Published:Updated:

அரசு அதிகாரியான தேர்தல் ஆணையருக்குக் கோடிக்கணக்கில் சொத்து!- மனைவி, சகோதரிக்கு நோட்டீஸ்

மத்திய அரசின் கையில் இருக்கும் வருமானவரித்துறை, தேர்தல் ஆணையர் அசோக் லவாஸாவின் மனைவி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

அசோக் லவாஸா
அசோக் லவாஸா

அரசியல் எதிரிகளை மத்திய அரசு பழிவாங்குவதாகக் குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையரான அசோக் லவாஸாவும் பழிவாங்கப்படும் பட்டியலில் இணைந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலின்போது, தேர்தல் விதிகளை மீறிய செயல்களில் ஈடுபட்டதாகப் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மீது புகார் எழுந்தபோது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அசோக் லவாஸா ஆதரவு தெரிவித்தார்.

மனைவியுடன் அசோக் லவாஸா
மனைவியுடன் அசோக் லவாஸா

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதிலும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் சுஷில் சந்திராவுடன் அசோக் லவாஸா மாற்றுக் கருத்து கொண்டிருந்தார். இவரின் மகள் அவ்னி ஜம்முவில் உள்ள லே மாவட்டத்தின் ஆட்சியர். கடந்த மக்களவை தேர்தலில் இந்த மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியான அவ்னி, ராணுவ அதிகாரிகள் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது, மத்திய அரசின் கையில் இருக்கும் வருமானவரித்துறை, தேர்தல் ஆணையர் அசோக் லவாஸாவின் மனைவி மற்றும் உறவினர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 நிறுவனங்களில் இயக்குநராக இருந்து வரும், அசோக் லவாஸாவின் மனைவி நோவல் சிங்குக்குக் கிடைத்த வருமானம் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்யக் கோரப்பட்டுள்ளது. கிர்கானில் ரூ.7.6 கோடி மதிப்புள்ள 4 மாடிக் கட்டடம் அசோக் லவாஸா மற்றும் அவரின் மனைவிக்குச் சொந்தமாக உள்ளது. இந்தக் கட்டடம் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்களுடன் அசோக் லவாஸா
தேர்தல் ஆணையர்களுடன் அசோக் லவாஸா

தற்போது, அசோக் லவாஸாவின் சகோதரி சகுந்தலா மற்றும் மகன் அபீருக்கும் வருமான வரித்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நவ்ரிஸ் ஆர்கானிக் என்ற நிறுவனத்தில் அபீர் இயக்குநராக உள்ளார். இவருக்கு, இந்த நிறுவனத்தில் 10,000 பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.1.5 கோடி ஆகும். மொரிஷியஸ் நாட்டில் உள்ள சாமா கேபிடல் நிறுவனம் நவ்ரீஸ் ஆர்கானிக் நிறுவனத்தில் ரூ.7.25 கோடி முதலீடு செய்துள்ளது. இது குறித்து விளக்கமளிக்குமாறு அபீருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அசோக் லவாஸாவிடமிருந்து சகுந்தலா கிர்கானில் ரூ.1.86 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கியுள்ளார். இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு சகுந்தலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.