Published:Updated:

`வாக்குகள் எண்ணப்பட்டதில் சந்தேகம் இருக்கிறது!’ - துரைமுருகன் வெற்றிக்கு எதிராக அதிமுக வழக்கு

துரைமுருகன்
துரைமுருகன்

காட்பாடி தொகுதியில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் சந்தேகம் இருப்பதாகக் கூறி துரைமுருகன் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார், அ.தி.மு.க வேட்பாளர் ராமு.

சட்டமன்றத் தேர்தலில், காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குக் கடைசிச் சுற்று வரை நெருக்கடி கொடுத்த அ.தி.மு.க வேட்பாளர் ராமு குறித்து பெரிதாகப் பேசப்பட்டது. 25 சுற்றுகளாக எண்ணப்பட்ட மின்னணு வாக்குகளில், 432 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனைப் பின்னுக்குத் தள்ளியிருந்தார் ராமு. இறுதியாக, தபால் வாக்குகள் துரைமுருகனுக்குக் கைகொடுத்ததால், 746 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க வேட்பாளர் ராமு
அ.தி.மு.க வேட்பாளர் ராமு

தபால் வாக்குகள் மொத்தம் 3,349. அவற்றில் 517 வாக்குகள் செல்லாதவை எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராகவும், அவை முன்னவராகவும் துரைமுருகன் முக்கியப் பங்குவகிக்கிறார். இந்தநிலையில், துரைமுருகன் வெற்றிபெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று தேர்தல் வழக்கு தொடர்ந்திருக்கிறார், அ.தி.மு.க வேட்பாளர் ராமு.

‘‘தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும்’’ என்றும் மனுவில் கூறியிருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கும் வரவுள்ளது. இது தொடர்பாக, நம்மிடம் பேசிய ராமு, ‘‘காட்பாடி தொகுதியில் துரைமுருகன் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர். இதனால், தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அரசு ஊழியர்கள் யார் யாரென்று, அவர்களின் அசோசியேஷன் மூலம் முன்கூட்டியே அத்துப்படியாகத் தெரிந்துவைத்திருக்கிறார்.

துரைமுருகனுடன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
துரைமுருகனுடன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

வாக்குகள் எண்ணப்பட்டதில் சந்தேகம் இருக்கிறது. எனவே, தபால் வாக்குகளை முறையாக ஆய்வு செய்து மீண்டும் எண்ணப்பட வேண்டும். விடுபட்டுப்போன ஒரு மின்னணு வாக்குப்பெட்டியிலிருந்த வாக்குகளையும் எண்ண வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சில தகவல்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட பின்னரே வழக்கு தொடர்ந்திருக்கிறேன். தேர்தல் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்றபோது, நீதிபதிகளின் கண்காணிப்பில் எண்ணுவார்கள். உயர் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லையெனில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன்’’ என்கிறார் திட்டவட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு