Published:Updated:

எடப்பாடி, பன்னீர்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் யாருக்குத் தலைவலி?!

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம், பன்னீர்செல்வம் - எடப்பாடி இடையேயான மோதலால் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தேர்தல் வெற்றி யாருக்கு, என்ன மாதிரியான சூழலை உருவாக்கியிருக்கிறது என்பது பற்றி ஓர் அலசல்...

எடப்பாடி, பன்னீர்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் யாருக்குத் தலைவலி?!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம், பன்னீர்செல்வம் - எடப்பாடி இடையேயான மோதலால் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தேர்தல் வெற்றி யாருக்கு, என்ன மாதிரியான சூழலை உருவாக்கியிருக்கிறது என்பது பற்றி ஓர் அலசல்...

Published:Updated:
ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவையொட்டி அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. உடனே தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை இடைத்தேர்தல் காய்ச்சல் பற்றிக்கொண்டது. `பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்’ எனத் தேர்தல் ஆணையம் அறிவித்ததும், இன்னும் பரபரப்பு அதிகமானது.

தி.மு.க ஆட்சி அமைத்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இடைத்தேர்தலில் பெறும் வெற்றியை, ‘இந்த ஒன்றரை ஆண்டு ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு’ என ஆளும் தரப்பு பறைசாற்றிக்கொள்ளும். அதேபோல அ.தி.மு.க-வில் இருக்கும் உட்கட்சிப் பிரச்னை, இரட்டை இலைச் சின்ன பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகளுக்கும் இந்த இடைத்தேர்தலைச் சர்வரோக நிவாரணியாக எடப்பாடி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் பார்க்கின்றன. எனவே, இரண்டு தரப்புக்கும் இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

நா.த.க-வும் இந்தத் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கும். இப்போது இருக்கும் சூழலில் ம.நீ.ம., தி.மு.க கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு அளிக்க வாய்ப்புகள் அதிகம். இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் கடும் போட்டியிருப்பதுதான் வழக்கம். ஆனால், “இந்தத் தேர்தலில் ஒரே கட்சியைச் சேர்ந்த எடப்பாடி தரப்புக்கும், ஓ.பி.எஸ் தரப்புக்கும் கடும் போட்டி நிலவுகிறது. அதிகாரத்தைத் தனதாக்கிக்கொள்ள எடப்பாடிக்கும் கட்சியில் தன்னுடைய இடத்தை நிலை நிறுத்திக்கொள்ள ஓ.பி.எஸ்-ஸுக்கும் இந்தத் தேர்தல்தான் ஒரே வாய்ப்பு என்பதாலேயே இந்த முட்டல் மோதல் இருக்கிறது” என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

இடைத்தேர்தல் பணிகளை எடப்பாடி தரப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், ஜனவரி 21-ம் தேதி காலையிலிருந்து ஓ.பி.எஸ் கூடாராமும் இடைத்தேர்தல் பணிகளில் பரபரத்துக்கொண்டிருக்கிறது. எடப்பாடி - பன்னீர் ஆகிய இரண்டு தரப்புகளிலும் இந்த இடைத்தேர்தல் யாருக்குத் தலைவலி அதிகம் அதிகம் என்கிற கேள்வி எழுகிறது.

இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஈரோடு கிழக்குத் தொகுதி, காலியானதாக அறிவிக்கப்பட்டது முதலே இடைத்தேர்தலுக்கான பணிகளை எடப்பாடி தரப்பு தொடங்கிவிட்டிருந்தது. மற்ற தொகுதிகளைவிட எப்போதும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்குச் சாதகமான முடிவுகளே வந்திருக்கின்றன. கடந்த முறை கூட்டணிக் கட்சியான தா.மா.கா வேட்பாளரும் 8,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியைச் சந்தித்தார். எனவே, உட்கட்சிப் பிரச்னைகளைச் சரிசெய்தாலே இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என நினைக்கிறது அ.தி.மு.க. இதையடுத்து தங்கமணி, செங்கோட்டையன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஒரு குழுவே இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது. இரட்டை இலைச் சின்னத்துக்கு ஏ, பி ஃபார்ம்களில் கையெழுத்திடும் உரிமை இப்போதுவரை பன்னீர் - எடப்பாடி என இருவருக்கும்தான் இருக்கிறது. சின்னம் கிடைக்குமா, கிடைக்காதா என்பது நீதிமன்ற உத்தரவைப் பொறுத்துத்தான் என்பதால் இந்தத் தேர்தலில் இருக்கும் உண்மையான நெருக்கடி ஓ.பி.எஸ் தரப்பிலிருந்துதான் வரும். அதற்கு அச்சாரம்போடுவதாகே சமீபத்திய நிகழ்வுகள் இருக்கின்றன. பா.ஜ.க இதுவரை தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை.

ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்
ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்

கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பா.ம.க., `தேர்தலில் போட்டியிடப்போவதுமில்லை. யாருக்கும் ஆதரவுமில்லை’ எனக் கூறிவிட்டது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று தனிப்பெரும் தலைவராக வந்துவிட வேண்டும் என்ற நெருக்கடி எடப்பாடி தரப்புக்கு இருப்பதால், கூட்டணிக் கட்சியினரைச் சந்திக்கும் முடிவை எடுத்து, முதல் ஆளாகச் சென்று தா.மா.கா தலைவர் ஜி.கே.வாசனைச் சந்தித்து அவரிடமிருந்து ஆதரவு அறிக்கையும் வாங்கிவிட்டது” என்கிறார்கள்.

மேலும் தொடர்ந்தவர்கள். “செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., `ஒன்றாக இணைந்து செயல்பட நான் தயார். என்னால் இரட்டை இலை முடங்காது. அதேநேரத்தில் தேசியக் கட்சியாக பா.ஜ.க போட்டியிட விரும்பினால், அவர்களுக்கு ஆதரவு தருவேன். நாங்கள் போட்டியிட்டால் பா.ம.க., தா.மா.கா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கோருவோம்’ எனக் குழப்பியடித்திருக்கிறார். அதோடு ஜி.கே.வாசன் வீட்டுக்கும் அழையா விருந்தாளியாகச் சென்று சந்தித்து வந்திருக்கிறார். இதெல்லாம் எடப்பாடி தரப்புக்குத் தற்போது நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடியோ தலைவலியோ இந்தத் தேர்தலில் இருக்கப்போவதில்லை. தன்னுடன் இருக்கும் நிர்வாகிகளின் எண்ணிக்கை, அவர்களின் பலம் என்னவென்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவார். இதைவிட்டால் கட்சி முழுவதும் எடப்பாடி கைக்குப் போய்விடும். எனவே, இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவே விரும்புவார்.

ஜி.கே.வாசன் - ஓ.பி.எஸ்
ஜி.கே.வாசன் - ஓ.பி.எஸ்

உண்மையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது பன்னீர்செல்வத்தின் விருப்பமில்லை. ஆனால், முடிந்த அளவு எடப்பாடியின் ஒற்றைத் தலைமை திட்டத்துக்கு குடைச்சலைக் கொடுக்க வேண்டும் என நினைப்பார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.