Published:Updated:

எலெக்‌ஷன் ஜங்ஷன்

எலெக்‌ஷன் ஜங்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்‌ஷன் ஜங்ஷன்

- குடவோலை குமரன்

எலெக்‌ஷன் ஜங்ஷன்

- குடவோலை குமரன்

Published:Updated:
எலெக்‌ஷன் ஜங்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்‌ஷன் ஜங்ஷன்

ஐ லவ் யூ சொன்ன மகளிரணி... வெட்கத்தில் சரத்!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் மார்ச் 3-ம் தேதி நடந்தது. கூட்டத்தில் பேசிய மாநில துணைப் பொதுச்செயலாளர் சுந்தர், ‘‘தலைவர்கூட 25 வருசமா பயணிச்சுட்டு வர்றேன். எனக்குத் தலைவரை ரொம்பப் பிடிக்கும். பல மாவட்டங்கள்ல இருந்து நீங்க தூத்துக்குடிக்கு வந்திருக்கீங்கன்னா... தலைவரை நேசிக்கிறதுனாலதானே! நான் ஒரு வார்த்தையைச் சொல்றேன். நீங்க எல்லாரும் அதை சத்தமாச் சொல்லணும்’’ எனச் சொல்லிவிட்டு ‘‘ஐ லவ் யூ... தலைவரை நான் நேசிக்கிறேன்’’ என்றார். அனைவரும் திரும்பச் சொன்னபோது, மகளிரணிப் பகுதியிலிருந்து சத்தம் அதிகமாக வந்தது. அதைப் பார்த்து முகம் சிவக்க வெட்கத்தோடு சிரித்தார் சரத்குமார். #ஓ... பாட்டாவே பாடிட்டீங்களா?

எலெக்‌ஷன் ஜங்ஷன்

எம்.எல்.ஏ என்று அழைத்த குஷ்பு... புளகாங்கிதம் அடைந்த நயினார்!

அ.தி.மு.க கூட்டணி சார்பாகத் தொகுதிப் பங்கீடுகள் முடிவாகும் முன்பே, நெல்லை சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகக் கட்சியின் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த நடிகை குஷ்பு, செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அதற்கு சற்றுத் தாமதமாக நயினார் நாகேந்திரன் வர, அவரைப் பார்த்ததும் குஷ்பு, ‘‘வாங்க எம்.எல்.ஏ..!’’ என்று சொல்லி எழுந்தார். ‘‘இன்னும் வேட்பாளர் யாருன்னே தெரியலை... அதுக்கு முன்னாடியே தொகுதியில ஜெயிச்சுட்டதுபோல பில்டப் குடுக்குறாங்களே...’’ என்று சொல்லிச் சிரித்தார்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள். #அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

சிக்கலில் மருதமலை சேனாதிபதி!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு, மருதமலை சேனாதிபதிதான் தி.மு.க வேட்பாளர் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. இந்தநிலையில், அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனுடன் சேனாதிபதி இருக்கும் படங்களை அவரின் எதிர்க் கோஷ்டியினர் வைரலாக்கிவருகிறார்கள். அதிலும் குறிப்பாக, சேனாதிபதியின் வீட்டு விசேஷத்தில் அன்பரசன் கலந்துகொண்ட படங்களைச் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரப்பி வருகிறார்கள். சேனாதிபதியின் பிசினஸ் வளர்ச்சிக்கு அமைச்சர் வேலுமணி தரப்பும் முக்கியக் காரணம் என்றும் தகவல் பரப்பப்பட, தலைமைக்கு இந்தப் புகார் செல்வதற்கு முன்பே முந்திக்கொண்ட சேனாதிபதி, “அவர் எங்க உறவினர். அதான் வீட்டுக்கு வந்தார்” என்று தலைமையிடம் போன் போட்டு சொல்லியிருக்கிறார். வேட்பாளர் பட்டியல் வெளிவரும்போதுதான், போட்டோ விவகாரம் வேலை செய்ததா இல்லையா என்பது தெரியவரும். #யாரோ... யாரோடு இங்கு யாரோ!

முட்டி மோதும் பூண்டி கலைவாணன்... முட்டுக்கட்டை போடும் டி.ஆர்.பாலு!

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில், கருணாநிதி குடும்பத்தினர் யாரும் போட்டியிட மாட்டார்கள் என தி.மு.க தலைமை சொல்லிவிட்டதாம். இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன், அங்கு போட்டியிட ஆர்வம் காட்டியிருக்கிறார். ஆனால், அவரை தி.மு.க-வுக்குச் செல்வாக்கு இல்லாத நன்னிலம் தொகுதிக்கு மாற்றிவிட டி.ஆர்.பாலு முயன்றுவருகிறாராம். ‘கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் பூண்டி கலைவாணன் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றால், தன் மகன் டி.ஆர்.பி.ராஜாவின் செல்வாக்கு மாவட்டத்தில் குறைந்துவிடும்’ என்று பாலு நினைப்பதால்தான் இந்த முட்டுக்கட்டை முயற்சி என்கிறார்கள். இருப்பினும், திருவாரூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள கலைவாணன் முட்டி மோதி வருகிறாராம். #நெஞ்சுக்கு பீதி!

காது கூசும் அளவுக்கு அர்ச்சனை... வில்லங்க ஆடியோவில் சிக்கிய தி.மு.க நிர்வாகி!

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக இருக்கும் வழக்கறிஞர் துரை பேசியதாக, ஆடியோ ஒன்று தி.மு.க தலைமை வரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஆடியோவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், நெல்லை மாவட்ட

எம்.எல்.ஏ-க்கள் பற்றி படுமோசமான வார்த்தைகளால் அர்ச்சிக்கப்பட்டிருக்கிறது. ‘‘தேர்தல் நேரத்துல எனக்கு வேண்டாத யாரோ திட்டமிட்டு இதுபோல போலியா ஆடியோவை உருவாக்கி உலவவிட்டிருக்காங்க. இது மூலமா கட்சியிலருந்து என்னை ஓரங்கட்ட முயற்சி நடக்குது’’ என்கிறார் துரை. எது எப்படியோ, அந்த ஆடியோவைச் சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால், காதில் ரத்தம் வந்துவிடும். #ஒய் பிளட்..? சேம் பிளட்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

ராகுல் விசிட்... மொழிபெயர்க்க போட்டிபோட்ட எம்.எல்.ஏ-க்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில், ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது அவரின் பேச்சை மொழிபெயர்க்க பெரும் போட்டி நடந்திருக்கிறது. கன்னியாகுமரியில் கே.எஸ்.அழகிரி மொழிபெயர்த்தார். அடுத்ததாக, தக்கலையில் மாநிலத் துணைத்தலைவர் ராபர்ட் புரூஸ் மொழிபெயர்த்தார். அடுத்ததாக, குளச்சலில் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘எனது தொகுதி, நான்தான் மொழிபெயர்ப்பேன்’’ என எம்.எல்.ஏ பிரின்ஸ் அடம்பிடித்து மைக்கை வாங்கி மொழிபெயர்த்தார். அதன் பிறகு விளவங்கோடு தொகுதியில் குழித்துறை, களியக்காவிளை பகுதிகளில் ராகுலின் பேச்சை மொழிபெயர்க்க, முண்டியடித்துக்கொண்டு மைக்கை வாங்கினார் தொகுதி எம்.எல்.ஏ விஜயதரணி. ‘‘ராகுலின் பேச்சை மொழிபெயர்த்தாவது சீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதாலேயே இந்தப் போட்டி’’ என்கிறார்கள் கதர்ச்சட்டைக்காரர்கள். #மொழிபெயர்க்குறதுக்கு எல்லாமா சீட் குடுக்குறாங்க!?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism