Published:Updated:

`காங்கிரஸுக்கு இதைவிட வேறு அவமானம் இல்லை!'- பா.ம.கவை ஒப்பிட்டு விமர்சித்த எடப்பாடி

முதல்வர்
முதல்வர்

`ஸ்டாலின் 70 வயது வரை இளைஞரணிச் செயலாளராக இருந்தார். தற்போது அவருடைய பையன் உதயநிதி இளைஞரணிச் செயலாளராக இருக்கிறார். தி.மு.க வாரிசு அரசியல் செய்கிறார்கள். இங்கு வாரிசு அரசியல் கிடையாது'

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிகள் கலந்து கொண்டதுடன் பல்வேறு கட்சியிலிருந்து 2000-க்கும் மேற்பட்டவர்கள் விலகி அ.தி.மு.கவில் இணைந்தார்கள்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
எம். விஜயகுமார்

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``மிட்டா மிராசுதாரர்கள், தொழில் அதிபர்கள் மட்டுமே உயர் பதவிகளில் இருந்ததை மாற்றி ஏழை, எளிய மக்களும் உயர் பதவிக்கு வர முடியும் என மாற்றிக் காட்டியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அவர் திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்குத் தேசிய உணர்வையும் ஒழுக்கத்தையும் போதித்தார். தற்போது வரும் பாடல்களில் உயிரோட்டம் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆரின் பாடல்கள் இன்றும் உயிரோட்டமாக இருக்கிறது. `எம்.ஜி.ஆர் முகம் காட்டினால் 30 லட்சம் ஓட்டுகள் விழும்' என்று அண்ணா கூறினார்.

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அ.தி.மு.க என்ற இயக்கம் அழிந்து விடும் எனக் கருணாநிதி நினைத்தார். ஆனால் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்து, அம்மா ஆட்சிக்கு வந்ததும் இணைந்தது. அம்மா மறைவுக்குப் பிறகு கட்சி அழிந்து விடும் என நினைத்தார்கள். தமிழகத்தில் அதிகளவு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. அப்படிப்பட்ட கட்சியில் நான் முதல்வராகப் பதவியேற்றதும் 10 நாளில், ஒரு மாதத்தில், பட்ஜெட் கூட்டத்தில், மாநிலக் கோரிக்கை முடிந்ததும் கலைந்து விடும் என நினைத்தார்கள். ஆனால் நான் ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது ஸ்டாலின் அவர்களே...

இங்கு நான் மட்டும் முதலமைச்சர் இல்ல. இங்கு இருக்கும் எல்லோரும் முதலமைச்சர். இங்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே முதலமைச்சர் என ஸ்டாலின் நினைக்கிறார். இங்கு ஓராயிரம் பழனிசாமிகள் இருக்கிறார்கள். இங்கு சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும். ஆனால் தி.மு.கவில் ஸ்டாலின் மட்டுமே முதலமைச்சர். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு போதும் பலிக்காது. இங்கு சாதாரணமான சந்திரசேகருக்கு மாநிலப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.கவில் ஸ்டாலின் யாருக்கும் பொறுப்பை விட்டுக் கொடுக்க மாட்டார். ஸ்டாலின் 70 வயது வரை இளைஞரணிச் செயலாளராக இருந்தார். தற்போது அவருடைய பையன் உதயநிதி இளைஞரணிச் செயலாளராக இருக்கிறார். தி.மு.க வாரிசு அரசியல் செய்கிறார்கள். இங்கு வாரிசு அரசியல் கிடையாது.

கூட்டம்
கூட்டம்
எம். விஜயகுமார்

சமீபத்தில் தி.மு.க கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் `காங்கிரஸ் வாங்கு வங்கி இல்லாத கட்சி' என்றார். காங்கிரஸுக்கு இதை விட வேறு அவமானம் இருக்க முடியாது. எங்க கூட்டணியில் உள்ள பா.ம.க சேலம் உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த இடத்தில் வெற்றி பெற்றது. இருந்தாலும் சேலம் மாவட்ட ஊராட்சித் குழுத் தலைவர் பதவியைக் கொடுத்திருக்கிறோம். ஆனால், நூற்றாண்டு விழா கண்ட காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபமாக இருக்கிறது.

ஆளும் அ.தி.மு.க அரசு அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருந்து வருகிறது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தி.மு.க மத்தியில் கூட்டணியில் இருக்கும் போது கொண்டு வரப்பட்டது. அதில் 2 விஷயங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆதார் எண்ணையும் பெற்றோர் வசித்த இடத்தையும் குறிப்பிடச் சொல்லி இருக்கிறார்கள். அதுவும் விரும்புகின்றவர்கள் மட்டும் கொடுக்கலாம்.

இதை தி.மு.க அரசு அரசியலாக்கி சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு அம்மா அரசு அரணாக இருக்கும். கண்ணை இமைகள் காப்பது போலச் சிறுபான்மை மக்களை அ.தி.மு.க அரசு காக்கும்'' என்றார்.

பின் செல்ல