Published:Updated:

“இனி மின்வெட்டோ, மின்தடையோ ஏற்படாது!” - அடித்துச் சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
செந்தில் பாலாஜி

அனைவருக்கும் டிஜிட்டல் மீட்டர் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நம் திட்டப்படி ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்திவிட்டால், மின் கட்டணத்தை மொபைலிலேயே செலுத்தும் வசதி வந்துவிடும்.

“இனி மின்வெட்டோ, மின்தடையோ ஏற்படாது!” - அடித்துச் சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி

அனைவருக்கும் டிஜிட்டல் மீட்டர் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நம் திட்டப்படி ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்திவிட்டால், மின் கட்டணத்தை மொபைலிலேயே செலுத்தும் வசதி வந்துவிடும்.

Published:Updated:
செந்தில் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவிருக்கிறது. ‘சாமானிய மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறோம்’ என அரசு சொன்னாலும், ‘மக்களை வதைக்கும் முடிவு இது’ என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிப்பதோடு, போராட்டங்களையும் அறிவித்துள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான காரணம் என்ன?”

“முதல்வராகத் தளபதி பொறுப்பேற்றதும் அனைத்துத் துறைகளையும் ஆய்வுசெய்தார். அப்படி ஆய்வுசெய்தபோதுதான், மின்துறைக்கு சுமார் 1.59 லட்சம் கோடி கடனும், 16,000 கோடி அளவுக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக வழங்கப்படவேண்டிய நிலுவைத்தொகையும், 1.13 லட்சம் கோடி நிதி இழப்பும் இருக்கின்றன என்பது தெரியவந்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மொத்தமாக திவாலாகியிருந்தது மின்துறை. இந்த ஓராண்டில் வட்டி குறைத்தது முதல், மற்ற செலவினங்களைக் குறைத்து 2,500 கோடி ரூபாய் வரை சேமித்திருக்கிறோம். இந்தச் சூழலில்தான் ஒன்றிய அரசு ‘வழங்கும் மானியத்தை நிறுத்திவிடுவோம், தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ எனச் சொல்லி மின் கட்டணத்தை உயர்த்த அழுத்தம் கொடுத்தது. அதோடு மின்துறைக்குக் கடன் கொடுத்த அமைப்புகள், மேல் முறையீட்டு ஆணையம் எனப் பல்வேறு தரப்புகளிலிருந்து 28 கடிதங்கள் வந்தன. ஒழுங்குமுறை ஆணையம் இதற்கெல்லாம் மேலே சென்று ‘நீங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லையென்றால் நாங்கள் உயர்த்திவிடுவோம்’ என்று இறுதி அறிக்கை அனுப்பினார்கள். அதன் பிறகுதான் மக்களை பாதிக்காத வகையில் கட்டணத்தைத் திருத்தி அறிவித்திருக்கிறோம்.”

“இனி மின்வெட்டோ, மின்தடையோ ஏற்படாது!” - அடித்துச் சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி

“மத்திய அரசின் அழுத்தம்... கடந்தகால ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடு... என அடுத்தவர்கள்மீதே பழி போட்டுக்கொண்டிருப்பது சரியா?”

“அப்படிப் பழி போடவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. கட்டணத்தை உயர்த்தாமல் மின்துறையைச் சீர்செய்ய முதல்வர் தொடக்கத்திலேயே 9,048 கோடி ரூபாய் மானியமாகக் கொடுத்துவிட்டார். அதைவைத்து மின்துறையைச் சீர்செய்யும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். ஆனால் ஒன்றிய அரசு, ‘கொடுக்கவேண்டிய 10,000 கோடி மானியத்தைப் பெற வேண்டுமானால், மின் கட்டணத்தை உயர்த்தித்தான் ஆக வேண்டும்’ என நெருக்கடி கொடுத்தது. நேரில் மட்டுமல்ல, காணொளி மூலமாக ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோதும் எங்களிடம் ‘மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்’ என அழுத்தம் கொடுத்தார்கள். அதையடுத்துத்தான் கட்டணத்தை உயர்த்தலாம் என்ற முடிவுக்கே வந்தோம். அப்போதும் முதல்வர் ‘மக்களை பாதிக்காத வகையில் உயர்த்த வேண்டும்’ என உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 3.53 கோடி மின் நுகர்வோரில், 2.37 கோடிப் பேருக்கு ஒரு பைசாகூட மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 101 – 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் பேருக்கு 55 ரூபாய் மட்டும்தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு நாளுக்கான மின் கட்டணம் ஒரு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் வகையில்தான் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.”

“ ‘100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்பவர்கள் தாமாக முன்வந்து எழுதிக்கொடுக்கலாம்’ என்கிற அறிவிப்புக்கு எந்த அளவு வரவேற்பிருக்கும் என நினைக்கிறீர்கள்?”

“நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக்குச் செல்லும்போது, பெரும்பாலானவர்கள் சொன்னது, ‘எல்லோருக்கும் ஏன் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்... வேண்டாம் என நினைக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு அதைச் சொல்லும் வாய்ப்பைக் கொடுங்கள்’ என்பதுதான். அதனடிப்படையில்தான் அந்த அறிவிப்பையே கொண்டுவந்தோம். எனவே, நிச்சயம் இதற்கான வரவேற்பு பெரிய அளவில் இருக்கும் என நம்புகிறோம்.”

“ஆனால், இந்த நடைமுறையே மத்திய அரசைப் பார்த்து நீங்கள் செய்திருக்கும் காப்பி என்கிறார்களே?”

“ஒன்றிய அரசின் கூட்டங்களில் பங்கேற்கும்போது, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாகச் சிலவற்றைச் சொல்வார்கள். ஆனால், அந்தத் திட்டங்களை நாம் ஆறு மாதங்களுக்கு முன்பே இங்கே செயல்படுத்தியிருப்போம். சூரிய ஒளி, நீர் மூலமாகக் குறைந்த செலவில் மின் உற்பத்தி, மாவட்டம்தோறும் மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து லைன் லாஸைக் குறைப்பது எனப் பல திட்டங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். மின்துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்திய திட்டங்களைத் திருடித்தான் ஒன்றிய அரசுத் திட்டங்களைத் தயாரிக்கிறார்களே தவிர, ஒன்றிய அரசின் திட்டங்களை காப்பி அடிக்கவேண்டிய தேவை நமக்கு இல்லை.”

“இனி மின்வெட்டோ, மின்தடையோ ஏற்படாது!” - அடித்துச் சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி

“தி.மு.க-வின் மிக முக்கியமான வாக்குறுதி ‘மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் திட்டம்.’ அது எப்போது நடைமுறைக்கு வரும்?”

“அனைவருக்கும் டிஜிட்டல் மீட்டர் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நம் திட்டப்படி ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்திவிட்டால், மின் கட்டணத்தை மொபைலிலேயே செலுத்தும் வசதி வந்துவிடும். மின் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பைக் கட்டுப்பாட்டு அறைகளிலிருந்தே துண்டிக்கும் முறையும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இப்போது அவசரமாக மாதம்தோறும் முறையைக் கொண்டுவர புதிதாகப் பணியாளர்களை நியமித்தால், ஸ்மார்ட் மீட்டர்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, புதிதாக நியமித்த பணியாளர்களை நீக்கவேண்டி வரும். அதனால், தேவையில்லாத சர்ச்சை எழும். எனவே, ஸ்மார்ட் மீட்டர்களை முழுமையாகப் பொருத்திய பிறகே மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.”

“ ‘சிலரைப் பணக்காரர்கள் ஆக்கவே மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது’ என்று தமிழ்நாடு பா.ஜ.க விமர்சனம் செய்திருக்கிறதே?”

“2014-ல் 410 ரூபாயாக இருந்த காஸ் சிலிண்டரின் விலை இன்று 1,100 ரூபாய். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டிருக்கிறது. அரிசி, தேன், தயிருக்குக்கூட ஜி.எஸ்.டி விதித்திருக்கிறார்கள். இவையெல்லாம் யாரைப் பணக்காரர்களாக்க பா.ஜ.க செய்கிறது... பா.ஜ.க ஆளும் மாநிலங்களைவிட, தமிழ்நாட்டின் மின் கட்டணம் மிகக் குறைவு. அரசியல் செய்ய வேண்டும் என்றால் அதற்காக உழைக்க வேண்டும். விமர்சனம் செய்து, ஒருவரைப் பற்றிக் குறைசொல்லிக்கொண்டே ஒரு கட்சியை வளர்க்க நினைப்பது அரைவேக்காட்டுத்தனம்.”

“ ‘மின் கட்டணம் மக்கள்மீது ஏற்றப்பட்டிருக்கும் பெருஞ்சுமை’ எனச் சொல்லி எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்திருக்கிறாரே?”

“2012-ல் 37%, 2013-ல் 3.5%, 2014-ல் 16.33% எனத் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்திய அ.தி.மு.க-வுக்கு எங்களைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் மின்துறையில் செய்த குழப்பங்கள், தவறுகள், நிர்வாகச் சீர்கேடுகளை, கடன்களைச் சரிசெய்யத்தான் தொடர்ந்து நாங்கள் உழைத்துவருகிறோம்.”

“தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தற்போதும் தொடர்கதையாக இருக்கிறதே?”

“எங்கோ சில பிரச்னைகள் இருக்கலாம். அவையும் உடனடியாகச் சரிசெய்யப்படுகின்றன. மின்னகம் மூலம் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வுகாணப்படுகின்றன. நானே அதை நேரடியாகக் கண்காணிக்கிறேன். தமிழ்நாடெங்கும் பெரும்பாலான மின் கம்பங்கள் சீர்செய்யப்பட்டுவிட்டன. மின் இணைப்புப் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் அளவு உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதனால், மழைக்காலத்திலும் மின்வெட்டுப் பிரச்னை ஏற்படாது. எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு சீரமைப்புகள் மேற்கொள்ளப்படுவதால் இனி மின்வெட்டோ, தடையோ ஏற்படாது!”