
2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பல மாநிலங்களில் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்படுகின்றன.
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு அடுத்தபடியாக, தெலங்கானா முதல்வரின் மகள் கே.கவிதாவை அமலாக்கத்துறை துரத்திவருகிறது. இந்த நேரத்தில், பல்வேறு கட்சிகளிலிருந்து பா.ஜ.க-வுக்குத் தாவியவர்கள் மீதான ஊழல் வழக்குகள் மட்டும் ஏன் விசாரிக்கப்படுவதே இல்லை என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிவருகின்றன!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சி.பி.ஐ-யால் கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை, அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது. இதே வழக்கில், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் குற்றம்சாட்டப்பட்டு, அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டுவருகிறார். தெலங்கானா சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருக்கும் அவரிடம், கடந்த மார்ச் 11-ம் தேதியன்று ஒன்பது மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருக்கிறது.

வாஷிங் பவுடரும் பா.ஜ.க-வும்..!
இந்த நிலையில், மார்ச் 12-ம் தேதி தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற சி.எஸ்.ஐ.எஃப் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அவரை ‘வரவேற்று’ ஹைதராபாத் முழுவதும் வித்தியாசமான விளம்பரப் பதாகைகளை பி.ஆர்.எஸ் கட்சியினர் வைத்திருந்தனர். அதில், ‘வாஷிங் பவுடர் நிர்மா’ என்ற விளம்பரத்தில் வரும் சிறுமியின் படத்துடன்- ‘வெல்கம் டு அமித் ஷா’ என்று வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
அந்தச் சிறுமியின் முகத்தில், ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, சுவேந்து அதிகாரி, நாராயண் ராணே, ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்ட பா.ஜ.க-வுக்குத் தாவிய பலரின் முகங்கள் இருந்தன. முன்பு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இவர்கள், பா.ஜ.க-வில் இணைந்த பிறகு அவர்கள்மீதான ஊழல் கறை நீங்கிவிட்டது(?) என்று கேலியாக அந்தப் பதாகைகள் சித்திரிக்கப் பட்டிருந்தன. இன்னொரு சுவரொட்டியில், மகாராஷ்டிரா - நாராயண் ராணே, மேற்கு வங்கம் - சுவேந்து அதிகாரி ஆகியோர் ‘ரெய்டு’க்குப் பிறகு பா.ஜ.க-வில் இணைந்து காவி நிறத்துக்கு மாறிவிட்டனர் என்றும், கவிதா அப்படி ‘நிறம் மாற மாட்டார்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

நிறம் மாறிய அரசியல்வாதிகள்!
2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பல மாநிலங்களில் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்படுகின்றன. சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் அதிரடி சோதனைகளும் விசாரணைகளும் தொடர்கின்றன. இதன் மூலம் நெருக்கடி கொடுத்து, அச்சுறுத்தி, பல எதிர்க்கட்சித் தலைவர்களை பா.ஜ.க தன்வசமாக்குகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தற்போது, மத்தியில் சிறு, குறு தொழில் அமைச்சராக இருப்பவர், நாராயண் ராணே. இவர், சிவசேனாவின் முக்கியத் தலைவராக இருந்து, பின்னர் காங்கிரஸில் சேர்ந்து மகாராஷ்டிராவின் முதல்வரானார். அவர், ரூ.300 கோடி ஊழல் செய்தார் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்த நாராயண் ராணே இரண்டே ஆண்டுகளில், மத்திய அமைச்சராகிவிட்டார். அவர்மீதான ஊழல் வழக்கு அதன் பிறகு விசாரிக்கப்படவில்லை.
இதேபோல, மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் சுவேந்து அதிகாரி. இவர் முன்பு மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்தவர். நாரதா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான இவர், 2020-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். நாரதா ஊழல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸின் இரு அமைச்சர்களும், ஒரு எம்.எல்.ஏ-வும் சி.பி.ஐ-யால் கைதுசெய்யப்பட்ட போது, சுவேந்து அதிகாரிமீது எந்த நடவடிக்கையும் இல்லை.

விசாரிக்கப்படாத முதல்வர்!
அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா. இவர், தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 15 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். இவர், சாரதா சிட்ஃபண்ட் ஊழல், லூயிஸ் பெர்கர் ஊழல் ஆகியவற்றில் சிக்கியபோது, சி.பி.ஐ இவரை விசாரித்தது. பிறகு, 2015-ல் ஹிமந்த பிஸ்வாஸ் பா.ஜ.க-வில் சேர்ந்து அஸ்ஸாம் முதல்வரானார். இவர்மீதான ஊழல் வழக்குகள் குறித்து எந்த விசாரணையும் இல்லை.

ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பா.ஜ.க-வில் இணைந்த பிறகு, பா.ஜ.க-வின் தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா 2016-ம் ஆண்டு கௌஹாத்திக்கு வந்திருந்தார். அவரிடம், ‘பிஸ்வாஸ் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதால், அவர் நிரபராதி என்று பா.ஜ.க கூறுகிறதா?’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘அனைத்து ஊழல் வழக்குகளும் விசாரிக்கப்படும். விசாரிக்கப்படாமல் நான் எப்படி நிரபராதி என்று சொல்ல முடியும்?” என்றார் அமித் ஷா.
தற்போது, மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவின் கையில்தான் சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா மீதான ஊழல் வழக்குகள் குறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை. மாறாக, மணீஷ் சிசோடியா, லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, கவிதா என எதிர்க்கட்சித் தலைவர்களின்மீதுதான் அமலாக்கத் துறையும், சி.பி.ஐ-யும் பாய்ந்துகொண்டிருக்கின்றன. இது அப்பட்டமான மிரட்டல் அல்லாமல் வேறென்ன?!