Published:Updated:

டிராக்டர் பேரணி:6 பத்திரிகையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்! -இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம் கண்டனம்

பத்திரிகை சுதந்திரம்
பத்திரிகை சுதந்திரம் ( Global research )

``பத்திரிகையாளர்களைக் குறிவைப்பதென்பது ஜனநாயக மதிப்புகளை மீறுவதும், மிதிப்பதுமே ஆகும்.'' - இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம்

குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்தும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறை குறித்தும் செய்தி வெளியிட்டதற்காக ராஜ்தீப் சர்தேசாய், மிர்னால் பாண்டே உட்பட ஆறு பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மத்தியப்பிரதேச, உத்தரப்பிரதேச காவல்துறையினர் இது தொடர்பாக ஆறு பத்திரிகையாளர்கள் மீதும் தேசத்துரோகம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கின்றனர்.

குறிப்பாக, போராட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக தங்களது ட்விட்டர் பக்கத்திலும், தாங்கள் பணி செய்யும் நிறுவனத்தின் தளங்களிலும் செய்தி வெளியிட்டிருப்பது தொடர்பாகவே இந்த வழக்குகள் அனைத்தும் பதியப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

டெல்லி செங்கோட்டை வன்முறை
டெல்லி செங்கோட்டை வன்முறை
ANI
செங்கோட்டையில் மதக்கொடி; பா.ஜ.க தொடர்பு! - வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் தீப் சித்து யார்?

அதேபோல, பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர், காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மீதும், ராஜ்தீப் சர்தேசாய் உட்பட ஆறு பத்திரிகையாளர்கள் மீதும் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், `` இவர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் கருத்துகள் வெறுப்பு ஏற்படுத்தும் நோக்கிலும், மதங்களுக்கிடையே பகை உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கிறது'' என்று குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து சசி தரூர் உள்ளிட்ட ஏழு பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருப்பதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள்மீது வழக்கு பதியப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணி குறித்தும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும் செய்தி வெளியிட்ட பலர்மீது, அச்சுறுத்தும் வகையில் வழக்கு பதிவு செய்திருப்பதை இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மூத்த பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது உத்தரப்பிரதேச மற்றும் மத்தியப்பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மரணமடைந்தவிதம் குறித்து தங்கள் தனிப்பட்ட சமூக வலைதளப் பக்கத்திலும், தாங்கள் சார்ந்த செய்தி நிறுவனத்தின் தளத்திலும் எழுதிய பத்திரிகையாளர்களே குறிவைக்கப்பட்டுள்ளனர். தீவிரமாக ஒரு போராட்டம் நடைபெறும் நேரத்தில், பல்வேறு சம்பவங்கள் நிகழும். சம்பவங்களை நேரில் பார்ப்பவர்கள் மற்றும் காவல்துறையினர் தரும் தகவல்களை அடிப்படையாகவைத்து பத்திரிகையாளர்கள் பல கோணங்களில் செய்தி தருவது இயல்பான ஒன்றே. செய்திகளை வெளியிடுவதில் காலம் காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை இதுவே.

‘இந்தப் பத்திரிகையாளர்கள் எழுதிய ட்வீட்கள் உள்நோக்கத்துடன் தீங்கிழைக்கும் வகையில் இருந்ததாகவும், போராட்டக்காரர்கள் செங்கோட்டையை முற்றுகையிட அதுவே காரணம்’ என்றும் முதல் தகவல் அறிக்கை குற்றம்சாட்டுகிறது. உண்மைக்கு மேலான ஒன்றாக எதுவும் இருக்க முடியாது. பல்வேறு தகவல்கள் வெளியான ஒரு நாளில், இப்படி வெவ்வேறு மாநிலங்களில் வழக்கு பதிவு செய்வதை, ஊடகங்களை அச்சுறுத்தும், துன்புறுத்தும், கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். தேசத்துரோகம், வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டுதல், மத நம்பிக்கைகளை அவமதித்தல் உள்ளிட்ட பத்து பிரிவுகளின் கீழ் இப்படி வழக்கு பதிவு செய்திருப்பது இப்படிப் பத்திரிகையாளர்களைக் குறிவைப்பது, நாம் கடைப்பிடிக்கும் ஜனநாயக மாண்புகளை மீறுவதும், மிதிப்பதுமே ஆகும்.

பத்திரிகையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்
பத்திரிகையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்
Vikatan

இது ஊடகங்களைத் துன்புறுத்தி, இந்திய ஜனநாயகத்தின் சுதந்திரமான ஒரு கண்காணிப்பு அமைப்பாகப் பணியைச் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட ஒன்று. பத்திரிகையாளர்கள் மீதான இந்த வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென நாங்கள் கோருகிறோம். எந்த அச்சமுமின்றி, சுதந்திரமாகப் பணிகளைச் செய்ய ஊடகங்களை அனுமதிக்க வேண்டும். பேச்சு சுதந்திரத்துக்குத் தடை போடும் வகையில் தேசத் துரோகம் உள்ளிட்ட சில சட்டங்கள் அவ்வப்போது பயன்படுத்தப்படுகின்றன. இது குறித்து நீதித்துறை உயர் அமைப்புகளிடம் ஏற்கெனவே நாங்கள்வைத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். அவர்கள் இதை ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும். சுதந்திரமான முறையில் ஊடகங்கள் செயல்படுவதை இந்தச் சட்டங்களின் மூலம் தடுக்க முடியாதபடி வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்'' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு