பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கும் குருவானவரிடம் தேர்தல் வரை இணக்கத்தில் இருந்தார் பணிவானவர். என்ன நினைத்தாரோ, இப்போதெல்லாம் குருவானவர் போன் செய்தால்கூட எடுப்பது இல்லையாம். வாட்ஸ்அப் செய்திகள் டெலிவரியானாலும் பதில் இல்லையாம். ‘வலிக்கிறப்ப வருவாருல்ல, அப்போவெச்சுக்கிறேன்’ எனக் கங்கணம் கட்டிக் காத்திருக்கிறாராம் குருவானவர். #நீங்களும் தர்மயுத்தம் நடத்துங்க...

பம்பரத் தலைவரின் உடல்நிலை நாளுக்கு நாள் நலிந்துவருகிறதாம். ‘வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெறலாமே...’ எனக் குடும்பத்தினர் வலியுறுத்த, அறவே வேண்டாம் என மறுக்கிறாராம். ‘நான் திடகாத்திரமாத்தானே இருக்கேன்...’ என உடற்பயிற்சிகள் செய்து காட்டுகிறாராம். குடும்பத்தினர் ரொம்பவே வற்புறுத்துவதால் மூலிகைச் சிகிச்சைகளை மட்டும் எடுத்துக்கொள்கிறாராம். #புயல்போல் மீண்டு வாங்க!

கிசுகிசு

கட்சியில் தங்கைக்குப் பதவி கொடுக்கப் பலரிடமும் பேசி எதிர்ப்புகள் வராதபடி பார்த்துக்கொண்டாராம் செயல் புள்ளி. இதற்கிடையில் பல ஊடகங்களில் தங்கைக்குப் பதவி கொடுக்கப்படப்போவதாகச் செய்திகள் கசிய, ‘இதையெல்லாம் யார்தான் மீடியாவுக்குக் கசியவிடுறது’ எனக் கேட்டுக் கொந்தளித்தாராம் செயல் புள்ளி. பதவி அறிவிப்பு தள்ளிப்போக இதுதான் காரணமாம். #நான் கொந்தளிச்ச செய்தியையும் எவன்டா மீடியாவுக்குக் கொடுத்தது?

‘கடந்த முறை எனக்குக் கொடுத்த சுகாதாரத்துறையையே மறுபடியும் ஒதுக்கிடுங்க’ எனத் தேர்தலின்போது தலைமைக்குக் கோரிக்கைவைத்த வாசனைப் புள்ளி இப்போது ‘தயவுபண்ணி சுகாதாரத்துறையைக் கொடுத்துடாதீங்க’ எனக் கும்பிட்டுக் கேட்கிறாராம். ‘களத்துக்குப் போகணும், பேட்டி கொடுக்கணும், வைரஸைத் தாங்குற வயசு இல்லையே’ என்கிறாராம் வேதனையோடு. #அந்த பயம் இருக்கட்டும்… இப்படிக்கு கொரோனா.

கிசுகிசு

எந்த அறிவிப்பாக இருந்தாலும், நடவடிக்கையாக இருந்தாலும் டெல்லியின் சிக்னல் வந்த பிறகே அதைச் செயல்படுத்துகிறாராம் கட்சிகளைக் கட்டுப்படுத்தும் கமிஷனர். ‘வாக்கு எண்ணிக்கை நாளிலும் டெல்லியின் சிக்னல்படிதான் செயல்படுவாரோ?’ என்று இப்போதே கவலையில் ஆழ்ந்துவிட்டன எதிர்க்கட்சிகள். #‘சத்ய’ சோதனை!

பரபரப்பான பரப்புரையை முடித்துவிட்ட வாரிசு, இப்போது ரீமேக் படம் ஒன்றின் ஷூட்டிங்கில் இருக்கிறார். ‘‘மே 6-ம் தேதி ஷூட் இல்லாமல் பார்த்துக்கங்க. அன்னிக்கு அமைச்சரவை பொறுப்பேற்குது’’ என்றாராம். பெருந்தலைவர் ஒருவரின் பெயர்கொண்ட இயக்குநரோ, ‘‘வெற்றிச் சேதிக்கு முன்னாலேயே நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்துட்டாங்களே...’’ என்று தலையில் அடித்துக்கொண்டாராம். #துணை முதல்வர் பதவி கேட்பீங்களா சார்?

கிசுகிசு

வெளிநாட்டுப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சமீபத்தில் இறந்த நகைச்சுவை நடிகரின் வீட்டுக்கு தளபதி நடிகர் விசிட் செய்தது, அந்தக் குடும்பத்தினருக்கு ரொம்பவே ஆறுதலாக அமைந்ததாம். ‘சாரோட மகள் திருமணத்தில் நான் முதல் ஆளாக நிற்பேன்’ என தளபதி நடிகர் வாக்குறுதி கொடுக்க, குடும்பத்தினர் கண்கலங்கிவிட்டார்களாம். #வெல்டன் மாஸ்டர்!

‘நடுநிலை நடிகரை வீழ்த்தி நான் வென்றே தீருவேன்’ எனச் சபதம் போட்டுச் சொல்கிறார் காவிக்கட்சியின் மகளிரணித் தலைவி. ஆனால், தமிழகக் கட்சித் தலைமையோ, ‘அம்மணி ஜெயிப்பது குதிரைக்கொம்பு’ என டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது. அம்மணி ஜெயித்தால் தலைவர் பதவி அவருக்குப் போய்விடும் என்கிற அச்சத்தில் கடவுள் பிரமுகர் செய்யும் கைங்கர்யம்தான் இதுவாம். #அட முருகா!

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும், மோட்டார் நடிகருக்கும் இடையே இரண்டு மாதங்களாகப் பஞ்சாயத்து நடக்கிறதாம். ‘நான் உரிய வருமானவரியைக் கட்டிவிட்டேன்’ என்கிறாராம் நடிகர். ‘இன்னமும் பாக்கி இருக்கிறது’ என்கிறார்களாம் அதிகாரிகள். ‘கெடுபிடிக்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்குமோ?’ என்ற விசாரணையும் நடிகர் தரப்பில் நடக்கிறது. #‘வலிமை’யான ஆட்களையுமே சீண்டுறாங்களே!

தேர்தல் முடிந்தவுடனேயே வெளிநாட்டுப் பயணம் போய் ரிலாக்ஸ் பண்ண நினைத்தாராம் மாடு புகழ் மந்திரி. இதர விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டு, அதற்கான ஆட்களும் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்களாம். குஜால் திட்டங்களுக்கு கொரோனா குழிபறிக்க, மனிதர் நொந்துபோய்விட்டாராம். #ஹெல்த்தைப் பார்த்துக்கங்க சார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு