Election bannerElection banner
Published:Updated:

`ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் அழகிரிக்கே இந்த நிலைமை!'- ஸ்டாலின் மீது முதல்வர் கடும் விமர்சனம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கருணாநிதி முதலமைச்சர் ஆன பின்புதான் ஊழல் என்ற சொல்லே பிறந்தது. ஸ்டாலின் எவ்வளவுதான் விளக்கினாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிதான் என மக்கள் முடிவுவெடுத்துவிட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேச்சு.

``பல்லி, பாம்பைவிட எனக்கு விஷம் அதிகம் என்கிறார் ஸ்டாலின். யாருக்கு விஷம் அதிகம் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். தனக்கு நெருக்கடியாக அழகிரி இருப்பார் என்பதால் ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கே நல்லது செய்யாமல் அவரைக் கட்சியிலிருந்து விலக்கியிருக்கிறார் ஸ்டாலின். இவர் எப்படி அடுத்தவர்கள் வாழ நினைப்பார்...’’ என்று தி.மு.க-வினரைக் கடுமையாக விமர்சனம் செய்தார் எடப்பாடி.

வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம்
வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம்

திருச்சி மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளுக்கான அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான ஸ்ரீரங்கம் கு.ப.கிருஷ்ணன், திருச்சி மேற்கு தொகுதி பத்மநாபன், திருச்சி கிழக்குத் தொகுதி வெல்லமண்டி நடராஜன், மணப்பாறை சந்திரசேகர், திருவெறும்பூர் ப.குமார், மண்ணச்சநல்லூர் பரஞ்ஜோதி, முசிறி செல்வராஜ், துறையூர் இந்திரா காந்தி, லால்குடியில் கூட்டணிக் கட்சியான த.மா.கா வேட்பாளர் தர்மராஜ் ஆகியோரை மேடையில் அறிமுகம் செய்துவைத்தார் முதல்வர்.

அதன் பின்னர் பொதுமக்களிடம் பேசத் தொடங்கினார் முதல்வர் எடப்பாடி. ``அம்மாவின் ஆசியோடு தமிழகத்தைச் சிறப்பாக வழிநடத்தியிருக்கிறேன். மக்களின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட்டதால் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது" என்று, அவர் செய்த சாதனைகளாகச் சிலவற்றைப் பட்டியலிடத் தொடங்கினார். ``காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றியிருக்கிறோம்.

பொதுமக்கள்
பொதுமக்கள்

நான் விவசாயி என்பதால்தான் விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்களை உணர்ந்து திட்டங்களைச் செயல்படுத்துகிறேன். விவசாயிகளின் நலனே முக்கியம். நடந்தாய் வாழி காவேரி திட்டம், கல்லணை கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. வறட்சி, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயன் பெற ரூ12,510 கோடி மதிப்பில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.9,300 கோடி மதிப்பிலான பயிர்க் காப்பீட்டு தொகையை அ.தி.மு.க அரசு பெற்றுக் கொடுத்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் அறிக்கையை வெளியிடும் தி.மு.க அவற்றை நிறைவேற்றியிருக்கிறதா? ஆனால் அ.தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 47,152 மகளிருக்குத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டிருப்பதால் ஏரிகள், அணைகள் நிரம்பியுள்ளன.

திருச்சியில் மட்டும் அம்மா மினி கிளினிக் 60 இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களுக்கு 14,000 பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எந்தச் சாதிப் பாகுபாடும் பார்க்காமல் ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்து, பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டாவும் வழங்கியிருக்கிறது அ.தி.மு.க அரசு" எனக் குறிப்பிட்டார்.

``மக்களைக் குழப்பி அனுதாபத்தைத் பெற நினைக்கிறார் ஸ்டாலின். மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவுற்றதும், திருச்சி மாவட்ட மக்களுக்குத் தண்ணீர் பிரச்னை இருக்காது. மக்கள்தான் நீதிபதிகள். உங்களுக்கு உழைக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். மக்கள் வைக்கும் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

கருணாநிதி முதலமைச்சர் ஆன பின்புதான் ஊழல் என்ற சொல்லே பிறந்தது. ஸ்டாலின் எவ்வளவுதான் விளக்கினாலும் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிதான் என மக்கள் முடிவெடுத்துவிட்டனர்.

Fact Check: பொள்ளாச்சி விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் தகவல் உண்மையா?

பல்லி, பாம்பைவிட எனக்கு விஷம் அதிகம் என்கிறார் ஸ்டாலின். யாருக்கு விஷம் அதிகம் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். மு.க.அழகிரி தனக்கு நெருக்கடியாக இருப்பார் என்பதால், ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கே நல்லது செய்யாமல் அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவைத்திருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அடுத்தவர்கள் வாழ நினைக்காதவர் ஸ்டாலின். இவர் எப்படி பொதுமக்கள் வாழ நினைப்பார்... இறைவனும், வருண பகவானும் நமக்குச் சாதகமாக இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்... இயற்கையும் நமக்குச் சாதகமாக இருக்கிறது. அ.தி.மு.க ஐஎஸ்ஐ முத்திரைக் கட்சி. ஐஎஸ்ஐ முத்திரை இருந்தால் பொருள்கள் தரமாக இருக்கும். அதுபோல் அ.தி.மு.க தரமான கட்சி" என்றார் முதல்வர் எடப்பாடி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு