உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவென்று இந்திய நாடாளுமன்றத் தேர்தலை வர்ணிப்பதுண்டு. சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களும்கூட நம் நாட்டில் ஒரு திருவிழாவைப்போல்தான் களைகட்டும். தமிழ்நாட்டில், தற்போது நடக்கவிருக்கிற உள்ளாட்சித் தேர்தல் களத்திலும் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லை. வேட்பாளர்கள் மிகத் தீவிரமாக பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். அதேவேளையில், ஒருசில இடங்களில் தேர்தல் நடக்காமலேயே வேட்பாளர்கள் தேர்வான செய்திகளும் வெளியாகின.

உண்மையிலேயே போட்டியிட யாரும் இல்லாமல், இல்லையென்றெல்லாம் ஏகமனதாக மக்கள் ஒருவரை பிரநிதியாகத் தேர்ந்தெடுப்பதில் எந்தப் பிரச்னையுமில்லை. சில இடங்களில் அப்படித் தேர்வும் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால், பெருவாரியான இடங்களில் `வேட்பாளர்கள் மிரட்டுப்பட்டு மனுக்களை வாபஸ் பெறவைப்பது, வேண்டுமென்றே மனுக்களை நிராகரிப்பது, சாதி, மத, ஊர்க்கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தித் தேர்வுசெய்வது, ஏலம்விட்டுத் தேர்வுசெய்வது போன்ற முறைகளால் பலர் தேர்வுசெய்யப்பட்டிருப்பதுதான் தேர்தல் ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளன. தமிழகம் முழுவதும் பரவலாக இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. நாம் ஒருசில உதாரணங்களைப் பார்ப்போம்...
திரைமறைவில் நடந்த டீலிங்:
தேர்தல் நடக்காமலேயே கவுன்சிலர்கள் தேர்வாவது ஒருபுறமிருக்க, கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் பேரூராட்சியையே தி.மு.க கைப்பற்றும் வேலைகள் ஜரூராக நடந்து முடிந்திருக்கின்றன. பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க மட்டுமே அனைத்து வார்டுகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. அ.தி.மு.க 6 வார்டுகளிலும், பி.ஜே.பியினர் 4 வார்டுகளிலும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையின்போது ஒரு வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடைசி நாளில் மேலும் இரண்டு அ.தி.மு.க வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர். வேட்புமனு வாபஸ் வாங்கும் நேரம் முடிந்தும், இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் அதிகாரிகள் காத்திருந்ததுதான் ஹைலைட். காரணம்,

தி.மு.க சார்பில் இந்த மாவட்டத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கும் உச்சப்புள்ளி ஒருவர், நடத்திய டீலிங்கால்தான் அவர்கள் காத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு வழியாக இரவு 7:30 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.
ஆனால், இப்போது 8 வார்டுகளில் தி.மு.க-வினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க 3 வார்டுகளிலும், பி.ஜே.பி 4 வார்டுகளிலும் மட்டுமே போட்டியிடுவதால் பெரும்பான்மை அடிப்படையில் பெரிய நெகமம் பேரூராட்சியைத் தேர்தலுக்கு முன்பே தி.மு.க வசமாக்கியுள்ளது. ``சாதிப்பாசம், சொந்த பந்தம் போன்ற காரணங்களால் தி.மு.க-வைவிட மற்ற கட்சிகள் குறைவான வார்டுகளில் போட்டியிட்டனர்” என்று குமுறுகிறார்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள்.
கமுதி ஃபார்முலா:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி 14-வது வார்டில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சத்யா என்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்தச் செய்தியால் தமிழகம் முழுவதும் பா.ஜ.க-வினர் உற்சாகமும், மாற்றுக் கட்சியினர் ஆச்சர்யமும் அடைந்தார்கள். ஆனால், ` `இந்தமுறை நாங்க, அடுத்த முறை நீங்க’ என்கிற டீலிங் அடிப்படையில் சமூதாயரீதியாக அளிக்கப்பட்ட வாய்ப்பு. அதனால் பெருமைப்பட ஏதுமில்லை’ என்கிறார்கள் அப்பகுதி அரசியலை கவனித்துவருபவர்கள். கடந்த முறை இதே வார்டில் தி.மு.க-வைச் சேர்ந்தவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த முறை பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர, கமுதி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றிபெற்றுள்ளனர். வார்டுகளில் எந்தெந்த சாதி, மதத்தினர் அதிகம் இருக்கிறார்களோ அவர்களில் ஒருவரை அந்தச் சமுதாய சங்கத்தினர் தேர்வுசெய்து வேட்பாளராக அறிவிக்கிறார்கள். ஊர் முடிவை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதால், அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனராம்.

இதே கமுதி பேரூராட்சியில் மீதமுள்ள இரு வார்டுகளில் அ.தி.மு.க மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆளுக்கொரு வார்டில் போட்டியிடுகின்றனர். தி.மு.க மாவட்டச் செயலாளரான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் ஊராக இருந்தும் கமுதியில் ஒரு வார்டில்கூட தி.மு.க சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. காங்கிரஸும் போட்டியிடவில்லை. காரணம், சமுதாய சிண்டிகேட்டை எதிர்த்தால் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் சிக்கலைச் சந்திக்கவேண்டியிருக்குமென்பதால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக்கொள்கின்றனர். கவுன்சிலர்கள் தேர்வில் மட்டுமல்ல, பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளிலும் அதிக வார்டு உறுப்பினர்கள்கொண்ட சாதியினர் அல்லது மதத்தினர் அவர்களுக்கு இணையாகவோ, அடுத்த நிலையிலோ இருக்கும் சமூகத்தினரோடு ஒப்பந்தம் செய்துகொண்டு பதவிகளில் அமர்கிறார்கள். சுழற்சி முறையில் அடுத்த முறை மாற்றிக்கொள்கிறார்கள்.
இதே போன்ற சமுதாய சிண்டிகேட் முறை ராமநாதபுரம் மாவட்டத்தின் சாயல்குடி, அபிராமம், தொண்டி பேரூராட்சிகளிலும் தொடர்வதுதான் வேதனை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இதேபோல, தேனி மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சியிலும் பெரும்பான்மையாக இருக்கும் குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் தங்களுக்குள் பேசி, போட்டியின்றி ஒவ்வொரு முறையும் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கிறார்கள். அதேபோல இந்த முறையும் பேசி முடித்துக்கொண்டதால் சுயேச்சைகள் பலர் போட்டியின்றி தேர்வாகியிருக்கிறார்கள். குச்சனூர் பேரூராட்சி 7-வது வார்டு தி.மு.க வேட்பாளர் பந்தானம் போட்டியின்றி தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளருக்குப் பணத்தைக் கொடுத்து விலக வைத்துவிட்டதாக அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் வாபஸ் பெற மிரட்டல்?!
33 வார்டுகள்கொண்ட ராமநாதபுரம் நகராட்சியில் தி.மு.க தெற்கு நகரச் செயலாளர் பிரவீன் தங்கம் 7-வது வார்டிலும், வடக்கு நகரச் செயலாளர் கார்மேகத்தின் மகள் காயத்ரி 29-வது வார்டிலும் போட்டியிட்டார்கள். இருவருமே நகராட்சித் தலைவர் பதவியைக் குறிவைத்துள்ளனர். அதனால் இருவரையும் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் வாபஸ் பெறவைக்கப்பட்டனராம். இதில் லட்சங்கள் விளையாடியிருப்பதாகவும் குற்றசாட்டு எழுந்திருக்கிறது. வாபஸ் பெற மறுத்தவர்களின் வேட்புமனுக்கள் திட்டமிட்டே நிராகரிக்கப்பட்டதாகப் புகாரும் எழுந்தது. 7-வது வார்டில் தி.மு.க-வை எதிர்த்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் மட்டும் போட்டியிட்டார். வேட்புமனு பரிசீலனையில் இவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இது திட்டமிட்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளார். இதன் பின்னணியிலும் பல லட்சம் விளையாடியதாகச் சொல்கிறார்கள்.
சமுதாயத் தலைவர்களின் முடிவு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு பா.ஜ.க வேட்பாளர்கள், காங்கிரஸ் மற்றும் சுயேச்சை என மொத்தம் நான்கு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். இரணியல் பேரூராட்சியில் 12-வது வார்டில் அனைத்துக் கட்சியினரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்த நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் செட்டித்தெரு பெரியவர்கள் ஒன்றுகூடிப் பேசி பா.ஜ.க-வைச் சேர்ந்த ஸ்ரீகலாவை தேர்ந்தெடுத்துள்ளனராம். கணபதிபுரம் பேரூராட்சியில் மீனவர் கிராமங்களைச் சேர்ந்த 4 வார்டுகளில் ஊர் நிர்வாகிகள் பொது வேட்பாளர்களை முடிவு செய்தபோதிலும், 13-வது வார்டைத் தவிர பிற வார்டுகளில் போட்டியிட்டவர்கள் வாபஸ் வாங்கவில்லை. ஆனாலும் தாங்கள் முடிவுசெய்துள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கிராமத்தினர் பேசி முடிவெடுத்திருப்பதால் பிற வேட்பாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஊர்த் தலைவர்கள் முடிவுப்படி ஆரல்வாய்மொழி பேரூராட்சியின் 2-வது வார்டுக்கு மாதேவன்பிள்ளை, 3 -வது வார்டுக்கு சுயேச்சை வேட்பாளர் நாகலெட்சுமி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பறக்கின்றன.

ரௌடிக்கு பயந்த வேட்பாளர்கள்!
விக்கிரவாண்டி பேரூராட்சியில், 7-வது வார்டில் தி.மு.க சார்பாக ஆனந்தி என்பவர் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. காவல்துறையால் தேடப்படும் ரௌடியான கைப்பிள்ளை என்ற வரதராஜின் பின்னணி காரணமாகவே வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. போட்டியின்றி தேர்வான ஆனந்தி, ரௌடி கைப்பிள்ளையின் மனைவியின் தங்கையாம்.
எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு `கவனிப்பு!’
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலுள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியின் 9-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ரத்னாம்பாள் கண்ணன், புலியூர் பேரூராட்சி 8-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அடைக்கப்பன், உப்பிடமங்கலம் பேரூராட்சியின் 15-வது வார்டு தி.மு.க வேட்பாளரான ஜெயசக்திவேல், கரூர் மாநகராட்சி 22-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பிரேமா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து போட்டியிட மனுத்தாக்கல் செய்தவர்களை அன்பாக அல்லது மிரட்டலாக கவனித்ததால், அனைவரும் வாபஸ் பெற்றதால் இந்த வெற்றி எளிதாகியிருக்கிறது எனக் குமுறுகிறார்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்கள்.

ஊர்ப் பஞ்சாயத்து முடிவு:
நீலகிரியைப் பொறுத்தவரை ஒருசில கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு ஒன்றிரண்டு நாள்களுக்கு முன்பு ஊர் சார்பாகப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி, குறிப்பிட்ட நபர் ஒருவரைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட உத்தரவு வழங்குகின்றனர். அதேவேளையில், அந்த நபரை எதிர்த்து ஊர் மக்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது, மீறிப் போட்டியிட்டால் ஊர் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என ஊர் நிர்வாகிகள் பகிரங்கமாகவே அறிவிப்பை வெளியிடுகிறார்கள். இது போன்ற போக்கு படுகர் மக்கள் வாழும் ஹட்டிகளில் அதிகம் நடைபெற்றுவந்தது. தற்போது, மற்ற கிராமங்களிலும் இந்த நடைமுறை பரவலாகிவருகிறது. இதன் அடிப்படையிலேயே நீலகிரி மாவட்டத்தில் தற்போது அதிகரட்டி, பிக்கட்டி, கேத்தி ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒருவர் வீதம் மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனராம்.
அன்-அப்போஸ்டு லட்சியம்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சியின் 5-வது வார்டில் தி.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஆர்.எஸ்.பாண்டியன், போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக திருத்துறைப்பூண்டி தி.மு.க நகரச் செயலாளராக இருந்துவரும், ஆர்.எஸ்.பாண்டியன் இப்பகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். மூன்று முறை நகர்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நகர்மன்ற துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர். இந்த முறை ஒன் மேன் ஆர்மியாக, அன்-அப்போஸ்டாக ஜெயிக்க வேண்டும் என்பது இவரது லட்சியமாம். இவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த வார்டில், அ.தி.மு.க சார்பில் முருகதாஸ் என்பவரும் சுயேச்சையாக 6 நபர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஆர்.எஸ்.பாண்டியனுக்காக, நான்கு சுயேச்சைகள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனராம்.

இரண்டு சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியனை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் முருகதாஸ் மட்டும் களத்தில் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மனுவும் நிராகரிக்கப்பட்டது. இவரது வேட்புமனுவில் பிழை இருப்பதாகவும், இவரை முன்மொழிந்த நபர், விதிமுறைக்குப் புறம்பாக வேறொரு வேட்பாளரையும் மொழிந்துள்ளதாகவும் விதவிதமான காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நகர்மன்ற துணைத் தலைவராக தேர்த்தெடுகப்படுவது உறுதி என்கிறார்கள் இப்பகுதி திமுக-வினர்.
'உள்ளாட்சியைக் கேவலப்படுத்தும் செயல்பாடுகள்' - செந்தில் ஆறுமுகம், செயலாளர், மக்கள் நீதி மய்யம்.
``ஊரில் மிகச்சிறந்த மக்கள் சேவகர் ஒருவரை மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் பிரதிநியாகத் தேர்வு செய்வது தவறல்ல. ஆனால், சாதி, பணம் (ஏலம்), அதிகாரம், ஊர்க்கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களால் ஒருவரைத் தேர்வு செய்வது அப்பட்டமான ஜனநாயக மீறல். ஜனநாயகத்தின் உட்சபட்ச அமைப்பு உள்ளாட்சிதான். ஆனால், இங்குதான் இது போன்ற விஷயங்கள் அதிகமாக நடக்கின்றன. வேட்பாளர்களுக்குப் பணம் கொடுத்து வாபஸ் பெறவைக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. ஏற்காத வேட்பாளர்களை மிரட்டுவது ஒருபுறமென்றால், வேட்பாளரை முன்மொழிபவரை மிரட்டும் சம்பவங்களும் நடக்கின்றன. எங்கள் கட்சியில் ஒரு வார்டில் பத்துமுறை முன்மொழிபவரை மாற்றவேண்டிய சூழல் உருவானது. உள்ளாட்சி அமைப்பைக் கேவலப்படுத்தும் செயல்பாடுகள் இவையெல்லாம். நிச்சயமாக இவை மாற்றப்பட வேண்டும்.''

'அரசியல் கட்சிகள் மாற வேண்டும்' - கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
`` நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் இது போன்ற விஷயங்கள் இருந்தாலும், உள்ளாட்சியில் அதிகமாகவே இருக்கின்றன. பேரம் பேசுவது, மிரட்டி அடிபணியவைப்பது போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள்தான் பெரும்பாலும் ஈடுபடுகின்றன. நமது ஜனநாயகத்தின் பலவீனமான இணைப்பே அரசியல் கட்சிகள்தான் (Political parties are the weakest link in our democracy) என்று நான் சொல்வேன். தவிர, சாதி, மதம் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவது வெட்கப்படவேண்டிய விஷயம். நிர்வாக மாற்றங்கள் நிறைய கொண்டுவர வேண்டும். ஆனால், அரசியல் கட்சிகள் அது போன்ற விஷயங்களில் தீவிரம் காட்டுவதில்லை.
ஜனநாயகத்தின் அலங்கோலம் - பழனிதுரை, பேராசியர்
``அரசியல் அறியாமை ஒரு ஜனநாயக நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து. மக்கள் பிரதிநிதிகளாகப்போகிறவர்கள் பெரும்பாலும் பதவியைப் பற்றிய புரிதல்களில் போவதில்லை. கௌரவம், சாதி, சம்பாதிக்கும் எண்ணம் ஆகியவற்றுடன் பதவிக்கு வருகிறார்கள். இதனால், நம் மக்களாட்சி ஆரம்பநிலையைவிட்டு நகரவே இல்லை. ஒரு நாட்டில் ஜனநாயகத்தை விரிவுபடுத்தும் வேலையில் அரசியல் கட்சிகள் பெரும் பங்காற்ற வேண்டும். மக்களுக்கு அரசியல் தெளிவை உண்டாக்க வேண்டும். கடந்த முப்பதாண்டுகளாக அது போன்ற செயல்பாடுகள் நடக்கவே இல்லை. கட்சிகளில் பதவியைப் பிடிப்பது, தேர்தலில் வெற்றிபெறுவதே அரசியல் செயல்பாடாக மாறிவிட்டது. தவிர விதிகளை மதிப்பது கலாசாரமாக இருக்கவேண்டிய சமூகத்தில் விதிகளை மீறுவதே கலாசாரமாக மாறிவிட்டது. அதனால்தான், இது போன்ற விஷயங்கள் நடக்கின்றன. அது மாற வேண்டும்''

ஜனநாயகம் குறித்த ஆபிரஹாம் லிங்கனின் புகழ்பெற்ற வாசகமான, மக்களால், மக்களுக்காக, மக்களே என்கிற வாசகத்தில் மக்களுக்கு பதிலாக சாதி, பணம், அதிகாரம் உள்ளிட்ட விஷயங்கள் ஜனநாயகத்தைத் தீர்மானிப்பது நிச்சயமாக மக்களாட்சிக்கு உகந்த ஒரு விஷயமல்ல. போட்டியின்றி தேர்வான அனைவருமே இது போன்றுதான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இப்படித் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பது நிச்சயமாக ஏற்கத்தக்கதல்ல. இனிவரும் காலங்களிலாவது இந்த நிலை மாற வேண்டும். தேர்தல் ஜனநாயகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும்.