Published:Updated:

எலெக்‌ஷன் ஜங்ஷன்

கட்டித்தழுவிய எதிரெதிர் துருவங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கட்டித்தழுவிய எதிரெதிர் துருவங்கள்

- குடவோலை குமரன்

எலெக்‌ஷன் ஜங்ஷன்

கட்டித்தழுவிய எதிரெதிர் துருவங்கள்!

ஊட்டி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கணேஷ், மூன்றாவது முறையாக அங்கு போட்டியிடுகிறார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் இட்டக்கல் போஜராஜ் போட்டியிடுகிறார். இதன்படி காங்கிரஸும் பா.ஜ.க-வும் நேருக்கு நேர் மோதுகின்றன. போஜராஜ் முன்னாள் காங்கிரஸ்காரர். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இருவரும் ஊட்டி தொகுதிக்குள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். சமீபத்தில் இரு தரப்பினரும் கடநாடு பகுதியில் பிரசாரம் முடித்துவிட்டுக் கிளம்பும்போது எதிரெதிரே சந்தித்துக்கொள்ள, பழைய பாசத்தை மறக்காத இட்டக்கல் போஜராஜ், ‘‘என்ன கணேஷ் சௌக்கியமா?’’ என்றபடியே நெருங்கிச் சென்றார்.

எலெக்‌ஷன் ஜங்ஷன்

இந்த விசாரிப்பில் கணேஷும் நெகிழ்ந்துபோக, இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டார்கள். இதைக் கண்ட இரு கட்சிகளின் தொண்டர்களோ, “ஆஹா... தேசியக் கட்சிகளை அரசியல் நாகரிகத்துல அடிச்சுக்க முடியாது...” என்று புருவம் உயர்த்தினார்கள்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

‘‘என்னைப் பழிவாங்க என் கணவரை மாத்திட்டாங்க!’’

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி, வி.ஐ.பி-க்கள் போட்டியிடும் தொகுதியாக மாறியிருக்கிறது. தி.மு.க சார்பாக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனும், அ.தி.மு.க சார்பாக முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் போட்டியிடும் இந்தத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக ராணி ரஞ்சிதம் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரையின் மனைவி. ராணி ரஞ்சிதம் வேட்புமனுத் தாக்கல் செய்ததும், நெல்லை மாநகரக் காவல்துறையில் ஏ.எஸ்.பி-யாக இருந்த வெள்ளதுரை சென்னைக்கு மாற்றப்பட்டார். ‘‘என்னைப் பழி வாங்குறதுக்காக என் கணவரைப் பணியிட மாற்றம் செஞ்சுட்டாங்க. ஆனாலும், என் வெற்றியைத் தடைசெய்ய முடியாது” என்கிறார் விடாப்பிடியாக!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

‘‘மாஸ்க் போடுங்க மக்களே..!’’

தி.மு.க தொடர்ச்சியாக ஐந்து முறை வெற்றிபெற்ற பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க சார்பாக கே.ஜே.சி.ஜெரால்ட் போட்டியிடுகிறார். பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் வேட்பாளர் ஜெரால்டுக்காகப் பிரசாரம் செய்த அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா மிகவும் களைப்பாகக் காணப்பட்டார். “மேடத்துக்கு என்னாச்சு!” என்று தொண்டர்கள் முணுமுணுத்துக்கொண்டிருக்கும்போதே பேசத் தொடங்கிய விந்தியா, ‘‘நான் கொரோனாவுலருந்து மீண்டு வந்திருக்கேன். நோயிலிருந்து மீண்டாலும், பேசும்போது மூச்சு வாங்குது... ரொம்பக் கஷ்டமா இருக்கு. மாஸ்க் போடுங்க மக்களே...’’ என்று அவர் கெஞ்சியதும், பாக்கெட்டில் வைத்திருந்த மாஸ்கை எடுத்து முகத்தில் போட்டுக்கொண்டார்கள் மாஸ்க் அணியாத மக்கள்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

‘‘வேட்பாளர் வர்றார்... வழிவிடுங்க!’’

தி.மு.க தலைவர் ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்திலுள்ள எட்டுத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் ஒரத்தநாட்டுக்கு வரவழைத்து பிரசாரம் செய்தார். அப்போது எட்டு வேட்பாளர்களுக்கு பதிலாக ஏழு வேட்பாளர்கள் மட்டும் கும்பிட்டபடி நின்றுகொண்டிருக்க... ஒருவர் மட்டும் மிஸ்ஸிங். ஸ்டாலினோ அதைக் கண்டுகொள்ளாமல் பிரசாரம் செய்ய, திடீரென்று கூட்டத்தில் சத்தம்... “வேட்பாளர் வர்றார்... வழிவிடுங்க, வேட்பாளர் வர்றார்... வழிவிடுங்க’’ என்று ஒருவர் சத்தமாகக் கத்திக்கொண்டே வர, பின்னால் திருவிடைமருதூர் வேட்பாளரான கோ.வி.செழியன் ஓடிவந்து மேடையில் ஏறினார். “சாரிங்க” என்பதை அவர் முணுமுணுப்பாகக் கூற... கடுகடுத்த முகத்துடன் ‘போய் நில்லுங்க’ என்று பொருள்படும்படி கண்ணசைத்தார் ஸ்டாலின். இதை கவனித்த தொண்டர்களோ, ‘‘இதென்ன ஸ்கூல் பசங்க கதையாயில்ல இருக்கு’’ என்று கமென்ட் அடித்தனர்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

‘‘எனக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு!’’

கரூர் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர், தே.மு.தி.க-வின் தொகுதிப் பொறுப்பாளராக இருந்த சோமூர் ரவி. இவர், கடந்த 2006 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் கரூர் தொகுதியில் போட்டியிட்டவர். இந்நிலையில், மார்ச் 17-ம் தேதி தே.மு.தி.க தலைமை, ‘உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சோமூர் ரவி மாற்றப்பட்டு, தே.மு.தி.க மாவட்டப் பொருளாளர் கஸ்தூரி என்.தங்கராஜ் வேட்பாளர் ஆக்கப்பட்டிருக்கிறார்’ என்று அறிவித்தது. ஆனால் சோமூர் ரவியோ, ‘‘எனக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு. இங்குள்ள கட்சி நிர்வாகிகள் சிலர்தான் சரியில்லை’’ என்று அழுது தீர்த்துவிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகி, தே.மு.தி.க-வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்