாடி... அதிர்ந்த அமைச்சர்கள்!

பிரீமியம் ஸ்டோரி

``ஒருகாலத்தில் ஜெயலலிதாவிடமிருந்து அழைப்பு வந்தாலே, அமைச்சர்கள் ஆடிப்போவார்கள்! அதிலும் ‘சண்டே டிரீட்மென்ட்’, ஜெ ஆட்சியில் பிரபலம். போயஸ் கார்டனுக்குள் நுழையும்போதே பலருக்கும் கால்கள் நடுங்கும். தற்போது அந்தளவுக்கு இல்லை என்றாலும், எடப்பாடி பழனிசாமி அதை நோக்கியே நகர்கிறார்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். சமீபத்தில் நடந்த அமைச்சர்கள் சந்திப்பை இதற்கு உதாரணம் காட்டுகிறார்கள் அவர்கள்!

ஞாயிற்றுக்கிழமைகளில், அமைச்சர்கள் சொந்த தொகுதியில் முகாமிடுவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, முதல்வரின் தனிச்செயலரிடமிருந்து அனைத்து அமைச்சர் களின் உதவியாளர்களுக்கும் அழைப்பு சென்றுள்ளது. ‘நாளை காலை தலைமைச் செயலகத்துக்கு அமைச்சர் கட்டாயம் வந்துவிடவேண்டும்’ என்று மட்டும் தகவல் சொல்லியிருக்கிறார்.

அதன்படி ஜனவரி 27-ம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆஜராகிவிட்டனர். முதலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனி அறையில் அரை மணி நேரம் ஆலோசித்தனர். மதியத்துக்குமேல் ஒவ்வோர் அமைச்சராக உள்ளே அழைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஃபைலை வைத்துக்கொண்டு, புள்ளிவிவரங்களுடன் கடுமையான பாணியில் தான் கிட்டத்தட்ட விசாரணையே நடந்திருக் கிறது.

பல அமைச்சர்களிடம் வழக்கம்போல் பேசிய எடப்பாடி, சில அமைச்சர்களிடம் கடுமை காட்டினாராம். மூத்த அமைச்சர் ஒருவரை ‘அண்ணே’ என்றே எடப்பாடி அழைப்பாராம். ஆனால் அன்று பேசியபோது, ‘‘உங்க மாவட்டத்துல உங்கமேல கட்சிக்காரங்க கடும் அதிருப்தியில இருக்காங்க. சொந்த மாவட்டத்திலேயே இவ்வளவு எதிர்ப்பு இருந்தா, எலெக்‌ஷன்ல ரிசல்ட் எப்படி வரும்?’’ என்று கடுமை காட்டினாராம். இதை எதிர்பார்க்காத அந்த அமைச்சர், அமைதியாக வெளியே வந்திருக்கிறார்.

பசுமையான அந்த அமைச்சர் நுழைந்தபோது ‘‘உங்களைப் பத்தி உளவுத்துறை சொல்லும் தகவல் எதுவுமே நல்லாயில்ல. விவசாயிங்க கிட்ட இருந்து நிறைய புகார் வருது. உங்க மாவட்டத்துல நீங்க அமைச்சரா... இல்ல உங்க மகன் அமைச்சரா?’’ என்று கண்டித்தாராம். பக்திப்பழமாக நுழைந்த அமைச்சர் ஒருவரிடம், ‘‘உங்க துறையில டெண்டர் உள்ளிட்ட எல்லா முடிவுகளையும் உங்க மகன்தான் எடுக்கிறார்னு புகார் வருது. சாமிக்கே இது அடுக்காது. இது நல்லதில்ல’’ என்று கடுமை காட்டப்பட்டதாம். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் அமைச்சர் ஒருவரிடம், ‘‘உங்க துறையை நல்லா வெச்சிருக்கீங்க. உங்கமேல இருக்கிற புகார்களை யும் கவனமா பாத்துக்கோங்க. ஐ.பி, சி.பி.ஐ எல்லாம் உங்களைப் பத்தி நிறைய ரிப்போர்ட் எடுத்திருக்கு’’ என்று கடுமை காட்டப் பட்டதாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜேந்திர பாலாஜியிடம், ‘‘தேவையில்லாம நீங்க பேசுற கருத்துகள் நம்ம ஆட்சிக்கே கெட்டபேரை வாங்கிக் கொடுக்குது. கவனமா பேசுங்க!’’ என்று அட்வைஸ் வழங்கினாராம். பாஸ்கரனிடம் எடுத்த எடுப்பிலேயே எகிறிய எடப்பாடி, ‘‘இவ்ளோ நாளா நீங்க அமைதியாத்தானே இருந்தீங்க... இப்போ ஏன் இப்படி சர்ச்சையைக் கிளப்புற மாதிரி பேசுறீங்க? கேபினட்ல பேசுற விஷயங்களை வெளியே சொல்லக் கூடாதுங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா?’’ என்று உஷ்ணமாகப் பேசினாராம்.

எகிறிய எடப்பாடி... அதிர்ந்த அமைச்சர்கள்!
எகிறிய எடப்பாடி... அதிர்ந்த அமைச்சர்கள்!

மூத்த அமைச்சர்கள் சிலர், ‘‘சி.ஏ.ஏ விஷயத்துல நாம பி.ஜே.பி-க்கு ஆதரவா செயல்பட்டது சரியில்ல. நம்ம வாக்குவங்கி சரிவுக்குக் காரணம் அதுதான்’’ என்று சொன்னார்களாம். அதற்கு, ‘`பொறுமையா யோசிச்சு முடிவெடுப்போம்’’ என்று எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்டதாம்.

அதேசமயம் சில முக்கியமான அமைச்சர்களிடம் மட்டும் சி.ஏ.ஏ தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.

சி.ஏ.ஏ-வை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் என்ன என்பது குறித்தும் அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்திருக் கிறார்களாம்.

தமிழகத்தில் விரைவில் ஏதோ அதிரடியாக நிகழப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு