Published:Updated:

எலெக்‌ஷன் ஜங்ஷன்

விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
விஜயபாஸ்கர்

ஊட்டி தொகுதியில் மருத்துவர் சுரேஷ்பாபு போட்டியிடவிருக்கிறார். கமலின் தீவிர ரசிகரான இவர், தற்போது முரட்டு மீசையுடன் உலவிவருகிறார்.

எலெக்‌ஷன் ஜங்ஷன்

ஊட்டி தொகுதியில் மருத்துவர் சுரேஷ்பாபு போட்டியிடவிருக்கிறார். கமலின் தீவிர ரசிகரான இவர், தற்போது முரட்டு மீசையுடன் உலவிவருகிறார்.

Published:Updated:
விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
விஜயபாஸ்கர்

கமல்போல மீசை...பயந்து ஓடும் நோயாளிகள்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளிலும் ம.நீ.ம போட்டியிடுகிறது. ஊட்டி தொகுதியில் மருத்துவர் சுரேஷ்பாபு போட்டியிடவிருக்கிறார். கமலின் தீவிர ரசிகரான இவர், தற்போது முரட்டு மீசையுடன் உலவிவருகிறார். எப்படியும் இந்தத் தேர்தலில் தனக்கு நிச்சயமாக சீட் கிடைக்கும் என்பதைத் தெரிந்து, முன்பிருந்தே கமல் போன்று மீசை வளர்ப்பில் ஈடுபட்டுவந்தார். இவரது ஹேண்டில்பார் மீசையைப் பார்த்து, இவரது கிளினிக்குக்கு வரும் நோயாளிகள் சிலர் பயந்து ஓடுகிறார்களாம்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

‘‘அப்பாவைப் பின்தொடர்வேன்!’’ - தேர்தலில் போட்டியிடும் அன்னலட்சுமி

கரூர் மாவட்டம், முதலைப்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 200 ஏக்கர் ஏரியை மீட்க, திருச்சி மாவட்டம், இனாம்புலியூரைச் சேர்ந்த வீரமலை என்பவர் வழக்கு தொடுத்தார். அதற்காக, அவரையும் அவர் மகன் நல்லதம்பியையும் வெட்டிக் கொன்றார்கள். அந்த வழக்கு கரூர் முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்தநிலையில், வீரமலையின் மகள் அன்னலட்சுமி ‘மக்கள் பாதை அமைப்பு’ சார்பில், கால்பந்து சின்னத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். “என் தந்தை வழியில், சமூக அவலங்களுக்காகச் சமரசம் இல்லாமல் உழைப்பேன்!” என்று துணிச்சலோடு களத்தில் நிற்கிறார் அன்னலட்சுமி.

எலெக்‌ஷன் ஜங்ஷன்

‘‘எங்க அப்பா... உங்க வீட்டுப் பிள்ளை!’’ - பிரசார பிரியதர்ஷினி

விராலிமலை தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்துவருகிறார். செல்லும் இடங்களுக்கெல்லாம் தனது மகள் ரிதன்யா பிரியதர்ஷினியையும் அழைத்துச் செல்லும் விஜயபாஸ்கர், பிரசாரத்திலும் ஈடுபடுத்திவருகிறார். “இவரை எங்க அப்பான்னு சொல்லுறதைவிட... உங்க வீட்டுப் பிள்ளைன்னுதான் சொல்லணும். அப்படிச் சொல்றதுதான் சந்தோஷம். ஏற்கெனவே நீங்க வாய்ப்பு கொடுத்தீங்க, தொகுதிக்குள் காவிரி நீரைக் கொடுத்தாரு. மறுபடியும் வாய்ப்பு கொடுத்தீங்கன்னா, காவிரி ஆற்றையே இங்கே கொண்டுவருவாரு” என்று ‘பில்ட்அப் பிரசாரம்’ செய்கிறார் பிரியதர்ஷினி. கடந்த தேர்தலைப்போலவே மகளின் ‘சென்ட்டிமென்ட்’ பிரசாரம் ஓட்டாக மாறும் என்று நம்புகிறார் விஜயபாஸ்கர்.

எலெக்‌ஷன் ஜங்ஷன்

“ஓ.பி.எஸ் துரோகி..!” - தி.மு.க - அ.ம.மு.க கூட்டணி கோஷம்

சமீபத்தில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வரவேற்க, போடி பார்க் ஸ்டாப்பில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது, அ.ம.மு.க வேட்பாளர் முத்துச்சாமியை வரவேற்க, அ.ம.மு.க-வினரும் அங்கே வந்தனர். சாலையின் இருபுறமும் இரு கட்சியினரும் நின்றிருந்தனர். அப்போது, அந்த வழியாகப் போன யாரோ ஒருவர், திடீரென “ஓ.பி.எஸ் ஒழிக...” என கோஷம் எழுப்ப, அதை இரு கட்சியினரும் வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, “ஓ.பி.எஸ் துரோகி... ஓ.பி.எஸ் ஒழிக...” எனச் சில நிமிடங்கள் முழக்கமிட ஆரம்பித்தனர். இதனால் கொஞ்ச நேரம் அங்கே பரபரப்பான சூழல் நிலவியது. “இப்பவே கூட்டணிவைத்துக் கோஷம் போடுகிறார்களே..!” என போடி தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். தகவல் ஓ.பி.எஸ் காதுக்குப் போக, கடுமையாக டென்ஷனாகியிருக்கிறார்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

“எனக்கு ஏன்ண்ணே சீட் கொடுக்கல?” - கதறிய பரமேஸ்வரி... அதிர்ந்த எடப்பாடி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் செல்வதற்காகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் செல்வதற்காகவும் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி விமான நிலையம் வந்தனர். அவர்களை அ.தி.மு.க வேட்பாளர்களான வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, கு.ப.கிருஷ்ணன், ப.குமார், பத்மநாபன், இந்திராகாந்தி, முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரி, திடீரென முதல்வரின் காலில் விழுந்து, “அண்ணே... நான் என்னண்ணே தப்பு பண்ணுனேன். எனக்கு ஏன்ண்ணே சீட் கொடுக்கல?” என்று சத்தம் போட்டுக் கையெடுத்துக் கும்பிட்டுக் கதற ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர், “கொஞ்சம் பொறுத்திருங்க!” என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார். இங்கு நடந்த மற்றொரு முக்கியமான காட்சி... ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணன், விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதியைப் பார்த்ததும் வணக்கம் சொல்ல... அவரை சட்டை செய்யாமல் கூலாகக் கடந்து சென்றார் வளர்மதி.

எலெக்‌ஷன் ஜங்ஷன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism