Published:Updated:

பக்ரீத் கொண்டாடினரா, காஷ்மீர் மக்கள்?

ஆ.பழனியப்பன்

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த பிரிவு 370 திரும்பப் பெறப்பட்ட பிறகு, நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீரில் வான்வழியாக ஆய்வுசெய்தார்.

காஷ்மீர்
காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்பப் பெறப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு, ஊரடங்கு உட்பட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. முன்னாள் முதல்வர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்புகள் மாநிலம் முழுவதும் துண்டிக்கப்பட்டிருந்தன.

காஷ்மீர்
காஷ்மீர்

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று தொழுகைக்காக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டன. அன்றைய தினம் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்தினர். உணவுப்பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காகவும் வெளியே வந்தனர். ஆனால், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததால், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர் என்று செய்திகள் வெளியாகின.

இன்றைய தினம் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காஷ்மீரிலும் இஸ்லாமிய மக்கள் மசூதிகளுக்குச் சென்று தொழுகையில் ஈடுபட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. இன்றைய தினம், ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் தெற்குப் பகுதியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் வான்வழியாக அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளார். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் அந்தப் பிரதேசத்தின் காவல் துறைத் தலைவர் தில்பக் சிங் மற்றும் ராணுவத் தளபதிகள் ஆய்வு மேற்கொண்டனர். நிலைமை சீராக உள்ளது என்றும், பக்ரீத் தொழுகை அமைதியாக நடந்தது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் இளைஞர்கள் போராட்டம்
காஷ்மீர் இளைஞர்கள் போராட்டம்

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளாலும் தீவிரவாதங்களாலும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொழுகை நடத்துவதற்காக உள்ளூர் மசூதிகளில் ஏராளமான மக்கள் குவிந்தனர் என்றும், ஜம்முவில் 5,000-க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தினர் என்றும், சில இடங்களில் வழக்கமான சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன என்றும் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“ஜம்மு - காஷ்மீரில் ஆங்காங்கே கல்லெறிச் சம்பவங்கள் நிகழ்ந்தன. போலீஸார் அந்த நிலைமையைச் சமாளித்து போராட்டக்காரர்களைக் கலைந்துபோகச் செய்தனர். ஒன்றிரண்டு பேரைத் தவிர, பெரிய அளவில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஜம்மு - காஷ்மீரில் கடந்த சனிக்கிழமை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதனால் ஏராளமான மக்கள் சாலைகளுக்கு வந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கினார்கள். 20 சதவிகிதமான கடைகள் திறந்திருந்தன. சாலையோரக் கடைகளும் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஞாயிறன்று 50 சதவிகிதமான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பக்ரீத் பண்டிகைக்கான பொருள்களை மக்கள் எவ்வித இடையூறுமின்றி வாங்கினார்கள்.

பிரதமர் மோடியுடன் அஜித் தோவல்
பிரதமர் மோடியுடன் அஜித் தோவல்

வெள்ளாடுகள், செம்மறியாடுகளை மக்கள் வாங்கிச் சென்றார்கள். ஸ்ரீநகரில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் விற்பனையாகின. ஜம்முவின் ஐந்து மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட்டன. பிற ஐந்து மாவட்டங்களில் இரவு நேரத்தில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. காஷ்மீரின் ஒன்பது மாவட்டங்களில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப காவல் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் கட்டுப்பாடுகள் தொடர்பான முடிவுகளை எடுக்கின்றன. மாவட்ட ஆணையர் அலுவலகங்கள், காவல் நிலையங்கள், காவல் சாவடிகள் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹெல்ப்லைன் மூலமாக, வெளிமாநிலங்களில் உள்ள தங்கள் உறவினர்களுடன் மக்கள் பேசுவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.

``தேசிய விருது கிடைத்துவிட்டது; ஆனால் தகவல்..?”- இது காஷ்மீர் சிறுவனின் கதை

பாதுகாப்புப் படைகள் துப்பாக்கியால் சுட்டதில் மரணங்கள் நிகழ்ந்ததாகவும், காயங்கள் ஏற்பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், ஜம்மு - காஷ்மீரில் ஒரு துப்பாக்கிக் குண்டுகூடத் துப்பாக்கியிலிருந்து பாயவில்லை” என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.