Published:Updated:

`கொரோனா காலத்தின் முதல் தேர்தல்!' - 3 கட்ட வாக்குப் பதிவுக்குத் தயாராகும் பீகார்

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பீகாரில், நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. 243 உறுப்பினர்கள்கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் முடிவடையவிருக்கிறது. இதையடுத்து, பீகார் மாநிலத் தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று உள்ளவர்களும் வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார்.

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுனில் அரோரா, ``பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். 16 மாவட்டங்களிலுள்ள 71 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக அக்டோபர் 28-ம் தேதி அன்று தேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெறும். மூன்றாம் கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7 -ம் தேதி தேர்தல் நடைபெறும். மூன்று கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பீகாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தேர்தலைப் பாதுகாப்புடன் நடத்துவதில் தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டுவருகிறது. பெருந்தோற்று நேரத்தில் நடத்தப்படும் பீகார் மாநிலத்தின் இந்தத் தேர்தல், வரலாற்றில் மிகப்பெரிய முக்கியமான தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படும்'' என்றார்.

`வாக்காளர்களுக்கு கிளவுஸ்; ஆன்லைன் வேட்புமனு!’ - தேர்தல் ஆணைய விதிமுறைகள் சொல்வதென்ன?

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் நடத்தப்படும் பீகார் மாநிலத் தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் விதிமுறைகள்...

* பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்; டெபாசிட் பணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

* நேரடியாக வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, வேட்பாளருடன் இருவரை மட்டுமே அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

* பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அந்த நேரம் நீட்டிக்கப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மாவோயிஸ்ட் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பகுதிகளுக்கு இது பொருந்தாது.

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

* ஒரு வாக்குச் சாவடிக்கு 1,500 வாக்காளர்கள் என்று இருந்ததை தற்போது 1,000 வாக்காளர்களாக குறைத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். பீகாரில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 65,337-ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சம் வரை அதிகரிக்கும் என்று அறிவித்திருக்கிறது.

* பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.2 கோடியிலிருந்து 7.2 கோடியாக உயர்ந்திருக்கிறது. மொத்தம் 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கிறார்கள். 16 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்ரிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

* பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏழு லட்சம் சானிடைஸர்கள், 46 லட்சம் மாஸ்குகள், ஆறு லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), 6.7 லட்சம் முகக்கவசங்கள், 23 லட்சம் (ஜோடி) கையுறைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி... 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும்! - தேர்தல் ஆணையம் #NowAtVikatan

இதேபோல வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஒரு முறை பயன்படுத்தப்படும் 7.2 கோடி கையுறைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார்.

``பீகார் தேர்தலில் தனிமைப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள், அஞ்சல்வழி வாக்களிக்கும் முறையைத் தேர்ந்தெடுத்தவர்கள் தவிர மற்ற அனைவரும் வாக்குச்சாவடியில் நீட்டிக்கப்பட்டுள்ள கடைசி ஒரு மணி நேரத்தில், அந்தந்த வாக்குச் சாவடிகளின், சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் வாக்களிக்க முடியும்’’ என்றும் சுனில் அரோரா தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு