‘ஆட்சிமன்றக் குழு பரீசிலித்து எடுத்த முடிவின்படி, சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக விக்கிரவாண்டிக்கு முத்தமிழ்செல்வனும், நாங்குநேரிக்கு நாராயணனும் நிறுத்தப்படுகின்றனர்’ என்று அறிவித்துள்ளது அ.தி.மு.க தலைமை. ‘ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடந்தது. பெயருக்குத்தான் குழுக் கூட்டம். முடிவெடுத்தது எடப்பாடி மட்டுமே’ என்கிறார்கள் கட்சியின் உள்விவரங்களை அறிந்தவர்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே, யார் வேட்பாளர் என்ற ரேஸ் அ.தி.மு.க-வில் தொடங்கிவிட்டது. ஆளுங் கட்சியாக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணம். தமிழகத்தில் இரண்டு தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மூன்று தொகுதிகளுக்கும் அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. நூற்றுக்கும் அதிகமான விருப்ப மனுக்களை ஆய்வுசெய்து நேர்காணலை நடத்தியது கட்சியின் ஆட்சிமன்றக் குழு.
குழுவினர் நேர்காணல் நடத்தினாலும், கேள்விகள் கேட்டதெல்லாம் எடப்பாடி தரப்புதான். மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலை இருந்திருக்கிறது. வேட்பாளர்கள் தேர்வுக்குப் பின்னால் நடந்த பல்வேறு உரசல்களை விளக்கினார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் சிலரும் இந்த முறை சட்டமன்றத்தில் வாய்ப்பு கேட்டிருந்தார்கள். விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் லெட்சுமணன், ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தவர். அவர் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். நேர்காணலில் எடப்பாடியிடம், ‘ஐந்து கோடி ரூபாய் வரை செலவு செய்ய தயார்’ என்று குறிப்பிட்டிருந்தாராம். அதே நேரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பு, `எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டத்தில், நாங்கள் சொல்பவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும்’ எனப் பிடிவாதமாக இருந்துள்ளது. வேறு அமைச்சராக இருந்தால், எடப்பாடி வேறுமாதிரி ரியாக்ஷன் காட்டிவிடுவார். சண்முகம் பல நேரங்களில் எடப்பாடியிடமே எகிறிவிடுவார் என்பதால், அவர் விஷயத்தில் எடப்பாடியும் கொஞ்சம் அடக்கியேவாசித்திருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
லெட்சுமணன் ஐந்து கோடி ரூபாய் செலவு செய்வதாகச் சொன்ன தகவல் சண்முகம் தரப்புக்குத் தெரிந்ததும், நேர்காணலில் வைத்தே எடப்பாடி தரப்பிடம், ‘அமைச்சர் சொல்லும் நபருக்கு சீட் கொடுங்கள். எத்தனை கோடிகள் என்றாலும் நாங்கள் பார்த்துக்
கொள்கிறோம்’ என்று கூறப்பட்டதாம். இதனால், சண்முகம் தரப்பு கைகாட்டிய வேட்பாளரான முத்தமிழ்ச்செல்வனை தேர்வுசெய்தார் எடப்பாடி. லெட்சுமணன், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக அறியப்படுபவர். பன்னீர்செல்வத்திடம் அவர் முறையிட்டதற்கு, ‘நீங்கள் முதல்வரிடம் போய்ப் பேசுங்கள்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்’’ என்றார்கள்.

நாங்குநேரி தொகுதியைப் பற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம். ‘‘இந்தத் தொகுதியில் கணிசமான அளவில் கிறிஸ்துவர்கள் வசிப்பதால் தனக்கு வாய்ப்பு வேண்டும் என்று முன்னாள் எம்.பி-யான மனோஜ் பாண்டியன் கேட்டிருந்தார். அவருக்கு ஓ.பி.எஸ் தரப்பும், சில நாடார் அமைப்புகளும் ஆதரவாக இருந்தன. ஆனால், சசிகலாவுக்கு எதிரானவர் மனோஜ் பாண்டியன் என்பதால், ‘எதிர்காலத்தில் உங்களுக்கும் சிக்கலாகும்’ என்று எடப்பாடியிடம் பற்றவைத்த தளவாய் சுந்தரம் தரப்பு, ‘முன்னாள் எம்.பி-யான பிரபாகருக்கு வாய்ப்பு கொடுங்கள். அவரும் இந்து நாடார்தான்’ என்று காய் நகர்த்தியுள்ளார். மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுப்பதைத் தடுக்க நினைத்தவர்கள், இந்து நாடாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று எடப்பாடியிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
ஒருகட்டத்தில கடுப்பான மனோஜ் பாண்டியன், ‘கன்னியாகுமரியிலிருந்து இங்கு வந்து தளவாய் சுந்தரம் லாபி செய்கிறார். நீங்கள் அவரைக் கேட்டு முடிவு எடுப்பீர்களா?’ என்று எகிறியுள்ளார். இதனால் இரு தரப்பையும் ஓரம்கட்டிவிட்டு, நேர்காணலுக்கு வந்தவர்களின் பட்டியலை உளவுத்துறையிடம் கொடுத்து விசாரித்துள்ளார் எடப்பாடி. அவர்கள் கொடுத்த பெயர்தான் நாராயணன்’’ என்றனர்.
கணேசன், பெரியபெருமாள் ஆகிய இருவரின் பெயரை மட்டுமே ஆட்சிமன்றக் குழு இறுதியாகக் கொடுத்துள்ளது. ஆனால், லிஸ்ட்டில் இல்லாத பெயராக நாராயணன் பெயர் அறிவிக்கப்பட்டதில் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
நாங்குநேரியில் அமைச்சர் தங்கமணி தலைமையிலும், விக்கிரவாண்டியில் அமைச்சர் சண்முகம் தலைமையிலும் களப்பணியில் கலக்கப் போகிறார்களாம். பட்ஜெட்... தொகுதிக்கு 50 கோடி ரூபாய் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!