Published:Updated:

``அரசியலுக்கு நான் பிழைக்க வரல. உழைக்க வந்திருக்கேன் - விஜயகாந்த்

விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
விஜயகாந்த் ( Vikatan Archives )

தே.மு.தி.க. உதயமானபோது... கேப்டன் மாஸ் காட்டிருக்கார்!

``அரசியலுக்கு நான் பிழைக்க வரல. உழைக்க வந்திருக்கேன் - விஜயகாந்த்

தே.மு.தி.க. உதயமானபோது... கேப்டன் மாஸ் காட்டிருக்கார்!

Published:Updated:
விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
விஜயகாந்த் ( Vikatan Archives )

நினைத்ததை நடத்திக் காட்டிவிட்டார் விஜயகாந்த். சேட்டிலைட் சேனல்கள் முதல் எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ் வரை இப்போது விஜயகாந்த் பற்றியே அத்தனை பரபரப்பும்!

`தேசிய முற்போக்கு திராவிட கழகம்' எனப் புதிய கட்சியின் முதல் மாநாடு மதுரையைக் குலுக்கியதுடன், அத்தனை அரசியல் தலைவர்களையும் லேசாக உலுக்கி இருப்பது உண்மை.

கடந்த ஞாயிறு அன்று விஜயகாந்த், சென்னை திரும்பிய போது, கழகங்களுக்குச் சவால்விடும் அளவுக்கு விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த்தின் வீடு வரைக்கும் பிரமாண்ட போஸ்டர்கள், கட் அவுட்கள்.

விஜயகாந்த்
விஜயகாந்த்
Vikatan Archives

விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்களை (தொண்டர்களை)க் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை ரொம்பவே திணறியது. திறந்த வெளி வேனில் வெற்றி ஊர்வலம் போல வந்தார் விஜயகாந்த். வீட்டிலும் பெருங் கும்பல். கதவு திறந்து உள்ளே விஜயகாந்த் நுழைய அடுத்த நொடியே அவசரமாகப் பூட்டப்பட்டது. "ஏம்பா கதவை மூடறீங்க... ஆர்வமா காத்திருக்காங்க, எல்லோரையும் உள்ளேவிடுங்கப்பா" என விஜயகாந்த் உத்தரவு போட்டார்.

தொண்டர்கள் பார்க்க வசதியாக, வீட்டு பால்கனி மீது விஜயகாந்தை ஏறும்படி ஒருவர் ஆலோசனை சொல்ல, "மக்கள்கிட்ட இறங்கிப் போகணும்னு வந்துட்டு, பால்கனியில் ஏறச் சொன்னா என்ன அர்த்தம்?" என ஒவ்வொரு தொண்டரின் கைகளைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டு, வியர்வை வெள்ளமும் வெற்றிப் பெருமிதமுமாக வீட்டில், செட்டிலானார் விஜயகாந்த்.

"வர்ற எலெக்ஷன்ல பத்து பதினஞ்சு தொகுதிகள்ல நம்ம தம்பிங்களை நிறுத்தி, சட்டசபைக்குள் நுழைவோம். படிப்படியா எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நினைச்சேன். ஆனா, மதுரை மாநாடு என் மனசை மாத்திருச்சு. திருநகர்ல கூடுன கூட்டமும், ஜனங்க எம்மேல காட்டுன அன்பும் ரொம்ப என்னைப் பாதிச்சது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்னை ஒரு அண்ணனா, தம்பியா, பிள்ளையா ஏத்துக்கிட்டு எனக்காக வந்து நிக்குற ஜனங்க, தமிழக அரசியல்ல ஒரு மாற்றத்தை விரும்புறாங்கன்னு புரியுது. காலம் என் மனசுல புதுக் கணக்கு போட்டு இருக்கு" என்று குடும்பத்தினரிடம் நெகிழ்ந்திருக்கிறார் தே.மு.தி.க-வின் தலைவர் விஜயகாந்த்.

வழக்கமாக அரசியல் கட்சிகள், விடுமுறை நாட்களில்தான் பெரிய மாநாடுகளையோ, கூட்டங்களையோ கூட்டுவார்கள். ஆனால், விஜயகாந்த் வித்தியாசமாக வேலை நாளான புதன் கிழமையைத் தேர்ந்தெடுத்தார். அதுவும் அதிகாலை 7.16 மணிக்கு ஷார்ப்பாகத் துவங்கியது மாநாடு. அப்போதே நல்ல கூட்டம். நேரம் செல்லச் செல்ல, அந்தத் திருநகரே திணறிப்போகும் அளவு மக்கள் வெள்ளம். மொத்த கூட்டமும் இரவுவரை கட்டுக்கோப்பாக விஜயகாந்த்தின் விரல் அசைவுக்குக் கட்டுப்பட்டு இருந்தது - பெரிய ஆச்சர்யம்.

மாநாட்டுக்கு வருகிற தொண்டர்கள், அப்படியே நகரத்தை வேடிக்கை பார்க்கவோ, வீட்டுக்கு பொருட்கள் வாங்கவோ என ஒரு பிக்னிக் ஃபீலிங்கோடுதான் வருவார்கள். விஜயகாந்தின் மாநாடு நடந்த இடம் மதுரைக்கு அடுத்த ஒரு கிராமம். மாநாட்டுத் திடலுக்கு வந்து சேர்ந்த தொண்டர்கள், அப்படியே இரவு வரை உற்சாகமாக அமர்ந்திருந்தார்கள். அத்தனை பெரிய கூட்டத்தைச் சமாளிக்கும் அளவு போலீஸ் இல்லாதபோதும் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை.

தன் அரசியல் அவதாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்ட விஜயகாந்த், அடுத்து கட்சியைப் பதிவு செய்வது, கட்சி நிர்வாகிகளை முடிவு செய்து அறிவிப்பது, கட்சி அலுவலகம் திறப்பது என பரபரப்பாக இருக்கிறார். கட்சியை முறைப்படி டெல்லியில் பதிவு செய்வதற்கான தயாரிப்பு வேலைகளில் கேப்டன் பிஸி. இந்திய தேர்தல் கமிஷன் லேட்டஸ்டாக அரசியல் கட்சிகளுக்கு போட்ட உத்தரவுகள் என்னென்ன என ஒரு குழுவே புள்ளிவிவரங்களைத் திரட்டிக்கொண்டு இருக்கிறது.

விஜயகாந்த்
விஜயகாந்த்
Vikatan Archives

இன்னொரு செய்தி... பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த்தின் வீடு தேடிப் போய் சால்வை அணிவித்து, தன்னை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் இணைத்துக்கொண்டு இருக்கிறார். எம். ஜி.ஆருக்கு மூளையாக இருந்தவர் என வர்ணிக்கப்பட்ட பண்ருட்டியார். இப்போது விஜயகாந்த்துடன் கைகோத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

"ஏழை எளிய மக்கள், இன்று முழுக்க முழுக்க கேப்டன் விஜயகாந்த்தை நம்பியிருக்கிறார்கள். ஆகவே அவருடன் சேர்ந்து மக்களுக்குப் பணி செய்ய விரும்புகிறேன்" என்கிறார் பண்ருட்டியார்.

அரசியலில் எதிரி யார், நண்பர் யார் என்று சொன்னால்தானே புதிய கட்சியின் நோக்கம் மக்களுக்குப் புரியும். ஆனால் விஜயகாந்தோ பொத்தாம் பொதுவாக அரசியல் செய்ய நினைக்கிறாரே? இது பலன் தருமா? என்று கேட்டோம்.

"அரசியலானாலும் அரசாங்கமானாலும் பணமில்லாதவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. ஏழைகள் என்றாலே வெறும் ஓட்டுப் போடுகிற இயந்திரம் என்ற நிலையும் இருக்கிறது. இதை மாற்றி அவர்களாலும் ஒரு பொறுப்புக்கு வர முடியும் என்ற சூழலை விஜயகாந்த்தின் வருகை உறுதி செய்திருக்கிறது. இங்கே பணநாயகத்துக்கும் ஜனநாயகத்துக்கும் கடும் போர் நடைபெற்று வருகிறது. இதில் எங்கள் எதிரிகள் குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்கள் அல்ல. எங்கெங்கும் ஊடுருவி இருக்கும் பணநாயகமே எங்களுக்கு எதிரி. ஊழலையும் ஜாதியையும் எதிர்த்து போராடுவோம். இந்த புரட்சிகளை கொண்டுவர ஒரு புதிய அரசியல் தமிழ்நாட்டில் தேவைப்படுகிற நேரமிது. அந்த நேரம் மதுரையில் கடந்த 14-ம் தேதியே வந்துவிட்டது.

"நீங்கள் கட்சியில் இணைந்தபோது விஜயகாந்த் உங்களிடம் என்ன பேசினார்?

"என் அரசியல் பின்புலத்தை நன்கு அறிந்தவர்தான் விஜயகாந்த். அவர் தனக்கென வகுத்துள்ள புதிய பாதையில் பயணிக்க ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார். நாடே கவனிக்கிற அவரிடம் இன்னமும் எளிமையும், யதார்த்தமும் குடிகொண்டு இருக்கிறது. இது பக்குவமான அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உள்ள குணம். நான் கற்ற கல்வியையும், பெற்ற அனுபவத்தையும் முழுவதும் புதிய இயக்கத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுதான் என் ஆசையும் விருப்பமும் கூட!" என்று புதிய தலைவரைப் புகழ்கிறார் அரசியல் சாணக்கியர் என பெயரெடுத்த பண்ருட்டியார்.

விஜயகாந்த்துக்கு மதுரையில் எப்போதுமே ஒரு நண்பர்கள் கூட்டம் உண்டு. இந்த வட்டாரம்தான் மதுரை மாநாட்டு வேலைகளுக்கு விஜயகாந்த்துக்கு உறுதுணையாக இருந்தது.

"மாநாடு அன்று மதியம் ஒரு மணி இருக்கும், வெளியே சும்மா போய் கூட்டம் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வருவோம். அப்படியே ரூமுக்கு போய் குளிச்சுட்டு வந்து என்னோட ஏற்புரையைப் பேசறேன்"னார் விஜயகாந்த்.

விஜயகாந்த்
விஜயகாந்த்
Vikatan Archives

விஜயகாந்த்தின் கார் மாநாட்டு மைதானத்தை தாண்டி திருமங்கலம் சாலையில் திரும்ப முடியவில்லை. அவ்வளவு கூட்டம். உடனே காரை பக்கத்தில் இருக்கும் தோப்புக்கு விடச் சொன்னார். ஆள் அரவமற்ற ஒரு தோப்பில் வண்டி நின்னுச்சு. விஜயகாந்த் முகம் கலங்கி இருந்துச்சு. `என்னை நம்பி இம்புட்டுப் பேர் வந்துட்டாங்களேப்பா. சாயந்திரம் என்ன பேசறதுன்னு கொஞ்சம் தயார் செய்ய நினைச்சேன். இப்போ அது தேவையில்லை. மேடையில என்ன வருதோ அதான் என் பேச்சு'ன்னு கிளம்பிட்டார். அன்னிக்கு அவர் பேசின அத்தனையும் அப்படியே அவர் மனசு. வாழ்க்கைன்னா வசதியா வாழ்றது மட்டும்தானா? இந்த மக்களுக்காக விஜயகாந்த் வாழ்ந்தான்னு இருக்கட்டும். இல்லை, அவங்களுக்காக அவன் செத்தான்னு இருக்கட்டும். மனுஷ வாழ்க்கை கடைசியில ஆறுக்கு மூணுதான். எனக்கு ரெண்டு ஆம்பளைப் பசங்க. அவங்க எப்படியும் பொழச்சுக்குவாங்க. எனக்காக எம்புட்டுத் துாரம் வந்து உட்கார்ந்திருக்கீங்களே... உங்களுக்காக நான்தான். இனி எனக்காக நீங்கதான்.

ரைஸ் மில்லுல தினம் 300 மூட்டை தூக்கிப் பழக்கப்பட்ட உடம்பு. என்னை நம்பி வந்த உங்களுக்கு நல்லது செய்வேன்... நல்லது செய்வேன்... நல்லது செய்வேன்'னு அவர் பேசினது ஒண்ணு போதும்" என்கிறார்கள் மதுரை நண்பர்கள்.சுற்றமும் நட்பும் சொல்வது இருக்கட்டும். அரசியல் புது மாப்பிள்ளை விஜயகாந்த் என்ன நினைக்கிறார். அவரிடமே கேட்டோம்.

"எத்தனையோ அரசியல் கூட்டங்களுக்கு ஒரு தொண்டனா நான் போயிருக்கேன். இன்னிக்கு என்னை நம்பி லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்துட்டாங்க. அரசியலுக்கு நான் பிழைக்க வரலைங்க. உழைக்க வந்திருக்கேன்"

பூரிப்போடு சொல்கிற விஜயகாந்த்திடம் பளிச்சிடுகிறது, புதிய நம்பிக்கை!

- எஸ்.சரவணகுமார், மை.பா.நாராயணன்

படங்கள்: சு.குமரேசன்

(02.10.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)