Election bannerElection banner
Published:Updated:

`கொரோனாவிடம் தோற்றுவிடக் கூடாது’ - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

`மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இந்தத் தேர்தலில் முதன்முறையாக அளிக்கப்பட்ட தபால் வாக்கு நடைமுறையை கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆட்பட்ட வாக்காளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்’ என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்காக, சுமார் 67,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இவற்றில் சுமார் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான அலுவலர்கள் பணியாற்றவிருக்கிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 18 மற்றும் 27-ம் தேதிகளில் அந்தந்தத் தொகுதிகளிலுள்ள தேர்தல் பயிற்சி அரங்கங்களில் இரண்டு கட்ட பயிற்சிகள் நடந்து முடிந்துள்ளன. மூன்றாம் கட்ட பயிற்சி ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வெவ்வேறுவிதமான அறிவிப்புகள் வெளிவருவதால் வாக்குச்சாவடி அலுவலர்களிடையே பல்வேறு குழப்பங்கள் தமிழகம் எங்கும் நிலவிவருகின்றன.

தேர்தல்
தேர்தல்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த மார்ச் 18 மற்றும் மார்ச் 27-ம் தேதிகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகளில் அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும், இன்னும் சில மாவட்டங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் 1-ம் நிலை ஆகியோர் மட்டும் கலந்துகொண்டால் போதுமானது எனும் அறிவிப்பு ஊடகங்களில் வெளியானது. இதனால் அலுவலர்கள் 2 மற்றும் 3-ம் நிலைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொள்வதா, வேண்டாமா எனும் குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோட்டூர் வட்டாரத் தலைவர் தங்கபாபு ‘’கொரோனா பரவல் குறித்த அச்சம் இன்னும் முழுமையாக நீங்கி விடாத சூழ்நிலையில், தமிழகம் எங்கும் மூன்றாம்கட்ட பயிற்சி வகுப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் ஒரு தெளிவான ஆணையை வழங்கி, தேர்தல் அலுவலர்கள் மத்தியில் நிகழும் குழப்பங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மேலும், வாக்குப்பதிவு அன்று கொரோனா நோயாளிகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை புரிந்து தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கூடுதல் ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது பொதுமக்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் தேர்தல் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கை.

தங்கபாபு
தங்கபாபு

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இந்தத் தேர்தலில் முதன்முறையாக அளிக்கப்பட்ட தபால் வாக்கு நடைமுறையை கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆட்பட்ட வாக்காளர்களுக்கும் விரிவுபடுத்தி பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உடல்நலனுக்கு உத்தரவாதம் அளித்து, உயிர் காத்திட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது’’ என வலியுறுத்தினார்.

தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் கொரோனா தொற்றைப் பற்றிக் கொஞ்சம்கூட மனதில் கொள்ளாமல், கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், தீவிர வாக்குச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. இதனால் வாக்குப்பதிவின்போது கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. கொரோனாவிடம் யாரும் தோற்றுவிடக் கூடாது என்பதே அனைவரின் வேண்டுதலாக இருக்கிறது. இவர்களது கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் செவி சாய்க்குமா... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு