Published:Updated:

''அமித் ஷாவுக்கு பலத்த வரவேற்பு... பா.ஜ.க உதவியை மறக்கக் கூடாது'' - எடப்பாடியின் புது ரூட்!

அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி

நேற்று நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில், கழக ஆக்கப் பணிகள் குறித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்தும் விவாதித்திருக்கிறார்.

''அமித் ஷாவுக்கு பலத்த வரவேற்பு... பா.ஜ.க உதவியை மறக்கக் கூடாது'' - எடப்பாடியின் புது ரூட்!

நேற்று நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில், கழக ஆக்கப் பணிகள் குறித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்தும் விவாதித்திருக்கிறார்.

Published:Updated:
அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையில், அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று, நவம்பர் 20-ம் தேதி ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. அமைப்புரீதியாக இருக்கும் 73 மாவட்டச் செயலாளர்கள், தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் 30 மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், கழக மூத்த நிர்வாகிகள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மாலை 4:30 மணிக்குத் தொடங்கிய கூட்டம் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்தது.

பன்னீர் செல்வம் -எடப்பாடி பழனிசாமி
பன்னீர் செல்வம் -எடப்பாடி பழனிசாமி

கூட்டத்தில் கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும்போது, ``வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் கவனமா இருங்க. போலியான வாக்காளர்கள் இருந்தா, உடனடியா ரிப்போர்ட் பண்ணுங்க. பட்டியல்ல வாக்காளர்கள் பெயர் விடுபட்டிருந்தா, உடனடியாக அந்தந்தப் பொறுப்பு அதிகாரிகள்கிட்ட சொல்லி சரி பண்ணுங்க. வர்ற 2021 சட்டமன்றத் தேர்தல்ல, பல தொகுதிகள்ல நமக்கும் தி.மு.க-வுக்குமான வாக்கு வித்தியாசம் வெறும் ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகளாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். கவனமா இருக்க வேண்டிய நேரமிது” என்றாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவரைத் தொடர்ந்து நிர்வாகிகளிடம் பேசிய கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ``நமக்குள்ள எவ்வளவோ மனக்கசப்புகள் இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்துக்குள்ளேயும் ஏகப்பட்ட கோஷ்டிப் பூசல்கள் இருக்குறது எனக்குத் தெரியும். அதையெல்லாம் ஓரங்கட்டிட்டு, கட்சியைக் கரை சேர்க்குற வழியைப் பார்க்கணும். இந்த முறையும் நாம வெற்றியடைய நிறைய வாய்ப்புகள் இருக்கு. நம்ம பங்காளிச் சண்டையால அதைக் கோட்டைவிட்டுவிடக் கூடாது” என்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மண்டலத்திலும் நடத்தி முடிக்கப்பட்ட பாக முகவர்கள் கூட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. மண்டலப் பொறுப்பாளர்களின் பணிகள் குறித்து, முன்னாள் அமைச்சர் பொன்னையன் விளக்கியிருக்கிறார். இந்த விவாதங்களுக்குப் பிறகு, பா.ஜ.க உடனான கூட்டணி குறித்து மேலோட்டமாகப் பேசியிருக்கிறார்கள்.

அமித் ஷா
அமித் ஷா

தென்மாவட்டத்தைச் சேர்ந்த கழக அமைப்புச் செயலாளர் ஒருவர், ``பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதைத் தலைமை முடிவெடுத்துக்கொள்ளட்டும். ஆனால், அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் சீட்களை ஒதுக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க எவ்வளவு ஒதுக்குகிறதோ, அதை ஒப்பிட்டு ஒதுக்குவதுதான் சரி” என்றிருக்கிறார். அவர் பேசி முடித்ததும், மைக் பிடித்த கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ``நமக்கு பா.ஜ.க-காரங்க எவ்வளவோ உதவி பண்ணியிருக்காங்க. கடந்த சில வருஷத்துல இந்தக் கட்சி சந்திச்ச சவாலெல்லாம் எப்படிப்பட்டதுனு உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு சவாலையும் எதிர்நீச்சல் போட்டுக் கடக்குறதுக்கு பா.ஜ.க பெரும் துணையா இருந்திருக்கு. அதை நாம மறக்கக் கூடாது.

அமித் ஷாவோட கூட்டணி சம்பந்தமா பேசும்போது, நீங்க சொன்ன கருத்தையும் கவனத்துலவெச்சுகிட்டு பேசுவோம். சீட் பங்கீடுனு வரும்போது, நம்ம கட்சியோட பிடி நழுவாது. இந்தக் கூட்டணி அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியாகத்தான் இருக்கும்” என்றாராம். அமித் ஷா சென்னை வரும்போது அவருக்கு அ.தி.மு.க சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தி.நகர் சத்யா, பாலகங்கா, விருகை ரவி உள்ளிட்ட சென்னையிலிருக்கும் ஆறு மாவட்டச் செயலாளர்களிடம் வரவேற்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, வட்டத்துக்கு 200 பேர் வீதம், மாவட்டத்துக்கு 2,000 பேரைத் திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அமித் ஷா வருகை
அமித் ஷா வருகை

இதன்படி, இன்று நவம்பர் 21-ம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சுமார் 12,000 அ.தி.மு.க-வினர் திரண்டு வந்து, கையில் அ.தி.மு.க கொடியுடன் வரவேற்பளித்தனர். இன்றிரவு 6:30 மணிக்கு பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அமித் ஷா, 8 மணியிலிருந்து பார்வையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். அமித் ஷாவைச் சந்திக்க 35 பேருக்கு அப்பாயின்ட்மென்ட் அளிக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரவு 9 மணிக்கு மேல் அ.தி.மு.க தலைவர்களை அவர் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பில் கூட்டணி குறித்தும், அமைக்கப்பட வேண்டிய வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறதாம். முன்னதாக, மதிய விருந்தில் அமித் ஷாவோடு முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், டெல்லியில் சில அலுவல் வேலைகளை அமித் ஷா முடிக்க வேண்டியதிருந்ததால், இரவு விருந்துக்கு அ.தி.மு.க தலைவர்களை அவர் வரச் சொல்லிவிட்டாராம்.

இப்போதுவரை பா.ஜ.க-வுடன் கூட்டணி என்பதில் எடப்பாடி தீர்மானமாக இல்லை என்கிறது அ.தி.மு.க வட்டாரம். அதேநேரத்தில், நேரடியாக டெல்லியைப் பகைத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராக அரசியல் செய்யவும் அவர் விரும்பவில்லை என்கிறார்கள். மீனுக்கு தலையும், பாம்புக்கு வாலும் காட்டிக்கொண்டு புது ரூட் போடுகிறார் எடப்பாடி. இந்த ரூட்டில் அமித் ஷாவின் வருகை மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது, இன்றிரவு நடைபெறும் பேச்சுவார்த்தையில் தெரிந்துவிடும்.