அரசியல்
சமூகம்
Published:Updated:

“பதவியைப் பறிச்சிருவேன்!”

ராஜேந்திர பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேந்திர பாலாஜி

பாய்ந்த எடப்பாடி... பம்மிய ராஜேந்திர பாலாஜி

அதிரடிக்கு பேர்போன அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது ஆடிப்போயிருக்கிறார். ‘‘தமிழகத்தில் இந்து பயங்கரவாதம் உருவாவதைத் தடுக்க முடியாது’’ என்று அவர் கொளுத்திப்போட்ட திரி, அவருடைய பதவிக்கே வேட்டுவைத்துவிடும்போலிருக்கிறது.

ஜெயலலிதா இருக்கும் வரை இருந்த இடம் தெரியாமல் இருந்தவர், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சமீபகாலமாக அவர் பேசும் பேச்சுகள் அனைத்தும் ‘வேற லெவல்’ ரகம். தேனி எம்.பி-யான ரவீந்திரநாத் குமாரின் கார் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்துப் பேசிய அவர், ‘‘நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும். நாங்களும் சண்டைபோடுவோம்’’ என்றார். அப்போதே ராஜேந்திர பாலாஜியைக் கூப்பிட்டுக் கண்டித்து அனுப்பினாராம் முதல்வர் எடப்பாடி. ஆனால், அதற்கு எந்தப் பலனும் இல்லை.

அடுத்த சில தினங்களில் திருச்சி பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை குறித்து கருத்து தெரிவித்த ராஜேந்திர பாலாஜி ‘‘இந்துக்களைக் கொல்லும் வேலையைத் தொடர்ந்தால், அதற்கு தி.மு.க போன்ற கட்சிகள் ஒத்துழைத்தால், இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்று பேசி பரபரப்பு நெருப்பை மீண்டும் பற்றவைத்தார்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகள் சிலர், ‘‘அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ராஜேந்திர பாலாஜியை அழைத்துப் பேசினர். ‘உங்களால் கட்சிக்கு பெரிய சிக்கலாகிறது. நீங்கள் பேசுவதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. உங்களை பதவியிலிருந்து நீக்க முடியாது என நினைக்கிறீர்களா? உங்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார் எனத் தெரியும். இனியும் நீங்கள் இதுபோன்று பேசுவதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பேசுங்கள்’ என்று இருவருமே ஒருசேர பேசியிருக்கின்றனர். அதற்கு ராஜேந்திர பாலாஜியும், ‘அப்படியொரு நிலை வந்தால் ராஜினாமா செய்துகொள்கிறேன்’ என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டார்’’ என்றனர்.

அன்று மாலை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆவின் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் ராஜேந்திர பாலாஜியும் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ‘‘அரசியல்ரீதியாக என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம். துறைரீதியான கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேன்” என்றார் ராஜேந்திர பாலாஜி.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக, பா.ஜ.க தலைவர்களிடமும் ராஜேந்திர பாலாஜி பேசியதாகத் தெரிகிறது. ஒருவேளை தனக்கு எதிராக முதல்வர் நடவடிக்கை எடுக்கத் துணிந்தால், பா.ஜ.க தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் அவர். ஆனால், பால்வளத் துறைக்கு விரைவில் மாற்றம் வரலாம் என்கிற பேச்சுதான் இப்போது கோட்டையில் பலமாக அடிபடுகிறது.

பால் பொங்குவது சரி... பால்வளத் துறை அமைச்சர் பொங்கினால் என்னாகுமோ!