அலசல்
Published:Updated:

குறிவைத்த அமலாக்கத்துறை... கைதாகிறாரா ஜார்க்கண்ட் முதல்வர்?

ஹேமந்த் சோரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேமந்த் சோரன்

பங்கஜ் மிஸ்ரா அளித்த பதில்களும், சோரன் அளித்த பதில்களும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாகவும், அதனால் மீண்டும் சோரனை விசாரணை செய்யப்போவதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தேர்தல் நடக்கும் குஜராத்தைவிட, பரபரத்துக்கிடக்கிறது ஜார்க்கண்ட் அரசியல் களம். மாநில முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியிருப்பதே காரணம். இதனால், ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்கும் இடையிலான மோதல் உச்சம் தொட்டிருக்கிறது!

2019-ல் ஜார்க்கண்டின் முதலமைச்சரான ஹேமந்த் சோரன், நிலக்கரித்துறையைத் தன்வசம் வைத்துக்கொண்டார். அவர் தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நிலக்கரிச் சுரங்கங்களைத் தானே குத்தகைக்கு எடுத்துக்கொண்டார் எனக் குற்றம்சாட்டியது பா.ஜ.க. இதை விசாரித்த தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரனைத் தகுதிநீக்கம் செய்யுமாறு ஆளுநருக்குப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்பட்டது.

குறிவைத்த அமலாக்கத்துறை... கைதாகிறாரா ஜார்க்கண்ட் முதல்வர்?

இந்த நிலையில், ஹேமந்த் சோரனின் நெருங்கிய கூட்டாளியான பங்கஜ் மிஸ்ராவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ரூ.1,000 கோடி வரை நிலக்கரிச் சுரங்க ஊழலில் மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகித்தது. மிஸ்ரா வீட்டிலிருந்து ஹேமந்த் சோரனின் பாஸ்புக், காசோலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. நவம்பர் 5-ம் தேதி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சோரனுக்கு நோட்டீஸ் அனுப்ப, அதைச் சற்றும் கண்டுகொள்ளாத சோரன், சத்தீஸ்கரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதையடுத்து, நவம்பர் 18-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சோரன், ``நான் ஒரு முதல்வர். ஆனால், எனக்குச் சம்மன் அனுப்பியிருக்கும் விதத்தைப் பார்க்கும்போது நான் நாட்டைவிட்டுத் தப்பி ஓடிவிடுவேன் என்று எண்ணி அனுப்பியதுபோல இருக்கிறது. தொழிலதிபர்கள் ஓடிப்போவார்களே தவிர அரசியல்வாதிகள் யாரும் ஓடிப்போனதாகத் தெரியவில்லை. எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க மறைமுகமாக நடந்துவந்த சதி, தற்போது வெளிப்படையாகவே தெரிகிறது’’ என்றார்.

அன்று காலை 11:50 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் சென்ற ஹேமந்த் சோரன், இரவு 9:40 மணிக்குத்தான் வெளியே வந்தார். அவர் உள்ளே சென்றதிலிருந்து வெளியே வரும் வரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அந்த அலுவலகத்தைச் சூழ்ந்து, பா.ஜ.க., அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தங்களது கட்சிச் சின்னமான வில், அம்பை வைத்திருந் ததாலும், மாநில காவல்துறையினர் அவர்களைக் கட்டுப் படுத்தாததாலும் அந்த இடமே பதற்றமாகக் காணப்பட்டது. விசாரணைக்குப் பிறகு கட்சி நிர்வாகிகளிடம் பேசிய சோரன், ``அமலாக்கத் துறையை பா.ஜ.க ஆளாத மாநில அரசுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். அனைத்து பா.ஜ.க அரசுகளும் சுத்தமானவையா... இந்த மண்ணின் மைந்தர்களும் பழங்குடிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பா.ஜ.க-வின் சதி வேலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றிருக்கிறார்.

பங்கஜ் மிஸ்ரா
பங்கஜ் மிஸ்ரா

ஜார்க்கண்ட் அரசியல் நோக்கர்கள், ``பங்கஜ் மிஸ்ரா அளித்த பதில்களும், சோரன் அளித்த பதில்களும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாகவும், அதனால் மீண்டும் சோரனை விசாரணை செய்யப்போவதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ராஞ்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கோபத்துடன் கோஷங்கள் எழுப்பியதால், அடுத்த முறை சோரனை டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்த வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது’’ என்கின்றனர். மேலும், ``ஒருவேளை ஹேமந்த் சோரன் தகுதிநீக்கம் செய்யப்பட்டாலோ, கைதுசெய்யப்பட்டாலோ அடுத்த முதலமைச்சராக யார் இருக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனையை இப்போதே அவரது கட்சியினர் தொடங்கிவிட்டனர். சோரனின் மனைவி கல்பனா சோரன் முதலமைச்சராக்கப்பட வாய்ப்புகள் அதிகம்’’ என்கிறார்கள்.