Published:Updated:

தவிர்க்க வேண்டியது தட்டுப்பாடு!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தவிர்க்க வேண்டியது தட்டுப்பாடு!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

`பெட்ரோல், டீசல் இருப்பு இல்லை’ என்ற அறிவிப்புப்பலகைகளை சமீபகாலமாக எரிபொருள் நிலையங்களில் காணமுடிகிறது. அதனால் எரிபொருள் இருப்பு இருக்கும் நிலையங்களில் வழக்கத்துக்கு மாறான நீண்ட வாகன வரிசைகள். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பெருநகரங்களைவிடச் சிறுநகரங்களிலும் சிற்றூர்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது. ஆந்திராவின் சில இடங்களில் ஒருவருக்கு இவ்வளவுதான் பெட்ரோல் தரப்படும் என்று ரேஷன் சிஸ்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.

`எங்கள் மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலைத் தங்குதடையில்லாமல் சீராக வினியோகம் செய்யுங்கள்’ என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் அவசரக் கடிதம் எழுதும் அளவுக்கு அங்கே தட்டுப்பாடு மோசமடைந்திருக்கிறது.

`எங்கே எரிபொருள் கிடைக்காதோ’ என்ற கவலையில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவிய ஆரம்பித்தால், இந்தத் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கக்கூடும். பக்கத்து நாடான இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் அரசு அலுவலகங்களும் பள்ளிக்கூடங்களும் மூடப்படுவதை இப்போது அவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதால், `எங்கே நம் நாட்டிலும் இப்படி ஒரு நிலைமை வந்துவிடுமோ’ என்று அவர்கள் பீதியடையக்கூடும். அது அடுத்தடுத்து தொடர் பாதிப்புகளை சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்க பெட்ரோலியத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் தாறுமாறாக எகிறிய விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்கள்மீதான வரியைக் குறைத்தது. இதனால் பெட்ரோலின் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசலின் விலை 7 ரூபாயும் குறைந்தது. இன்னொருபுறம் உக்ரைன் போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. இருந்தபோதும், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உள்ளூர் பெட்ரோல்/டீசல் விலையை உடனுக்குடன் மாற்றியமைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதகாலமாக விலையை ஏற்றவில்லை. இந்தக் காரணங்களால் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்.

தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்கவே எண்ணெய் நிறுவனங்கள் வினியோகத்தைக் குறைத்துவிட்டன என்பதுபோன்ற செய்திகள் உலாவுகின்றன. அதை உறுதிப்படுத்தும் வண்ணம், வழக்கமான அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குத்தான் பெட்ரோல், டீசல் தங்களுக்கு வழங்கப்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் அமைப்பு குற்றம் சுமத்துகிறது.

தட்டுப்பாடு ஒரு பக்கம் தொடர, ‘வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். சில இடங்களில் பெட்ரோல், டீசல் விற்பனை கடந்த ஆண்டைவிட அதிகமாகியிருப்பதுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம். போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருக்கிறது’ என்று பெட்ரோலிய அமைச்சகம் கூறுகிறது. சம்பிரதாயமான சமாதானங்கள் பலன் தராது. மக்கள் பீதியடைந்து பெட்ரோல், டீசலை வாங்கி இருப்பு வைக்கும் போக்கைத் தடுக்க வேண்டுமானால், உண்மை நிலை குறித்த தெளிவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். எரிபொருள் தட்டுப்பாடு இல்லாத நிலையை உறுதிசெய்ய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism