Election bannerElection banner
Published:Updated:

தனிச் சின்னம்: இறங்கிவந்த ஸ்டாலின்... விட்டுக்கொடுக்கத் தயாராகும் திருமா... அமைதி காக்கும் வைகோ!

ஸ்டாலின்- வைகோ- திருமா
ஸ்டாலின்- வைகோ- திருமா

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், சமீபகாலமாக கமலைக் கூட்டணிக்கு அழைத்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றனர், தவிர புதுச்சேரியிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட காரணங்களால்தான் தி.மு.க தலைவர் இப்படி இறங்கிவந்திருக்கிறாரா?

``கூட்டணிக் கட்சிகளை தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திப்பதாகக் கூறுவது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தச் செய்யப்படும் சதி. மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகள் விரும்பினால், அதை வழங்குவது கடமை. அண்ணா தலைமையில் நடந்த தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன” என்கிற தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினின் அறிவிப்பு, அதன் கூட்டணிக் கட்சிகளின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ``வரும் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கு மேல்தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். `மிஷன் – 200’ என்ற இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும். 200-க்கு ஒரு தொகுதி அல்ல; ஒரு இஞ்ச்கூட குறையக் கூடாது'' எனப் பேசியது, எங்கே நம்மையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வலியுறுத்துவார்களோ என்கிற சந்தேகம், ம.தி.மு.க., வி.சி.க போன்ற கூட்டணிக் கட்சிகள் மத்தியில் எழுந்தது.

வைகோ- திருமாவளவன்
வைகோ- திருமாவளவன்

அதன் காரணமாகத்தான்,``ம.தி.மு.க-வின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதற்காக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்’’ என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், தொல்.திருமாவளவனும் ``தி.மு.க கூட்டணியில் எங்கள் கட்சி வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்’’ என்று அறிவித்தார்.

ஆனால், ஸ்டாலினின் தற்போதைய வெளிப்படையான அறிவிப்புக்குப் பிறகு,``திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என எந்த நெருக்கடியும் தரப்படவில்லை. தேர்தலுக்குச் சில நாள்கள் முன்னதாக புதிதாக ஒரு சின்னத்தைப் பெற்று, அதை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது சிரமம். அந்தச் சூழ்நிலையில் உதயசூரியன் சின்னத்தைப் பயன்படுத்துவது சாதகமானதாக இருக்கும் என தி.மு.க தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் பரிசீலிப்போம். ஆனால், எங்கள் தனித்தன்மையை இழந்துவிட மாட்டோம்’’ என ஒருபடி கீழிறங்கி வந்து கருத்து தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.

வன்னி அரசு
வன்னி அரசு

`ஏன் இந்த மன மாற்றம்?” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்.

``உதயசூரியன் சின்னத்தில்தான் வி.சி.க போட்டியிடும் என்று எங்கள் தலைவர் அறுதியிட்டுச் சொல்லவில்லை. கூட்டணித் தலைமை அப்படி ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. அதை நாங்கள் பரிசீலிப்போம் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். குறைந்தபட்சம் 12 தொகுதிகளுக்குமேல் நின்றால்தான் நாம் விருப்பப்பட்ட சின்னத்தைப் பெற முடியும். இல்லையெனில், அவர்கள் கொடுக்கும் சின்னத்தில்தான் போட்டியிட முடியும். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் 234 தொகுதிகளிலும் நிற்கப்போவதாகச் சொல்லி தனிச் சின்னத்தை வாங்கியிருப்பார்கள். எங்கள் கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு ஆரம்பிக்கப்படவில்லை. அது முடிந்த பின்னர்தான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆனால், எங்கள் தலைவர் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதேவேளையில், தி.மு.க-வின் பரிசீலனைகளையும் எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் விவாதிப்போம்’’ என்கிறார் அவர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், சமீபகாலமாக கமலை கூட்டணிக்கு அழைத்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர், தவிர, புதுச்சேரியிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில், மற்ற கூட்டணிக் கட்சிகள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட வேண்டாம் என்பதால்தான், தி.மு.க தலைவர் இப்படி இறங்கி வந்திருக்கிறாரா?

தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

``எங்கள் தலைவர் ஸ்டாலின் இப்படி முதன்முறையாகச் சொல்லவில்லை. நாங்கள், உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என கூட்டணிக் கட்சிகளை எப்போதும் நிர்பந்தித்ததில்லை. அவர்களாக, உதயசூரியன் சின்னத்தில் நிற்க விரும்பினால், கண்டிப்பாக அவர்களுக்கு உதவுவோம். கடந்த 2016 தேர்தலில்தான், இப்படி ஒரே சின்னத்தில் நிற்கும் பழக்கத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால், அப்போது, அ.தி.மு.க-வுடன் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணியில் இல்லை. ஆனால், இப்போது எங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சற்று பெரிய கட்சிகளே. அவர்கள் தனியாக நின்று அங்கீகாரத்தைப் பெற விரும்பினால், அதை நாங்கள் தடுக்கப்போவதில்லை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அதேவேளையில், கூட்டணியின் வெற்றியைக் கணக்கில்கொண்டு, உதயசூரியனில் நிற்கலாமே என ஆலோசனைகளையும் வழங்குகிறோம். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால் நிற்கலாம். மற்றபடி புதுச்சேரி விஷயங்களுக்கும் எங்கள் தலைவர் தற்போது சொன்ன கருத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. போன வருடம் மார்ச் மாதத்தின்போதே, கூட்டணிக் கட்சிகளுக்கு எங்களிடமிருந்து எந்த நிர்பந்தமும் இல்லையென ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் எங்கள் தலைவர். அதனால், அதையும் இதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவையில்லை'' என்கிறார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனிச் சின்ன விவகாரம் குறித்து, தற்போது வெளிப்படையான கருத்துகளைத் தெரிவித்துவிட்டது. ஆனால், ம.தி.மு.க இன்னும் அமைதி காத்தே வருகிறது. ஒருவேளை, தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனும் வைகோவின் கருத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறதா ம.தி.மு.க... அந்தக் கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம்,

`` கண்டிப்பாக இந்தத் தேர்தலில் நாங்கள் தனிச் சின்னத்தில்தான் நிற்கப்போகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் சூழல் வேறு. தற்போது எங்கள் கட்சியின் அங்கீகாரம் குறித்து நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதேவேளையில், தி.மு.க-வில் எங்களுக்கு எந்த நிர்பந்தமும் கொடுக்கப்படவில்லை. எங்களுக்கு பம்பரம் சின்னம் கடந்த உள்ளாட்சித் தேர்தலோடு முடிந்துவிட்டது. இந்தமுறை, மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஐந்து சதவிகிதமான 12 தொகுதிகளில் நின்றால் மட்டுமே, அதே சின்னத்தை மீண்டும் பெற முடியும். இல்லையென்றால் வேறு சுயேச்சை சின்னம்தான் கிடைக்கும். அதனால், வெற்றி வாய்ப்பு பறிபோய்விடும் என பயப்படத் தேவையில்லை. பெரிய கட்சிகளின் ஆதரவு இருந்தால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும். கடந்த காலங்களில், அப்படிக் கடைசி நேரத்தில் கிடைத்த சின்னத்தைவைத்து பலர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். அதே நம்பிக்கையோடு நாங்களும் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம்'' என்கின்றனர் நம்பிக்கையோடு.

ப்ரியன்
ப்ரியன்

தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் இது குறித்துப் பேசும்போது,

``புதுச் சின்னத்தை வாங்கி மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது கடினம். கிராமங்களில் இன்னும் சின்னத்தைப் பார்த்து வாக்களிக்கும் மக்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் ம.தி.மு.க., வி.சி.க போன்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது அந்தக் கூட்டணியின் வெற்றிக்குச் சாதகமாக இருக்கும். அதேவேளையில், தி.மு.க-வில் இல்லாத ஒருவர் அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டப்படி சில சிக்கல்களை ஏற்படுத்தும். கடந்தமுறை கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்றபோது, ம.தி.மு.க கட்சிப் பொறுப்பிலுள்ள ஒருவர் எப்படி தி.மு.க-வின் சின்னத்தில் நின்று வெல்ல முடியும் என ஒரு வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க-வில் உறுப்பினர் அட்டை வாங்கிக்கொண்டு வேண்டுமானால், போட்டியிடலாம். ஆனால், அரசியல்ரீதியாக மிகவும் பின்னடைவே. சட்டமன்றத்தில், மாறுபட்ட கருத்துகள் இருந்தால் அதைத் தெரிவிப்பதில் சிக்கல் உண்டாகும். ஏற்கெனவே, திருமாவளவன் ஒருமுறை ராஜினாமாவே செய்திருக்கிறார். ஆனால், தற்போதைய அரசியல் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு ஸ்டாலினும் திருமாவளவனும் இறங்கி வந்திருக்கின்றனர் . ம.தி.மு.க-வும் பிடிவாதம் பிடிக்காமல் இதே நிலைப்பாட்டைக் கையிலெடுத்தால் வெற்றிபெறலாம்'' என்கிறார் அவர்.

வைகோ, திருமாவின் தனிச் சின்ன முழக்கம்... ஸ்டாலினின் `மிஷன் 200’-தான் காரணமா #TNElection2021

மூத்த பத்திரிகையாளர், எஸ்.பி.லட்சுமணனிடம் பேசினோம்.

``இரண்டு தலைவர்களும் யதார்த்தைப் புரிந்துகொண்டு பேசியிருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு தொகுதியில் நிற்கும்போது பெரிய கட்சிகளின் சின்னத்தில், சின்னக் கட்சிகளை நிற்கச் சொல்வதும், அவர்கள் மறுக்காமல் நிற்பதும் சரியே. ஆனால், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும்போது, தனிச் சின்னத்தில் போட்டியிடுவதுதான் சிறிய கட்சிகளுக்கு நன்மையளிக்கும். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்துதொகுதிகள் வரை ஒதுக்க முடிவெடுத்து, இரட்டை இலைச் சின்னத்தில் நிற்கச் சொல்லி ஜெயலலிதா, வாசனிடம் வற்புறுத்தினார். ஆனால், வாசன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காரணம், தனிச் சின்னத்தில் நின்று இரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற்றால்தான் சிறிய கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஏற்கெனவே கிடைத்த அங்கீகாரத்தை தக்கவைக்கவும் இயலும். அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பெரிய கட்சிகள் நடந்துகொள்ள முற்படும்போதுதான், சிறிய கட்சிகள், 'நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்' என வெளியில் அறிவிக்கின்றன.

எஸ்.பி.லட்சுமணன்
எஸ்.பி.லட்சுமணன்

ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை நிர்பந்திக்கவில்லை என்று சொல்கிறார், அதுதான் சரியான நிலைப்பாடு. பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளை நிர்பந்திக்கும்போது, சிறிய கட்சிகளின் தொண்டர்கள் சோர்ந்துபோவார்கள். உணர்வுரீதியாக தேர்தல் வேலை செய்ய மாட்டார்கள். ஒரு கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டால், அவர்களைக் காயப்படுத்தும் எந்த வேலையையும் பெரிய கட்சிகள் செய்யக் கூடாது. தேவையில்லை என்றால் கூட்டணியிலிருந்து வேண்டுமானால் வெளியேற்றிக்கொள்ளலாம்'' என்கிறார் அவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு