சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கூட்டாட்சியின் முறிவு - ஜனநாயகத்தின் மறைவு!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியைச் செயல்பட விடாமல் முடக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களாக இருப்பவர்கள். ஆளுநர்களின் இத்தகைய போக்கை உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இப்போது டெல்லி மாநில அரசின் அதிகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, உடனடியாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

புதுச்சேரி போல டெல்லி ஒரு யூனியன் பிரதேசம். புதுச்சேரி போலத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசும் அங்கு ஆட்சி செய்கிறது. ஆனால், டெல்லி நம் தேசத்தின் தலைநகராக இருப்பதால் அங்கு சட்டம் - ஒழுங்கு, நில நிர்வாகம் போன்ற முக்கியமான அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்கின்றன. மற்ற நிர்வாக விஷயங்களில்கூட துணைநிலை ஆளுநரே அதிகார மையமாகச் செயல்பட்டுவந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு முதல்வராக இருக்கிறார். ஆனால், முதல்வருக்குத் தெரியாமலேயே தலைமைச் செயலாளர் உட்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றுவது, அதிகாரிகளை நியமிப்பது என்று எல்லாவற்றையும் டெல்லி துணைநிலை ஆளுநராக முன்பு இருந்த நஜிப் ஜங் செய்துவந்தார். அவருக்குப் பிறகு இப்போது வந்திருக்கும் வி.கே.சக்சேனாவும் அதையே தொடர்கிறார். தன் அலுவலகத்திற்குக்கூட, தான் விரும்பும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க அதிகாரமற்றவராகத்தான் டெல்லி முதல்வர் இருந்தார். ஆளுநர் தலையிட்டால்தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய கறுப்பு வரலாறும் உண்டு. டெல்லியின் நிர்வாக அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம்தான் இருக்கிறது என்று பிடிவாதமாகச் சொன்னது மத்திய அரசு.

தலையங்கம்
தலையங்கம்

இதை எதிர்த்து டெல்லி அரசு நடத்திய சட்டப்போராட்டத்தின் முடிவில், ‘டெல்லியை ஆட்சி செய்யும் மாநில அரசுக்கே, அம்மாநிலத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கவும், மாற்றவும் அதிகாரம் உண்டு. மாநில அரசின் முடிவுக்குத் துணைநிலை ஆளுநர் கட்டுப்பட்டவர்' என்ற தீர்ப்பை வழங்கியது, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு. சில நாள்களிலேயே இதை எதிர்த்து ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. இந்தச் சட்டத்தின் மூலம் நேஷனல் கேப்பிடல் சிவில் சர்வீஸ் அத்தாரிட்டி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு. டெல்லி முதல்வர் தலைமையிலான இந்த அமைப்பில் டெல்லி தலைமைச் செயலாளரும் உள்துறைச் செயலாளரும் உறுப்பினர்கள். இந்தக் குழுவே அதிகாரிகள் மாறுதல்களைப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கும். முதல்வர் தவிர்த்த மற்ற இரு அதிகாரிகளையும் மத்திய அரசே நியமிக்கிறது என்பதால், இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது வெளிப்படை.

அரசியல் சாசனமும், உச்ச நீதிமன்றமும் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பறித்து அவசரச் சட்டம் இயற்றியிருப்பதன் மூலம், டெல்லி வாக்காளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அலட்சியம் செய்திருக்கிறது மத்திய அரசு. கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதே ஜனநாயகத்துக்கு அழகு. கூட்டாட்சியின் முறிவு - ஜனநாயகத்தின் மறைவு.