Published:Updated:

அமலாக்கத்துறை விசாரணை வளையம்... அடுத்தடுத்து சிக்கப்போகும் அமைச்சர்கள்?

அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர்கள்

தமிழ்நாட்டில் வலுவாகக் காலூன்ற முயன்றுகொண்டிருக்கும் பா.ஜ.க., விசாரணை அமைப்புகளைக்கொண்டு தி.மு.க-வுக்குக் குறிவைக்க வாய்ப்பிருக்கிறது.

அமலாக்கத்துறை விசாரணை வளையம்... அடுத்தடுத்து சிக்கப்போகும் அமைச்சர்கள்?

தமிழ்நாட்டில் வலுவாகக் காலூன்ற முயன்றுகொண்டிருக்கும் பா.ஜ.க., விசாரணை அமைப்புகளைக்கொண்டு தி.மு.க-வுக்குக் குறிவைக்க வாய்ப்பிருக்கிறது.

Published:Updated:
அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர்கள்

தமிழ்நாடு உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி ஜாபர்சேட்டுக்கு 2006-11 தி.மு.க ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதி வாரியம் மூலம் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக, அமலாக்கத்துறை 2011-ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜூலை 27-ம் தேதி சென்னையில் அப்போதைய வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சரும், தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. ‘இவ்வளவு நாள் உறங்கிக்கொண்டிருந்த வழக்கை, திடீரென அமலாக்கத்துறை கையிலெடுத்து விசாரித்தது ஏன்... அடுத்தடுத்து அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் சிக்கப்போகும் அமைச்சர்கள் யார் யார்?’ விசாரணையில் இறங்கினோம்...

ஜாபர் சேட், உளவுத்துறை ஐ.ஜி-யாக இருந்த போது திருவான்மியூர் புறநகர்ப் பகுதியில் சமூக சேவகர்களுக்கான பிரிவில் இவருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் -தான் அமைச்சர் ஐ.பெரியசாமியையும் விசாரணை செய்திருக்கிறது அமலாக்கத்துறை. ஜூலை 20-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக ஜூலை 27-ல் ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி. அப்போது, ‘என்ன முகாந்திரத்தில் அரசு அதிகாரி ஒருவருக்கு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலம் ஒதுக்கப்பட்டது?’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டிருக்கின்றன. விசாரணை தொடர்கிறது.

ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, கீதா ஜீவன், கே.என்.நேரு
ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, கீதா ஜீவன், கே.என்.நேரு

“ஐ.பெரியசாமியோடு முடியப்போவதில்லை. அமலாக்கத்துறை விசாரணையில் அடுத்தடுத்து வேறு சில அமைச்சர்களும் சிக்குவார்கள்” என்கிறார்கள் அமலாக்கத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள். “2002-06-ம் ஆண்டில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை 2006-ல் வழக்கு பதிவுசெய்தது. அதில், சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, 2022, பிப்ரவரி மாதம் அனிதா ராதாகிருஷ்ணன், அவருடைய குடும்பத்தினருக்குச் சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கை ரத்துசெய்யக் கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் அமலாக்கத்துறை விரைவில் அனிதா ராதாகிருஷ்ணனை நெருங்கும்.

அதேபோல, தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி இவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகச் சொல்லி கடந்த செப்டம்பர் மாதமே கடிதமும் அனுப்பப் பட்டிருக்கிறது. ஆனால், பல்வேறு காரணங்களைச் சொல்லி விசாரணையில் ஆஜராவதற்குக் கால அவகாசம் கேட்டுவருகிறார் செந்தில் பாலாஜி. விரைவில் விசாரணைக்கு நெருக்க வாய்ப்பிருக் கிறது. மற்றொரு பக்கம், சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதா ஜீவனுக்கு எதிராகவும் அமலாக்கத்துறை காய்நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010-க்குப் பிறகு, இவரின் சொத்து மதிப்பு உயர்ந்ததாக அ.தி.மு.க ஆட்சியிலேயே இரண்டு முறை சொத்துக்குவிப்புப் புகார்கள் வைக்கப்பட்டன. கீதா ஜீவன் மட்டுமின்றி அவருடைய கணவர் ஜீவன், தந்தை என்.பெரியசாமி, தாயார் எபனேசர், சகோதரர் கள் என்.பி.ராஜா, என்.பி.ஜெகன் ஆகியோர் மீதும் சொத்துக்குவிப்பு புகார்கள் வைக்கப் பட்டுள்ளன. இந்தப் புகாரில், கீதா ஜீவனையும் அமலாக்கத்துறை விரைவில் விசாரணை செய்யவிருக்கிறது.

இவர்கள் மட்டுமல்லாமல், தி.மு.க-வின் சீனியர் அமைச்சர் கே.என்.நேருவிடமும் விரைவில் அமலாக்கத்துறை விசாரணை செய்யும். 2006-11 ஆட்சிக்காலத்தில், கே.என்.நேரு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து ஏற்கெனவே கே.என்.நேரு விடுவிக்கப்பட்டு விட்டாலும், விசாரணையை மீண்டும் நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை, உச்ச நீதி மன்றம் வரை சென்றிருக்கிறது. எனவே, விரைவில் நேருவுக்கு எதிராகச் சொத்துக்குவிப்பு வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுக்கவிருக்கிறது” என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தில்.

நம்மிடம் பேசிய தி.மு.க-வின் சீனியர் அமைச்சர் ஒருவர் “தமிழ்நாட்டில் வலுவாகக் காலூன்ற முயன்றுகொண்டிருக்கும் பா.ஜ.க., விசாரணை அமைப்புகளைக்கொண்டு தி.மு.க-வுக்குக் குறிவைக்க வாய்ப்பிருக்கிறது. அதன் தொடக்கமாகவே ஐ.பெரியசாமியின் மீதான விசாரணை அமைந்திருக்கிறது. அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.

அமலாக்கத்துறை விசாரணைகள் அவசியம்... அதில் அரசியல் கலப்பு இல்லாமலிருப்பது அதைவிட அவசியம்!