Published:Updated:

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு: ஆலோசித்துக்கொண்டே இருக்கும் அரசுகள்... என்னதான் தீர்வு?

பொதுத்தேர்வு
பொதுத்தேர்வு

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகின்றன. தேர்வு நடத்துவதில் உறுதியாக இருந்தாலும் எப்போது, எப்படி என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றன. அதற்குத் தீர்வுதான் என்ன?

கொரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் சூழலில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை நடத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. இது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். மேற்படிப்புக்கு அடிப்படையாக இருக்கும் 12-ம் வகுப்புக்குத் தேர்வு நடத்த வேண்டும் என்றபோதும், தற்போதைய சூழலில் இது தேவையா என்ற கேள்வியும், இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக மாட்டார்களா என்ற விமர்சனமும் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக அரசும் 12-ம் வகுப்புக்குத் தேர்வு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 12-ம் வகுப்புக்குத் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆலோசனை செய்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதற்குத் தீர்வு ஏதும் இன்னும் எட்டப்படவில்லை.

கல்வியாளர் ரமேஷ் பிரபா
கல்வியாளர் ரமேஷ் பிரபா

அரசின் ஆலோசனைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தேர்வு தேதி, வினாத்தாள் தயாரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கல்வியாளர் ரமேஷ் பிரபாவிடம் பேசினோம்…

அடங்காத கொரோனா 2-ம் அலை:  பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு, ரத்து... எது சரி, ஏன்?

``நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதும் சிபிஎஸ்சி மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 10 லட்சம் என மொத்தமுள்ள 29 மாநிலக் கல்வி அமைப்புகளில் தேர்வு எழுதும் இரண்டு கோடி மாணவர்கள் எனப் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களில் இரண்டு வகையில் இருக்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து நேற்று (23.05.2021) மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தினார். மேற்படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கும், கல்லூரிச் சேர்க்கைக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் தேவை என்பதால் மகாராஷ்டிரா, டெல்லி தவிர தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.

சிபிஎஸ்சி ப்ளஸ் டூ தேர்வு
சிபிஎஸ்சி ப்ளஸ் டூ தேர்வு

அதிக அளவு பாதிக்காத மாநிலங்களைப் பிரித்து ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் முதற்கட்டமாகத் தேர்வை நடத்தி முடிப்பது. மற்றொன்று அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஆகஸ்ட் 5 முதல் 25-ம் தேதிக்குள் இரண்டாம் கட்ட தேர்வை நடத்தி முடிக்கலாம் எனவும், மத்திய அரசு தரப்பில் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இது சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த ஆலோசனையை ஒட்டி தங்கள் மாநிலங்களில் இருக்கும் சிபிஎஸ்சி பள்ளிகளுக்குத் தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்துகொள்ளலாம்” என்றவர்...

ஆகஸ்ட் 1 முதல் 20-க்குள் ஒரே கட்டமாக முக்கியமான பாடங்களுக்கு மட்டும் அதாவது தமிழ், ஆங்கிலம் தவிர ஏனைய 19 முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது. இவற்றில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான மதிப்பெண் வழங்கப்படும். இந்தத் தேர்வையும் பள்ளிகளில் நடத்தாமல், பொதுவான ஒரு மையம் அமைத்து மாணவர்களை அங்கே வரவழைத்து நடத்தலாம். மேலும், அந்தப் பள்ளிகளிலேயும் தேர்வுகள் நடத்தலாம். ஆனால், தேர்வு நடக்கும் கால அளவை 180 நிமிடங்களிலிருந்து 90 நிமிடங்களாகக் குறைத்துவிடலாம். அதில் தேர்ந்தெடுத்து எழுதும் கேள்விகளை அதிகமாக வைத்துவிட்டு விளக்கமுறைக் கேள்விகளை குறைத்துவிடுவது என்ற பரிந்துரையும் அளிக்கப்பட்டது. இந்தப் பரிந்துரைகள் தொடர்பான தங்கள் கருத்தை அனைத்து மாநிலங்களும் மே 25-ம் தேதிக்குள் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
மாதிரிப் படம்

அதற்கு பிறகு ஒவ்வொரு மாநிலங்களும் அந்தந்த மாநிலங்களின் கொரோனா தொற்றுப் பரவலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டுதான் தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க முடியும். அந்த வகையில் ஜூன் மாதத்தில் கொரோனா கட்டுக்குள் வந்தால் ஜூலை மத்தியிலோ, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலோ தேர்வு நடத்தப்படும்” என ஆலோசனையில் நடந்த விஷயங்களை விளக்கினார்...

புதிய தேசிய கல்விக் கொள்கை - நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்குமா திமுக அரசு?

மேலும்,”தேர்வு நடத்துவது என்று முடிவு செய்துவிட்டால் இரண்டு விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். சிபிஎஸ்சி தேர்வு மிகவும் சிரமமாக இருக்கும். அதில் மதிப்பெண் குறைவாகத்தான் அளிப்பார்கள். மாநிலப் பள்ளிக் கல்வித்துறையில் மதிப்பெண்கள் அதிகமாக அளிப்பார்கள் என்ற கருத்து இருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு சிபிஎஸ்சி-யைப்போல இழுத்துப் பிடித்து மதிப்பெண் அளிக்கிறேன் என மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் வழங்கினார்கள். அதேநேரத்தில் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சிபிஎஸ்சி மாணவர்கள் அதிக இடங்களைப் பிடித்துக்கொண்டனர். எனவே, மாநிலக் கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு வைக்கும்போதோ, அவர்களின் தேர்வுத் தாள்களை மதிப்பிடும்போதோ கூடுதலாக அரசு கவனம் எடுத்துக்கொள்ளா வேண்டும்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மத்திய அரசு சொன்னதுபோல, தேர்ந்தெடுத்து எழுதும் கேள்விகளை அதிகமாக வைத்துக்கொண்டு, விளக்கி எழுதும் கேள்விகளைக் குறைவாக வைக்க வேண்டும். அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆங்கிலம் உள்ளிட்ட இன்ன பிற முதன்மைப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்குச் சிரமப்படும் மாணவர்களை கணக்கில்வைத்துத்தான் தேர்வு மற்றும் வினாத்தாளை அமைக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்வு அடையும் வகையிலும் அதன் பின் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு வகை செய்யும் கேள்விகளையும் வினாத்தாளில் வைக்க வேண்டும்” என வினாத்தாள்கள் அமைக்க வேண்டியது குறித்து விளக்கினார்.

“மே மாதம் இறுதியிலேயோ ஜூன் தொடக்கத்திலேயோதான் கொரோனா உச்சத்தை அடையும் என்று சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் அது குறைவதற்கு எப்படியும் அதன் பின் 15 நாள்கள் ஆகிவிடும். எனவே ஜூலை மத்தியில் அல்லது ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில்தான் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கு இடையில் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கு நேரம் வேறு மிகக்குறைவாக இருக்கும். அடுத்த கல்வியாண்டை ஒரு மாதம் தள்ளி ஆரம்பித்தால் எதுவும் குடி முழுகிப் போகாது. அதைவிட மாணவர்களின் நலன்தான் மிக முக்கியம். தேர்வு நடத்துவது என்று முடிவு ஆகிவிட்டால், ஒரு வாரம் பத்து நாள்களுக்கு முன் மாணவர்களுக்கு அறிவித்தால் போதும். அதை விட்டுவிட்டுத் தொடர்ந்து இது போன்ற விவாதங்கள் நடைபெறுவதன் மூலம் மாணவர்கள் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன் வீட்டில் பெற்றோரும் படி படி என மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் சூழல் உருவாகும். எனவே, அதைத் தவிர்க்க மாணவர்களுக்குக் குறைந்தது இரண்டு வாரம் அல்லது ஒரு மாதம் கொடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

தேர்வு நடத்துவது என்று முடிவு செய்துவிட்டால் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவப் பிரதிநிதிகளுடன் அரசு கலந்தாலோசிக்க வேண்டும். இதுவரை அப்படி நடந்தது இல்லை. ஆனால், இந்த அரசு எந்தச் சார்பும் அற்ற கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்” எனத் தேர்வு நடத்துவது குறித்தும் சில ஆலோசனைகளைக் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு