Published:Updated:

``அதிமுக-வும் சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என நினைக்கிறோம்” - சொல்கிறார் திமுக எம்எல்ஏ பரந்தாமன்

பரந்தாமன் எம்.எல்.ஏ

தி.மு.க எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இ.பரந்தாமன் நேர்காணல்

``அதிமுக-வும் சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என நினைக்கிறோம்” - சொல்கிறார் திமுக எம்எல்ஏ பரந்தாமன்

தி.மு.க எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இ.பரந்தாமன் நேர்காணல்

Published:Updated:
பரந்தாமன் எம்.எல்.ஏ

தி.மு.க அரசுமீது எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்கள், கட்சி நிர்வாகிகள் நியமனம், எதிர்க்கட்சிகள் குறித்து தி.மு.க வைக்கும் விமர்சனங்கள், பா.ஜ.க உடனான மோதல் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து தி.மு.க எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இ.பரந்தாமனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``அதிமுக-வும் சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என நினைக்கிறோம்” - சொல்கிறார் திமுக எம்எல்ஏ பரந்தாமன்

``வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்கிறார்களே எதிர்க்கட்சியினர்?”

``தகுதியில்லாதவர்கள் வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு, அ.தி.மு.க கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்னவென்றே தெரியாது. மொபைல் போன் கொடுப்போம், ஸ்கூட்டர் கொடுப்போம் என ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றிவிட்டார்களா... தி.மு.க சொன்னதைச் செய்துகொண்டுதான் இருக்கிறது. சொல்லாததற்கு மேலும் செய்துகொண்டிருக்கிறது.”

``இளைஞர்களை விட்டுவிட்டு கட்சியில் முக்கியப் பதவிகள் இப்போதும் வயதானவர்களுக்கே கொடுக்கப்படுகின்றனவா?”

“அண்ணா, கலைஞர், தலைவர் ஆகியோருடன் பயணித்தவர்கள்தான் தற்போது இருக்கிறார்கள். இளைஞரணிச் செயலாளருடன் பயணித்தவர்களை இப்போது எங்கும் பார்க்க முடியாது. நீர்வளத்துறை அமைச்சர்தான் எங்கள் சொத்து. எங்களது பலமே, கருவூலமே மூத்த தலைவர்கள்தான்.”

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

``தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநரைச் சந்தித்தது சரி, எடப்பாடி சந்தித்தால் அது தவறா?”

``ஆளுநரைச் சந்திப்பது தவறில்லை. அவரை யாரும் சந்திக்கக் கூடாது என்றும் சொல்லவும் முடியாது. ஆனால், ஆளுநர் செய்யக் கூடாததை செய்துகொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியாக எடப்பாடியும் செய்யக் கூடாதை செய்துகொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது.”

``விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை தற்போது இருக்கும் தி.மு.க நிர்வாகிகளிடம் இல்லையா?”

``தி.மு.க மாதிரியான ஒரு ஜனநாயகக் கட்சியை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள்தான். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு எனச் சொன்னவர் அண்ணா. கலைஞர், இப்போதைய தலைவர், எதிர்கொள்ளாத விமர்சனங்களே இல்லை. ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம். சமூக வலைதளத்தில் வரும் காழ்ப்புணர்ச்சி கலந்த விமர்சனத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.”

ஸ்டாலின் படம் அருகே மோடி படம்
ஸ்டாலின் படம் அருகே மோடி படம்

``தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைப்பதில் என்ன தவறு... அப்படி வைப்பவர்களைத் தாக்குவது சரியா?”

``யாரும் யார்மீதும், எதன் பொருட்டும் வன்முறையை நிகழ்த்தக் கூடாது. அதில் தலைவர் உறுதியாக இருக்கிறார். ஒன்றிய அரசின் அலுவலகங்களில் மோடியின் படத்தை வைத்துக்கொள்ளட்டும். யார் கேட்கப் போகிறார்கள்... ஆனால், மாநில அரசின் அலுவலகங்களில் பிரதமரின் படத்தை வைப்பது வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எனவே, அப்படி வைக்கும்போது அதைத் தட்டிக்கேட்போம். ஒன்றிய அரசாக இருப்பதாலேயே இங்கே இருக்கும் பா.ஜ.க-வினர் செய்யும் நரித்தனங்களை அனுமதிக்கவே முடியாது.”

``மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் மத்திய அரசின் நிதிப் பங்கீடும் இருக்கிறதுதானே?”

``இது காலம் காலமாக இருப்பதுதானே... ரேஷன், சுகாதாரத்தில் மாநில அரசின் பங்கீடுதான் அதிகம். 1970-ம் ஆண்டிலேயே நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தமிழ்நாட்டுக்கு என கலைஞர் உருவாக்கினார். ஒன்றிய அரசு ஒரு கிலோ கொடுத்தால், மாநில அரசு ஒன்பது கிலோ கொடுக்கிறது. அவர்கள் கொடுக்கிறார்கள். ஆனால், அதை வெளியில் சொல்ல முடியாத அளவே அளந்துகொடுக்கிறார்கள். ஆனால், விளம்பரம் மட்டும் பெரிதாகச் செய்துகொள்கிறார்கள். இது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும்.”

பன்னீர், எடப்பாடி, மோடி
பன்னீர், எடப்பாடி, மோடி

``பா.ஜ.க-விடம் அடிமை ஆகிவிட்டார்கள், சுயமரியாதையை இழந்துவிட்டார்கள் என அ.தி.மு.க மீது அக்கறை இருப்பதாக ஏன் காட்டிக்கொள்ள வேண்டும்?”

``எனக்கு ஒரு கண் போனால், எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என நினைப்பவன் தி.மு.க-காரன் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் அ.தி.மு.க-வின் பங்களிப்பு மறுக்க முடியாதது. திராவிட முன்னேற்றக் கழகம் அளவுக்கு இல்லையென்றாலும்கூட அவர்களின் பங்களிப்பும் முக்கியமானதுதான். அவர்களும் திராவிடர்கள், தமிழர்கள். நம்மவர்கள். பக்கத்து வீட்டுக்காரனும் நன்றாக இருக்க வேண்டும். அதுவும் சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என நினைக்கும் பண்பும் எங்களுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் சொல்கிறோம்.”

``தனியார் நிறுவனம் ஒன்றுக்காகத்தான் அரசு கேபிள் நிறுவனம் முடக்கப்பட்டதாக பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டுகிறார்களே?”

“தனியார் நிறுவனம் ஒன்றின் காழ்ப்புணர்ச்சியால்தான் அரசு கேபிள் ஒளிபரப்பு முடக்கப்பட்டதாக வழக்கு பதிவுசெய்து, கைதும் செய்திருக்கிறோம். தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இந்தக் குற்றச்சாட்டு வைப்பது வழக்கமாகிவிட்டது.”

பரந்தாமன்
பரந்தாமன்

``தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பதுதானே எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது?”

“ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட தலைவரைக்கொண்ட கட்சி அ.தி.மு.க. இன்றைக்கு அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் ஊழல் புகார்களில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தால் தண்டிக்கப்பட்ட திருட்டுக் கும்பல் இருக்கும் கட்சி அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடக்கவே இல்லையென்று சொல்ல முடியுமா... தவறு நடந்தால் அரசு அதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு சரிசெய்ய வேண்டும். தி.மு.க அரசு அதைத்தான் செய்கிறது. தி.மு.க வளர்ந்துவிடக் கூடாது, வலுவாகிவிடக் கூடாது என்பதால் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை அதிமாக ஏற்படுகிறது என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.”