Published:Updated:

எலெக்‌ஷன் ஜங்ஷன்!

“கொஞ்சம் சிரிங்க ராமு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கொஞ்சம் சிரிங்க ராமு!”

- குடவோலை குமரன்

ஆறு பவுன்ஸர்கள்! - குமரி ம.நீ.ம வேட்பாளர் பந்தா...

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் சுபா சார்லஸ் போட்டியிடுகிறார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த இவர், சென்னையில் மனநல மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார்.

எலெக்‌ஷன் ஜங்ஷன்!

தற்போது நாகர்கோவிலிலுள்ள சொகுசு விடுதியில் தங்கி தேர்தல் பணி செய்துவருபவர், எங்கு சென்றாலும் வாட்டசாட்டமான ஆறு பவுன்ஸர்கள் புடைசூழச் செல்கிறார். பிரசாரத்தில் தொகுதி மக்கள் அவரை நெருங்கவிடாமல் பவுன்ஸர்கள் கெடுபிடி காட்டுகிறார்கள். ``கமல்ஹாசனுக்கேகூட இத்தனை கெடுபிடி கிடையாது. மக்களைச் சந்திக்க வந்த இடத்தில் இதென்ன அடாவடி!” என்று புலம்புகிறார்கள் கன்னியாகுமரி மக்கள்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்!

நான்காவது முறையாக சீட்! - கொந்தளிக்கும் மயிலாடுதுறை கதர்கள்...

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ராஜ்குமாருக்கு உள்ளூர் கதர்களிடமே எதிர்ப்பு வலுத்துவருகிறது. ``ராஜ்குமார் ஏற்கெனவே மயிலாடுதுறை தொகுதியில் இரண்டு முறையும், திருவல்லிக்கேணியில் ஒரு முறையும் போட்டியிட்டு, 2006-ல் மட்டுமே மயிலாடுதுறையில் வெற்றிபெற்றிருக்கிறார். இப்போது நான்காவது முறையாக அவருக்கே வாய்ப்பளித்தது என்ன நியாயம்? பெரும்பாலும் சென்னையிலேயே இருப்பவர், மயிலாடுதுறையில் தலை காட்டுவதே இல்லை” என்று கொந்தளிக்கிறார்கள் உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர். ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான், ‘ராஜ்குமார்தான் அந்தத் தொகுதிக்கு பொருத்தமானவர்... அவர் களமிறங்கினால்தான் வெற்றி சாத்தியம்” என்று சொல்லி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினார் என்கிறது காங்கிரஸ் மாநிலத் தலைமை முகாம். ஆனால், இது புரியாத காங்கிரஸ் உள்ளூர் பிரமுகர்கள் ‘ராஜ்குமாரை மாற்ற வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். உள்ளூர் கதர்களைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகிறார் ராஜ்குமார்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்!

பேனரில் மாறிய தலைவரின் படம்! நெல்லை அ.தி.மு.க குளறுபடி

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, சமீபத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டினார். கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் கூட்டணிக் கட்சியினரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதில் தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீனின் படமும் இருந்தது. ஆனால், கூட்டம் முடியும் வரை கட்சியினர் யாருமே இதை கவனிக்கவில்லை. இந்தத் தகவல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் முகமது மீரானுக்குக் கிடைக்கவே, “இது எங்கள் தொண்டர்களைக் குழப்பமடைய செய்யும் சதி. தொண்டர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று கொந்தளித்திருக்கிறார். அ.தி.மு.க தரப்போ... “தெரியாமவெச்சுட்டோம். இதைப் போய் பெருசாக்குறாங்க!” என்கிறார்கள் அசால்டாக!

எலெக்‌ஷன் ஜங்ஷன்!

“கொஞ்சம் சிரிங்க ராமு!” - கவலையில் குன்னூர் வேட்பாளர்...

அ.தி.மு.க-வின் குன்னூர் சிட்டிங் எம்.எல்.ஏ ராமுவுக்கு கல்தா கொடுத்துவிட்டு, மாவட்டச் செயலாளர் வினோத்துக்கு சீட் வழங்கியது கட்சித் தலைமை. சீட் வாங்கிய கையோடு நேராக ராமுவின் வீட்டுக்கே சென்று சமாதானம் செய்து, ஆதரவு தரும்படி கேட்டார் வினோத். ஆனால், ராமு சமாதானமடையவில்லை. இதனால், வேட்பாளரின் முதல் அறிமுகக் கூட்டத்திலேயே கைகலப்பு ஏற்பட்டது. ராமு இல்லாமல் தொகுதிக்குள் தலைகாட்ட முடியாது என்பதை அறிந்த வினோத், ஒருவழியாக ராமுவைச் சமாதானப்படுத்தி, வேட்புமனுத் தாக்கலுக்கு அழைத்துவந்தார். தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு வழங்கும்போது போட்டோகிராபர்கள் படமெடுக்க... உம்மென்று நின்றிருந்த ராமுவை, “அண்ணே கொஞ்சம் சிரிங்கண்ணே... ஒரு நிமிஷம் ப்ளீஸ்” என்று சிரிக்க வைத்து படமெடுப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்கள் வினோத்தின் ஆதரவாளர்கள். ராமுவின் அதிருப்தியை எண்ணி கலக்கத்தில் இருக்கிறார் வினோத்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்!

“சாப்பாடுகூட வாங்கி தர்றதில்லை!” - கோவை உடன்பிறப்புகள் புலம்பல்...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதிதான் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்குவார் என்று பேசப்பட்டது. ஆனால், அமைச்சர் வேலுமணியுடன் நெருக்கம் காட்டுவதாக வந்த புகாரையடுத்து அவருக்கு சீட் தராமல், பிரபாகரனுக்கு சீட் வழங்கியது தலைமை. இந்தநிலையில், பிரபாகரனும் வேலுமணியின் விசுவாசி என்று புகார்களை தலைமைக்குத் தட்டிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். இது போதாதென்று, “பிரசாரத்துக்கு அவர்கூட போனா மதியச் சாப்பாடுகூட வாங்கித் தர்றது இல்லை. கேட்டா, ‘சீட் வாங்குறதுக்கே நிறைய செலவு ஆகிடுச்சு’னு சொல்றாரு” என்று புலம்புகிறார்கள் தொண்டர்கள்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்!

“பார்த்து ஓட்டுப் போடுங்க!” விராலிமலை உருக்கம்...

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், பிரசாரத்தின்போது உருகி உருகி ஓட்டுக் கேட்கிறார். “சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோட போட்டி போட்டுக்கிட்டு பணம் கொடுக்கவோ, செலவு செய்யவோ என்னால முடியாது. நான் ஜனத்தை மட்டுமே நம்பி நிக்குறேன். அவருக்காச்சும் (விஜயபாஸ்கருக்கு) அப்பா, அண்ணன் இருக்காங்க. எனக்கு யாருமில்லை... ரெண்டு தடவை தோத்துப்போய் நிறைய இழந்துட்டேன்... பார்த்து ஓட்டுப் போடுங்க” என்று செல்லுமிடமெல்லாம் நெஞ்சு புடைக்க விம்மி அழுது பேசிவருகிறார் பழனியப்பன். இதைப் பார்த்த அமைச்சர் தரப்போ, “சென்டிமென்ட்டாகப் பேசி நம்மள காலி பண்ணிடுவாரோ” என்ற பதற்றத்தில் இருக்கிறது!

எலெக்‌ஷன் ஜங்ஷன்!

பள்ளப்பட்டி முஸ்லிம் ஓட்டு யாருக்கு? - சுற்றிவரும் அரவக்குறிச்சி வேட்பாளர்கள்...

அரவக்குறிச்சி தொகுதியில் பள்ளப்பட்டி பகுதியிலிருக்கும் இஸ்லாமியர் ஓட்டுகளே அந்தத் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்குவகிக்கின்றன. அதனால், அரவக்குறிச்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தப் பகுதியை குறிவைத்தே சுற்றிச் சுற்றி வருவார்கள். இந்தநிலையில் தி.மு.க வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோவும், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையும் பள்ளப்பட்டி வாக்காளர்களைக் கவர ஏரியாவை தினமுமே சுற்றிவரத் தொடங்கிவிட்டார்கள். இதில் ஒருபடி மேலே சென்ற அண்ணாமலை, ‘இஸ்லாமியப் பெண்கள் சந்திப்பு’ என்ற பெயரில் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். ஆனால், தி.மு.க தரப்போ, “என்னதான் வேஷம் போட்டு உருண்டாலும் எதுவும் நடக்காது. சத்தியமா இஸ்லாமியர் ஓட்டு பா.ஜ.க-வுக்கு இல்லை” என்று கிண்டலடித்து, முஷ்டி முறுக்குகிறார்கள்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்!

கதிகலங்கும் செந்தில்நாதன்... சிவகங்கை அ.தி.மு.க உள்குத்து!

சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கு சீட் வழங்கியதால், அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தார்கள். இதனால், தொகுதியில் தேர்தல் வேலைகள் எதுவுமே சுறுசுறுப்பாக நடக்காமல் இருந்தது. தவித்துப்போன செந்தில்நாதன் ஒருவழியாக அமைச்சரின் மகன் கருணாகரனைப் பிடித்து டீல் பேசினார் என்கிறார்கள். இதையடுத்தே கடந்த சில நாள்களாக அமைச்சரின் ஆதரவாளர்கள் செந்தில்நாதனுக்காகத் தேர்தல் பணி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும், அமைச்சரின் ஆட்கள் உள்ளடி வேலை ஏதேனும் செய்துவிடுவார்களோ என்றெண்ணி, அவர்களை ஃபாலோ செய்ய தனி டீம் போட்டிருக்கிறாராம் செந்தில்நாதன்!