Published:Updated:

மாஸ் லீடர்... துரோகிப் பட்டம்... எலிமினேஷன் ரவுண்டில் அ.தி.மு.க!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி தரப்புக்கு பா.ஜ.க தயவு தேவை என்பதாலும் கூட்டணியில் இருப்பதாலும், பன்னீர் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார் என்று குற்றம் சுமத்தமுடியாது.

மாஸ் லீடர்... துரோகிப் பட்டம்... எலிமினேஷன் ரவுண்டில் அ.தி.மு.க!

எடப்பாடி தரப்புக்கு பா.ஜ.க தயவு தேவை என்பதாலும் கூட்டணியில் இருப்பதாலும், பன்னீர் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார் என்று குற்றம் சுமத்தமுடியாது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

இலங்கையில் அதிகாரத்தை எதிர்த்து அதிபரின் ‘அலரி மாளிகை’ போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட இரண்டு நாள்களில், சென்னையில் அதிகாரத்தைக் கைப்பற்ற அ.தி.மு.க தலைமைக்கழகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் ஒரு முற்றுகை நடந்திருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுக்குழு வானகரம் வாரு திருமண மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் போதே, ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க தலைமைக் கழகத்தைக் கைப்பற்றும் நோக்கில் முற்றுகையிட்டனர்.

அதேநேரத்தில், அங்கே பொதுக்குழுவில் ‘ஆரம்பிக்கலாங்களா?' என்று ஒற்றைத் தலைமைக்கான ஆட்டத்தை ஆரம்பித்து, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தனக்கு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அங்கிருந்து பன்னீரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி அறிவித்தார். கட்சி அலுவலகத்தில் இருந்தபடி, எடப்பாடியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக பன்னீர் அறிவித்தார். இந்த எலிமினேஷன் ரவுண்டுக்குப் பிறகு பன்னீர் ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்திருக்கிறது வருவாய்த் துறை.

மாஸ் லீடர்... துரோகிப் பட்டம்... எலிமினேஷன் ரவுண்டில் அ.தி.மு.க!

ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு பொதுக்குழுக்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக இந்த ஆட்டத்தை முடித்து, பாதுகாப்பாகத் தலைமைப்பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்ற வேகம் அதில் தெரிந்தது.

ஜூலை 11 அன்று நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது இரண்டு தரப்புமே திட்டமிட்டபடி தங்களுக்கு வேண்டியதைச் சாதித்திருக்கின்றன. ஏற்கெனவே, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதும் சரி, முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதும் சரி, எதிர்க்கட்சித் தலைவரானபோதும் சரி, ஒற்றைத்தலைமைக்கான முன்னெடுப்பைப் படிப்படியாகச் செய்துவந்தார். அந்த நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி நடந்த பொதுக் குழுவிலேயே தன்னை ஒற்றைத்தலைமையாக நிரூபித்துக்கொள்ள நினைத்தார். ஆனால், கடைசி நேரத்தில் வெளியான நீதிமன்றத் தீர்ப்பால் அது நிறைவேறாமல்போனது.

அதன்பிறகு சட்ட ரீதியிலான நடவடிக்கையை சரியாகக் கையாண்ட எடப்பாடி தரப்பு, உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று பொதுக்குழு நடத்துவதற்கான எந்தத் தடையும் இல்லை என்ற தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பெற்றனர்.

பன்னீர் தரப்பினரின் சட்டரீதியான முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வடையத் தொடங்கியதும், பொதுக்குழு நடக்கும் தினத்தன்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தை முற்றுகையிட முடிவுசெய்தனர். இதன் மூலம் தனது ஆளுமையை நிரூபிப்பதுடன், தனது ஆதரவாளர்களைக்கொண்டு பிரச்னையை ஏற்படுத்தி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்துவிடவேண்டும் என்பது பன்னீரின் திட்டமாக இருந்தது. தற்போது அதுதான் நடந்திருக்கிறது. அதேபோல, எடப்பாடி தரப்பும், பொதுக்குழுவில் பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தைத் திட்டமிட்டபடி சாதித்திருக்கிறது.

பொதுக்குழு முடிவுகளை எடப்பாடி தரப்பு தேர்தல் ஆணையத்தில் கொடுக்க, அதை எதிர்த்துப் பன்னீர் தரப்பும் முறையிட்டிருக்கிறது. இதுவரை கோர்ட்டில் நடந்த பலப்பரீட்சை இனி தேர்தல் ஆணையத்தில் நடக்கும்.

தற்போது பன்னீரை அ.தி.மு.க-விலிருந்து நீக்கியிருப்பதால், அடுத்தகட்டமாக பா.ஜ.க-வின் மறைமுக ஆதரவுடன் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவது, இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவது போன்ற நடவடிக்கைகளில் பன்னீர் தரப்பு இறங்கும். மைதானத்தைச் சுருக்கி ஒரு மூலையில் தள்ளப்பட்டிருக்கும் பன்னீர் இனி என்ன செய்வார், அதை எடப்பாடி தரப்பு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதெல்லாம் சுவாரசியமான காட்சிகளாகத் தமிழக மக்கள் முன்பு நிகழும்.

மாஸ் லீடர்... துரோகிப் பட்டம்... எலிமினேஷன் ரவுண்டில் அ.தி.மு.க!

பன்னீரைக் கட்சியை விட்டு நீக்கும் முடிவு என்பது இப்போது எடுக்கப்பட்டது அல்ல. அவர் எப்போது மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் தனக்கான பங்கைக் கொடுக்கவேண்டும் என்று கேட்டாரோ, எப்போது அ.தி.மு.க பொதுக்குழுவுக்குத் தடைகோரி நீதிமன்றத்துக்குச் சென்றாரோ அப்போதே பன்னீரை நீக்கு வதற்கான ரகசியத்திட்டமும் தீட்டப்பட்டு விட்டது. அதன்படி, பன்னீருக்கு துரோகிப் பட்டம் சுமத்துவதற்கான முன்னெடுப்புகளை வெளியில் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றோரும், பொதுக்குழுவில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் போன்றோரும் முன்னெடுத்தனர். பொதுக்குழு முடிந்தபிறகு, ‘ஓ.பி.எஸ் சுயநலவாதி. தி.மு.க-வின் கைக்கூலி' என்று எடப்பாடியே அதிரடியாகக் குற்றம் சுமத்தினார்.

எடப்பாடி தரப்புக்கு பா.ஜ.க தயவு தேவை என்பதாலும் கூட்டணியில் இருப்பதாலும், பன்னீர் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார் என்று குற்றம் சுமத்தமுடியாது. எனவே, அ.தி.மு.கவுக்கு நேரெதிராக இருக்கும் `தி.மு.க.வுடன் பன்னீர் தொடர்பில் இருக்கிறார்' என்று கூறினால் தொண்டர்கள் மத்தியில் பன்னீருக்கு எதிர்ப்பு கூடும் என நினைத்த எடப்பாடி தரப்பு அதன்படியே பரப்பியது. தற்போது கட்சியை விட்டும் நீக்கியிருக்கிறது. இனி பன்னீர் தரப்பால் தங்களுக்கு இடையூறு இருக்காது என்றும் எடப்பாடி தரப்பு கருதுகிறது.

அதேநேரம் பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் தகவல் முந்தைய நாளே எடப்பாடி தரப்புக்கும் கசிந்தது. ஆனால் “முற்றுகையிடட்டும். அப்போதுதான் கடந்த பொதுக்குழுவில் அவமரியாதை செய்யப்பட்டதாகப் பன்னீர்மீது கட்சிக்குள் எழுந்த அனுதாப அலை குறையும்” என எடப்பாடி தரப்பு நினைத்து, பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை.

இன்னும் நான்கு மாதங்களுக்குள் நிரந்தரப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த இடத்தை அடைவதற்கு எடப்பாடிக்குப் பெரிதாக எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். ஒரு மாவட்டச் செயலாளர் ஒரு வேட்பாளரை மட்டுமே முன்மொழியவும், வழிமொழியவும் முடியும்' என்று புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி எடப்பாடி அநேகமாக போட்டியின்றியே தேர்வாகலாம்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற `மாஸ் லீடர்' எனும் பிம்ப அரசியல்தான் முன்னிலை வகிக்கும். அப்படியொரு `மாஸ் லீடரை' தேர்ந்தெடுக்கும் போட்டிதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் புதுப்புதுப் பட்டங்களுடன் எடப்பாடி பழனிசாமிக்குத் தமிழகம் முழுக்க ஃபிளெக்ஸ்கள் வைக்கப்படலாம். ‘‘எம்.ஜி.ஆர். ஐந்து, பத்து நிமிடங்களில் ஐம்பது, நூறு தொண்டர்களைச் சந்தித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார். ஆனால், ஐந்து, பத்து நிமிடங்களில் ஐந்நூறு தொண்டர்களைச் சந்தித்து மகிழ்ச்சிப்படுத்துபவர் எடப்பாடி பழனிசாமி'' என்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொன்னது அதற்கான ஒருசோற்றுப் பதம்.

எடப்பாடியிடம் அதிகாரச் செங்கோலைக் கொடுக்கும் அவசரத்தில், ‘இனி ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர்' என்ற ஏற்பாட்டையும் மாற்றி, அவரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிட அதிக அதிகாரங்கள் கொண்ட பொதுச் செயலாளராக இன்னும் நான்கு மாதங்களில் எடப்பாடி பழனிசாமி மாறியிருப்பார். ஜெயலலிதா காலத்தில்கூட கட்சியின் பொருளாளருக்கு இருந்த வரவு-செலவு அதிகாரங்கள் இப்போது பொதுச் செயலாளருக்கு மாற்றப்பட்டுள்ளது. துணைப் பொதுச் செயலாளரையும் அவரே நியமிக்கலாம். ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் ஒரே சமயத்தில் இருந்த பன்னீர்செல்வத்தை வைத்துக்கொண்டு பெற்ற அனுபவங்கள் எடப்பாடியை இப்படி மாற்றியிருக்கிறது.

மாஸ் லீடர்... துரோகிப் பட்டம்... எலிமினேஷன் ரவுண்டில் அ.தி.மு.க!

அ.தி.மு.க என்ற அரசியல் இயக்கத்தில் கட்சி இரண்டு அணியாகப் பிரிவது, சின்னம் முடங்குவது, கட்சித் தலைமைக் கழகத்துக்கு சீல் வைப்பது, கட்சியில் உள்ள தலைவர்களுக்கு துரோகிப் பட்டம் சுமத்துவது என்பவை யெல்லாம் வழிநெடுகிலும் வந்துகொண்டிருப்பவைதான். எஸ்.டி.எஸ்., ஆர்.எம்.வீரப்பன் தொடங்கி திருநாவுக்கரசு, சசிகலா, தினகரன் எனப் பலருக்கும் துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவுள்ள சூழ்நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது தொண்டர்கள் மத்தியில் வேதனையாகப் பார்க்கப்படுகிறது.

எடப்பாடி, பன்னீர் என்று இருதரப்பிலும் கட்சியை விட்டு நீக்கும் படலம் இனி தொடர்ந்துகொண்டே இருக்கக்கூடும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேர்தல்கள் எதுவும் இல்லாததால், இந்த ஆட்டத்துக்கு உடனடி முடிவும் ஏற்படாது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க-வின் தேவையைப் பொறுத்து இந்தக் காட்சிகள் மாறலாம். அப்போது டெல்லி என்ன முடிவு எடுக்கும் என்பதில்தான் அ.தி.மு.க-வின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.