குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் களம் பரபரத்துக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதில் தீவிரம் காட்டிவருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு கடந்த வெள்ளியன்று வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிலையில் திரௌபதி முர்முவின் போட்டி குறித்து யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்திருக்கிறார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த யஷ்வந்த் சின்ஹா, ``ஒட்டுமொத்த சமூகத்தின் உயர்வு என்பது அரசாங்கம் பின்பற்றும் அதன் கொள்கைகளைப் பொறுத்தது. தவிர, ஒரு சமூகத்தில் தனிமனிதனின் உயர்வு, அந்தச் சமூகத்தை ஒரு அங்குலம்கூட உயர்த்த உதவவில்லை என்பதற்கு நமது வரலாற்றில் பல்வேறு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. எனவே இது வெறும் அரசியல் குறியீடுதானே தவிர இதில் வேறொன்றுமில்லை. நம் நாட்டின் அரசியல், இன்று பல்வேறு பலவீனங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் வீதிக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். எனவே இந்தத் தேர்தல் வெறும் இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைவிடவும் மேலானது. மேலும் அரசின் யதேச்சதிகாரக் கொள்கைகளை எதிர்ப்பதற்கான ஒருபடிதான் இந்தத் தேர்தல்" எனத் தெரிவித்தார்.
